கல்முகத்தின் காதல் - General 1925 USA

நான் எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும் என்று அடிக்கடி நினைவூட்டும் படம் இந்த ஜெனெரல். ரயில்கள் தண்டவாளத்தில் தான் செல்ல வேண்டும் என்பதால், துரத்தல் சாகசக் காட்சிகளை விறுவிறுப்பாக எடுப்பது கடினம். ஆனால் கீட்டன் அபாரமான கற்பனை கொண்டு க்ரியேட்டிவாக அடுத்தடுத்துப் பல நகைச்சுவைக் காட்சிகளை திரைக்கதையில் கோர்த்து டூப் போடாமல், ஆபத்தான சாகசங்களை அவரே செய்து கதையோடு காட்சியை சேர்த்து சுவாரஸ்யப்படுத்தி பின்னிப்பெடலெடுத்து அதகளம் செய்திருப்பார். அதனால் தான் நூறு வருடங்கள் ஆகியும் இந்த படம் பார்க்க குதூகலமாக இருக்கிறது.
எளிமையான கதையையும், அதே நேரத்தில் தர்க்கரீதியான சுவாரஸ்யத்தையும் கொண்ட படம். வில்லியம் பிட்டிங்கர் எழுதிய “தி கிரேட் லோகோமோட்டிவ் சேஸ்” என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, உண்மைச் சம்பவத்தைத் தழுவி இது எடுக்கப்பட்ட திரைப்படம். படம் தொடங்கும் போது போர் அறிவிக்கப்படுகிறது. ஜானி கிரே என்பவர் தனது காதலி அன்னபெல் அறிவுரைப்படி ராணுவத்தில் சேரச் சென்றும் நிராகரிக்கப்படுகிறார். "நீ சீருடையில் வரும் வரை என்னிடம் பேசாதே" என அன்னாபெல் கூறிவிடுகிறாள். காதல் முறிவு சோகத்தில் சில காலம் கடந்து, 'ஜெனரல்' என்ற ரயிலின் இன்ஜினியராக இருக்கும் ஜானியின் ரயில், வடநாட்டு ஒற்றர்களால் திருடப்படுகிறது. ஜானி அந்த ரயிலைத் துரத்திச் செல்கிறார். ஓடியும், சைக்கிளிலும், இறுதியில் மற்றொரு ரயிலிலும் துரத்துகிறார். அன்னாபெல் ஒற்றர்களால் கடத்தப்பட்டு ஒரு கைதியாக அந்த ரயிலில் இருக்கிறாள். அவளை ஜானி கிரே மீட்டு, ஒரு மிகப்பெரிய ரயில் விபத்துக் காட்சியுடன் படம் முடிகிறது.
படத்தின் கதாநாயகன் ஜானி கிரே போருக்குச் செல்ல மறுக்கப்பட்டு, அவனது காதலி அன்னபெல் அவனை கோழை என்று நினைத்து விலகி விடுகிறாள். ஆனால், எதிரிகள் அவனது ரயிலைத் திருடிச் செல்லும் போது, அவன் தனது என்ஜினைத் திரும்பப் பெறவும், அதில் சிக்கியிருக்கும் தனது காதலியைக் காப்பாற்றவும் ஒரு துணிச்சலான சாகசத்தை மேற்கொள்கிறான். எளியதொரு காதல் கதையாக இருந்தாலும், போரின் அபத்தத்தையும், சாதாரண மனிதனின் வீரத்தையும் இது காட்டும். பஸ்டர் கீட்டன் என்பவர் வெறும் "கல் முகம்" கொண்ட நடிகர் என்று ஒரு வட்டத்திற்குள் வைக்க முடியாது. கதையில் ஏற்படும் பல குழப்பங்களுக்கு மத்தியிலும் தன் நிதானத்தைத் தவறவிடாத ஒரு கதாபாத்திரத்தை இவரை விட சிறப்பாக வெளிகாட்டக்கூடிய ஒரு நடிகரை நான் இதுவரை கண்டதில்லை. மௌனப்பட நடிகர்கள் பொதுவாக ஒரு விஷயத்தைச் சொல்ல ஏகப்பட்ட முக பாவனைகளை மிகைப்படுத்திக் காட்டுவார்கள். ஆனால் கீட்டனோ எப்போதும் கல்முகம் கொண்டு தனது நடிப்பை வெளிப்படுத்துவார். அவரது உடல்மொழி சூழலின் உணர்வை எடுத்துக்காட்டும். அதே முகம் ஆனால் சிரிப்பு, சோகம், குதூகலம், பயம், காதல், பதட்டம், பயம், தைரியம், துணிச்சல் என்று ஒரு பச்சோந்தியின் நிறத்தை போல உடல்மொழிக்கு ஏற்றவாறு அந்த கல்முகம் உணர்வுகளை மாற்றிக்கொண்டே இருக்கும். அவரது கல் முகம் ஒரு தனி கதாபாத்திரம். ஒரு மனநிலை.
