தனிமையின் காத்திக் உணர்வு - சித்தாரா 1984 தெலுங்கு
ஒரு திரைக்கதையை வெறும் காகிதத்திலிருக்கும் எழுத்துக்களாக மட்டும் பார்க்காமல், அதை மனித வாழ்வியலின் பிரதிபலிப்பாகப் பார்க்க உதவுபவன் ஒரு நல்ல படைப்பாளி. இந்திய தெலுங்கு சினிமாவின் முக்கியமான இயக்குனர் வம்சி. முதலில் இந்த கதையை ஒரு நாவலாக எழுதி பின்னர் அவரே இயக்கி திரைப்படமாக எடுத்து ஏகப்பட்ட பாராட்டுக்களை இந்த படத்துக்காக வாங்கிக்கட்டிக்கொண்டார். கமர்ஷியலாகவும் பேய்மழை.
இளையராஜா இசை. கோதாவரி நதிக்கரையோரம் நடக்கும் கதை. அடிக்கடி "வென்னெல்லோ கோதாரி அந்தம்" பாடலை கேட்பதுண்டு. இதன் தமிழ் பதிப்பை விட தெலுங்கில் கேட்பது எனக்கு பிடிக்கும். அட்டகாசமான பாடல். படமும் சிறப்பாக இருக்கும். எஸ். ஜானகியின் குரல் மேஜிக் செய்திருக்கும் பாட்டு. படம் எடிட்டிங் செய்யப்பட்டு முதல் பிரதி தயாரான போது, அதன் நீளம் மிக அதிகமாக இருந்திருக்கிறது. தயாரிப்பாளர் நாகேஸ்வர ராவ் கவலைப்பட்டாலும், படத்தை பார்த்த திரையுலக விநியோகஸ்தர்கள் சிலர், "எடிட்டிங் மோசம்! படம் மிக மெதுவாக நகர்கிறது, ஓடாது" என்று கூறிவிட்டார்கள். வந்தார் இளையராஜா. படத்தின் எடிட்டிங் மீது கைவைக்காமல், படத்தொகுப்பின் தாளத்திற்கு இணங்க தனது பின்னணி இசையின் வேகத்தை அதிகரித்திருக்கிறார். காட்சியின் சுவாரசியத்தை இசையிலேயே கூட்டி, ஒவ்வொரு காட்சியையும் தொய்வில்லாமல் நகர்த்தி படத்தை முடித்துக்கொடுக்க படமும் வெளியானது. மிகப்பெரிய ஹிட்டானது சித்தாரா.
இசையமைப்பின் போது கதையினாலும், பாடல்களினாலும் ஈர்க்கப்பட்ட இளையராஜா, "இதை உடனடியாகத் தமிழில் ரீமேக் செய்வோம், நான் உதவுகிறேன்" என்று வம்சியிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், வம்சி "இந்தக் கதை கோதாவரி ஆற்றங்கரை மற்றும் ஆந்திரா ஜமீன் பின்னணிக்கு மட்டுமே செட் ஆகும், தமிழ் கலாச்சாரத்திற்கு இதை மாற்றினால் அதன் ஆன்மா போய்விடும்" எனக் கூறி இளையராஜாவின் கோரிக்கையை நிராகரித்தார். அசாத்தியமான இதன் கதைக் களத்தை வியந்த நடிகை ஸ்ரீதேவி, படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விரும்பினார். வம்சிதான் அதை இயக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால், வம்சி "தனித்துவமான பிராந்தியக் கதையை பாலிவுட் மசாலா படமாக மாற்ற விருப்பமில்லை" என்று சொல்லி, ஸ்ரீதேவியின் வாய்ப்பையும் நாகரீகமாக மறுத்திருக்கிறார்.
பானுப்ரியாவின் முதல் திரைப்படம். இந்த படத்திற்காக ஒரு புதிய முகத்தை தேடிக்கொண்டிருந்த போது, மங்கா பாமா என்ற பெண் ஆடும் நடன நிகழ்ச்சியை காண சென்றிருக்கும் பொழுது திடுக்கிட்டு , "சித்தாரா படத்திற்காக நான் தேடிய அதே மர்மமான கண்களை போலவே இருக்கிறதே?" அந்த நடனக்காரியின் கண்கள் கச்சிதமாக பொருந்த, அந்த மங்கையிடம் உடனே பேசி படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள வைத்திருக்கிறார் வம்சி.