படத்தின் ஆரம்பக் காட்சியை எடுத்துக் கொள்வோம். ஒரு ரயில்வே இன்ஜினியரைப் பற்றிய கதை என்பதால் அவருடைய வாழ்க்கையில் இரண்டு காதல்கள் தான். ஒன்று அவரது ரயில் இயந்திரம், இன்னொன்று அன்னாபெல். கதையின் தொடக்கத்தில், கீட்டன் தனது புது உடையில் அன்னபெல் வீட்டிற்கு நடந்து செல்வார். இரண்டு சிறுவர்கள் தன்னைத் தொடர்ந்து வருவதையோ, அவர்களுக்குப் பின்னால் அன்னாபெல்லே வந்து கொண்டிருப்பதையோ கவனிக்காமல் வீட்டுவாசலை அடைகிறார். தனது ஷூக்களைத் துடைத்து மெருகேற்றிவிட்டு, கதவைத் தட்டிவிட்டு திரும்பிப் பார்க்கும்போது அவள் அவருக்குப் பின்னால் நின்றுகொண்டிருப்பதை பார்ப்பார். இந்தத் தருணத்தில் மற்ற நகைச்சுவை நடிகர்களாக இருந்திருந்தால் முகத்தில் பெரிய அதிர்ச்சியைக் காட்டியிருப்பார்கள். ஆனால் கீட்டன் மிக இயல்பாக, சற்றே ஆர்வம் கூடிய ஒரு முகத்துடன் அதை எதிர்கொள்கிறார். இது அவரது கல்முக நடிப்பை எப்படி ஒரு கதாபாத்திரமாக காட்டுகிறார் என்பதற்கு ஒரு உதாரணம். படத்தின் ஆரம்பத்திலேயே அதை செட் செய்து விடுகிறார்.
அவர்கள் இருவரும் உள்ளே சென்று ஒரு சோபாவில் அமர்கிறார்கள். கூடவே அந்த சிறுவர்களும் உள்ளே வந்துவிட்டதை அவர் கவனிப்பார். அவர் முகத்தில் லேசான அதிருப்தியை காட்டிவிட்டு எழுந்து, வெளியே செல்வது போலத் தொப்பியை அணிந்து கதவைத் திறந்து அந்தச் சிறுவர்கள் ஏதோ அவரது விருந்தினர்கள் போன்று மரியாதையுடன் வெளியே அனுப்பிவிட்டு கதவை மூடுவார். இதெல்லாம் தான் கீட்டனின் தனித்துவம். இதெல்லாம் யதார்தத்தையும் நிதர்சனத்தையும் இயல்பென கட்டமைக்கப்படும் பொதுபுத்தியையும் உடைப்பது. ஒரு புது இயல்பை தனது தனித்துவத்தை வைத்து இயல்பாகவே நிறுவுவது. எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் ஒரு கதாபாத்திரத்தின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் கலை. நடிப்பாகட்டும் சாகசங்களாகட்டும் அனாயசமாக செய்வதில் பஸ்டர் கீட்டன் ஒரு கில்லாடி. இந்த காட்சியில் அவர் சிரிப்புக்காக நடிக்கவில்லை, மாறாகத் தனது வாழ்க்கையின் மிக முக்கியமான பெண்ணை சந்திக்க வந்த ஒரு மனிதனாக அந்தச் சூழலில் முழுமையாக மூழ்கியிருப்பார். அதுதான் காட்சியை ரசனையான நகைச்சுவையாக மாற்றுகிறது.
காதலியால் நிராகரிக்கப்பட்ட சோகத்தில் அவர் ரயிலின் இரும்புத் தண்டின் மீது அமர்ந்தபடியே செல்லும் காட்சி இன்றும் ரசிக்கப்பட்டு வியந்து அதே குதூகலத்துடன் பேசப்படுவதற்கான காரணம் அவரது ஈடுபாடு கதையிலும் அதற்கு தகுந்தாற்போல் நடிக்கும் கதாபாத்திரத்தின் புரிதலிலும் இருக்கிறது. ரயில் நகரத் தொடங்கும் போது அந்தத் தண்டு அவரை மேலும் கீழும் தூக்கி இறக்கும், ஆனால் அவர் எதையும் கவனிக்காமல் முறிந்த காதல் அன்னாபெல் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதை போல கவித்துவமான நகைச்சுவை கொண்ட காட்சியாக அது முடியும். “ஜெனரல்” உண்மையில் ஒரு காவியம்.
ஒரு காட்சியில் பின்னால் படைகள் முன்னேறுவதைக் கூடக் கவனிக்காமல் அவர் விறகு வெட்டிக் கொண்டிருப்பார். பீரங்கியால் சுட முயலும்போது, அது அவருக்கே திரும்புவது போன்ற காட்சிகள் அட்டகாசமான நகைச்சுவை காட்சிகள். என்னவொரு பின்னணி இசை அடேயப்பா! ஜெனரல் திரைப்படம் ஒரு தொழில்நுட்ப சாதனை. சுமார் ஒரு மணி நேரம் ஓடக்கூடிய படம். அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் இது. அமெரிக்க உள்நாட்டுப் போர் காலத்தை அப்படியே தத்ரூபமாக மறு உருவாக்கம் செய்து, நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள், ஆபத்தான சாகசக் காட்சிகள் மற்றும் ஒரு நிஜமான ரயில் எரியும் பாலத்திலிருந்து கீழே விழுவது எனப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படம்.
ஓடும் ரயிலின் முன்பக்கத்தில் அமர்ந்து கொண்டு, தண்டவாளத்தில் இருக்கும் தடையை அகற்ற அவர் செய்யும் சாகசங்கள் மிகவும் ஆபத்தானவை, ஆனால் அதை மிக லாவகமாகச் செய்திருப்பார். துல்லியமான நேர்த்தியை கொண்டு இதெல்லாம் செய்வது தான் அவரை நோக்கிய நமது ரசனையை கூர்மையாக்குகிறது. மனித உணர்வுகளையும் சாகசத்தில் உள்ள சுவாரஸ்யங்கள் மீதும் ஆழமான புரிதல் கொண்ட ஒரு மனிதனாக இருந்தால் மட்டுமே இப்படியொரு கலைஞனாக மிளிர முடியும்.
துரத்தல் காட்சிகளுக்கு இடையே, அன்னாபெல்லை மீட்க அவர் ஒரு வீட்டிற்குள் நுழையும் போது, மேஜைக்கு அடியில் ஒளிந்திருப்பார். மேஜை விரிப்பில் விழுந்த ஒரு துளை வழியாக அவர் பார்ப்பதை, அந்த காலத்துத் திரைப்படக் கலை நுட்பமான ஐரிஸ் ஷாட்டில் அழகாகப் படமாக்கியிருப்பார்கள். கதைக்குள் திணிக்கப்படாமல் எப்படி ஒரு கலை நுட்பத்தை ரசிகர்களுக்கே தெரியாமல் ஊடுருவ வைப்பது என்பதற்கு இக்கால செயற்கை நுண்ணறிவு CGI VFX கலைஞர்கள் மட்டுமல்ல எக்கால கதைசொல்லிகளுக்கும் அந்த காட்சி ஒரு மாஸ்டர் க்ளாஸ். உலகத் தரம் என்பதற்கு இந்த படத்தின் பல காட்சிகள் உதாரணம்.