சிவாஜி - சௌகார் ஜானகியின் 'புதிய பறவை' எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம். ஐந்து வயதில் தூர்தர்ஷனினில் அந்த படத்தை பார்த்து மிரண்டிருக்கிறேன். அந்த காலத்தில் தான் ஞாயிறு சாயுங்காலம் ஒரு படத்தை தொலைக்காட்சி ஒளிபரப்பிவிட்டால் அதை ஊரே பார்த்துவிடுமே. மறுநாள் பள்ளியில் நண்பர்களுடன் புதிய பறவை பற்றிய பேச்சு தான் நாள் முழுக்க ஓடியது. ஒரே மாதிரி முகம் கொண்ட ஏழு பேர் உலகத்தில் இருப்பார்கள் என்ற புரளிகள் எல்லாம் பேசி, ரயில்வே தண்டவாளம், புனர்ஜென்மம், ரங்கூன் என்று எனது ஆரம்பகால மர்மக்கதை கதையாடல்களை கட்டவிழ்த்துவிட்ட நுழைவாயில் புதிய பறவை. அப்படிப்பட்ட படங்கள் நிறைய பார்க்க எனக்கு தெரியாமலே எனது மனம் தேடிக்கொண்டிருந்தது. அப்போது ஒரு நாள் பார்த்த திரைப்படம் தான் சித்தாரா. மர்மம் நிறைந்த ஒரு பெண்ணின் கடந்த காலத்தை பற்றிய கதை.
புகைப்படக் கலைஞனான தேவதாஸ், ஒரு கிராமத்திற்குப் புகைப்படம் எடுக்கச் செல்கிறான். அங்கு தற்கொலைக்கு முயலும் சித்தாரா என்ற பெண்ணைக் காப்பாற்றுகிறான். அவளுக்குத் நடனத் திறமை இருப்பதை அறிந்து, அவளைத் தன் ஊருக்கு அழைத்து வந்து பெரிய சினிமா நட்சத்திரமாக மாற்றுகிறான். அவள் 'சந்தியா' என்ற பெயரில் புகழின் உச்சிக்குச் செல்கிறாள். திடீரென்று, அவள் ஏன் தற்கொலைக்கு முயன்றாள் என்பதை அறிய தேவதாஸ் அவளது கிராமத்திற்கு செல்கிறான்? அங்கே ஒரு மர்மத்தை கட்டவிழ்க்கிறான். அது என்ன மர்மம் ? என்பதே கதை.
இயக்குநர் வம்சி, ஆந்திராவின் புகழ்பெற்ற வார இதழான 'ஜோதி'யில் 'மஹல்லோ கோகிலா' என்ற பெயரில் ஒரு தொடர்கதை எழுதினார். மஹல்லோ கோகிலா என்றால் அரண்மனை குயில் என்று அர்த்தம். அந்த தொடர் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறவும், அவரே அதை சற்று மாற்றி 'சித்தாரா' என்ற பெயரில் திரைக்கதையாக்கினார். 1980களில் அழிந்து கொண்டிருந்த ஜமீன்தாரி முறையின் கடைசி எச்சங்களையும், கோதாவரி மக்களின் வாழ்வியலையும், அங்குள்ள மூடநம்பிக்கைகளையும் மிகத் துல்லியமாகப் பதிவு செய்த ஒரு வரலாற்றுப் பதிவு இந்த திரைப்படம்.
வம்சியின் முதல் படமான 'மஞ்சு பல்லாகி' தோல்வியடைந்தது. சுகாசினி நடித்த பாலைவனச்சோலையின் ரீமேக். முதல் படத்தோல்வியால் தயாரிப்பாளர்கள் வம்சியை நம்பத் தயங்கினர். ஆனால், தயாரிப்பாளர் எடிடா நாகேஸ்வர ராவ் வம்சியை நம்பி, இளையராஜாவை உள்ளே கொண்டு வந்தார். இளையராஜா கதையைக் கேட்டு மிரண்டு போய், வம்சிக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். இந்த வரலாற்றுத் கூட்டணிதான் பின்னாளில் 'அன்வேஷனா', 'லேடீஸ் டெய்லர்' போன்ற பல காவியங்களைத் தந்தது என்பதையும் நினைவில் கொண்டு ஒரு வம்சி ரெட்ரோஸ்பெக்டிவ் போன்று ட்ரைலாஜியாக மூன்று திரைப்படங்களையும் பார்க்கலாம். சிறந்த அனுபவமாக இருக்கும்.
கலை இயக்குநர் தோட்டா தரணியின் உழைப்பு இதில் கொஞ்சநஞ்சமல்ல. மிகநுட்பமான வேலைப்பாடு. படத்தில் வரும் பழைய அரண்மனையை அப்படியே கதையின் உணர்விற்கேற்ப மாற்ற பல வாரங்கள் உழைத்திருக்கிறார். அரண்மனையின் சுவர்களில் தொங்கும் ஓவியங்கள், அதன் விளக்குகள் என ஒவ்வொன்றும் ஆந்திர ஜமீன் வரலாற்றை அப்படியே பிரதிபலிக்கும். ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 'குட்டாலா' என்ற கிராமத்தில் இருக்கும் குட்டாலா பேலஸ் என்று சொல்லப்படும் நிஜமான வரலாற்றுச் சிறப்புமிக்க அரண்மனையை இந்த படத்தில் பிரம்மாண்டமான ஜமீன் பங்களாவாக காட்டியிருப்பார் தோட்டா. அரண்மனையின் பழமையான தோற்றமும், அதன் தனிமையும் படத்திற்கு ஒரு காத்திக் உணர்வைத் தரும்.
சித்தாரா 1984 தெலுங்கு
கேபிஆர்

Comments
Post a Comment