இந்த படத்தின் ஒளிப்பதிவு ஒரு டாப் க்ளாஸ் சினிமாட்டோகிராஃபி. தேவ் ஜென்னிங்ஸ் தனது கேமராவை வைத்துக்கொண்டு வெளிப்புறங்களில் படமாக்கிய விதத்தை எப்படி பாராட்டுவது? படம் முழுக்க கீட்டன் ஒரு அசாதாரண உழைப்பை போட்டிருக்கிறார் என்றால் ஜென்னிங்ஸ் அதற்கு இரண்டு மடங்கு உழைப்பையும் க்ரியேட்டிவிட்டியையும் போட்டு கீட்டனுடனும் இயக்குனர் கிளைட் ப்ரக்மானுடனும் இணைந்து பணியாற்றி இவ்வளவு நேர்த்தியான ஒரு மாஸ்டர்பீஸ் திரைப்படத்தை உருவாக்கிய விதம் சிரம் தாழ்ந்து பாராட்டப்பட வேண்டியது. ஒரு பிரம்மாண்டமான போர்க்கள உணர்வைத் தருவதோடு ரயில்கள் மோதுவது, மரக்கட்டைகளை அகற்றுவது போன்ற காட்சிகளின் டைமிங்கை மில்லி செகண்ட் பிசகாமல் மிகத் துல்லியமாகப் படமாக்கியதை பாராட்டியே ஆகவேண்டும். படத்தின் ஆரம்பக் காட்சிகள் சற்று மெதுவாக நகர்வது போன்ற உணர்வைத் தந்தாலும் கதை சூடுபிடிக்கச் சிறிது நேரம் எடுத்துக்கொண்டாலும் அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது நடந்த 'Great Locomotive Chase' என்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையை சுவாரஸ்யமான நகைச்சுவை கொண்ட சாகசப்படமாக எடுத்து கொடுத்து ரசிகர்களை குதூகலப்படுத்துவது ஒரு ஆச்சரியம் தான். அரிதான திரைப்படங்களில் தான் இதுபோன்ற தனித்துவமான குதூகல உணர்வு கிடைக்கும்.
படத்தின் குறை என்னவென்றால் அதுவும் மிகமுக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விமர்சிக்கப்படவேண்டிய குறை என்னவென்றால் இந்தப் படம் ஒரு 'கான்ஃபிடரெசி' வீரரை ஹீரோவாகக் காட்டுகிறது என்பதுதான். அமெரிக்க வரலாற்றின் படி அவர்கள் அடிமை முறைக்கு ஆதரவானவர்கள் என்பதால் படத்தின் அரசியல் படத்தை ரசிப்பதற்கு மிகப்பெரிய தடையாக இருக்கிறது. கான்ஃபிடரெசி வீரர்கள் அவர்களின் இனத்துவேஷ அரசியல் பற்றி தெரியாதவர்களுக்கு, அதைப்பற்றிய ஒரு புரிதல் இல்லாதவர்களுக்கு ஜெனெரல் என்ற இந்த திரைப்படத்தின் கதை நகைச்சுவைக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் படமாக இருக்கும் ஆனால் அடிமை முறையை ஆதரிக்கும் ஒரு குழுவை சேர்ந்தவனை எப்படி ஹீரோவாக பார்ப்பது என்பது சுவாரஸ்யம் மட்டுமல்ல ரசனை ஜனரஞ்சகம் எல்லாவற்றையும் புரட்டிப்போடும் அரசியலாக இருக்கும். இப்படிப்பட்ட தவறான அரசியல் பார்வை கொண்ட மூளைச்சலவை செய்யப்பட்ட ஒருவனை எப்படி ஹீரோவாக பார்ப்பது, இப்படிப்பட்ட கதாபாத்திரம் காதல் செய்தால் என்ன? சிறைப்பட்ட காதலியை காப்பாற்றினால் தான் என்ன என்ற உணர்வு படத்தின் ரசனை மீது கைவைக்கிறது. ஒரு திரையைப்போல. ஆனால் பகுத்தெடுக்கும் ரசனைக்கும் வகுத்து ரசிக்கும் திறமை உள்ளதால் ஏகமானதோடு முழு படத்தையும் நிராகரிக்காமல் ரசிக்கத்தகுந்த நுட்பங்களை நுணுக்கங்களையும் காட்சிகளையும் மனநிலைகளையும் ரசிப்பதே அறம் என்று ரசிக்கும். உதாரணத்திற்கு படத்தின் ஒரு இடத்தில் பாலம் உடையும் காட்சியை எடுத்துக்கொள்வோம். நிஜமான ஒரு ரயிலைப் பாலத்துடன் சேர்த்து ஆற்றில் விழச் செய்து அதை ஒற்றைக் காட்சியாக சிங்கிள் ஷாட்டாக எடுத்தது படத்தின் நம்பகத்தன்மையை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கும். முதலில் ஆபத்திலிருந்து மனிதர்களை காப்பாற்று. அரசியல் விமர்சனங்கள் கருத்து முரண்பாடுகளை பின்னர் விமர்சித்து வாதப்பிரதிவாதம் செய்துகொள்ளலாம் என்று தோன்றவைக்கும் மிக நேர்த்தியான நம்பகத்தன்மையுடன் நம்ம கன்வின்ஸ் செய்து கவனிக்க வைக்கும் ஒரு திரைக்கதை. ஏனென்றால் இந்த படம் ஒரு தொழில்நுட்ப அதிசயம். அரசியல் புரிதல் தவறாக இருந்தாலும் கடும் நேர்மை இருந்ததால் தான் 100 ஆண்டுகளுக்குப் பிறகும் ஏகமனதுடன் ரசிக்கப்படும் அசாத்தியமான உழைப்பு இந்த படத்தில் இருப்பதால் ஒரு கதையாக இதனால் காலம் கடந்து பயணிக்க முடிகிறது. ஒரு மௌன யுக கிளாசிக். ரயில்கள், சீருடைகள், ஆயுதங்கள், மற்றும் போர்க்கள சூழல் அனைத்தும் கதை நடக்கும் காலத்திற்கு ஏற்றவாறு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட வேண்டும் என்று கீட்டன் இதற்காக ஏராளமான ஆராய்ச்சிகளை செய்திருக்கிறார். உண்மையான உள்நாட்டுப் போர் வீரர்களின் ஆலோசனைகளை படத்திற்காக அணுகியிருக்கிறார்.
ரயில் தண்டவாளத்தில் ஓடும் காட்சிகள் அனைத்தும் நேரடியாகவும், எந்த ஸ்பெஷல் எஃபெக்ட்களும் இல்லாமலும் படமாக்கப்பட்டதெல்லாம் ஒளிப்பதிவாளரை கடந்து கீட்டனின் கைவண்ணம் என்பது தொடர்ந்து கீட்டன் படங்களை பார்ப்பவர்களுக்கு புரியும். உதாரணத்திற்கு, கிளைமாக்ஸ் காட்சியில், அந்த ரயில் பாலத்தின் மீது செல்லும் போது, அந்தப் பாலம் எரிந்து, ரயில் ஆற்றில் விழும் காட்சி மெய்சிலிர்க்க வைப்பதற்கு பெரும் உழைப்பு போடப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சிக்காக கீட்டன் ஒரு உண்மையான ரயில் எஞ்சினையே பாலத்துடன் சேர்த்து ஆற்றில் விழ வைத்திருக்கிறார். இது அந்தக் காலத்தில் மிகப் பெரிய செலவில் செய்யப்பட்ட ஒரு ஸ்டண்ட். அந்தக் காட்சியை ஒரே டேக்கில், வெவ்வேறு கோணங்களில் படமாக்கிய விதம் அசாதாரணமானது. படம் முழுவதும், லாங்ஷாட்கள் மூலம் கதாபாத்திரங்களின் சூழலையும் கதையின் சூழலையும் ஒருசேரக் காட்டி பார்வையாளர்களை அந்தக் கால சூழலுக்கு நேரடியாக அழைத்துச் செல்ழும் முயற்சியை அசாத்தியமான உழைப்பைக்கொண்டு சாத்தியப்படுத்தி காட்டியிருப்பது மொத்த சினிமா வரலாற்றிலேயே மறக்கமுடியாத முக்கியமானதொரு தடம்.
ரயில் பாதைகள், சிக்னல்கள், என்ஜின்களின் இயக்கங்கள் அனைத்தும் மிகத் துல்லியமாகக் காட்டப்பட்டிருக்கும். கீட்டனுக்கு ரயில்கள் மீது ஒரு தீவிரமான ஈடுபாடு இப்படம் முழுவதும் வெளிப்படுகிறது. ரயிலின் ஒவ்வொரு பாகத்தையும் நேசிப்பவரால் மட்டுமே இப்படியொரு உணர்வுப்பூர்வமான படத்தை கொடுக்கமுடியும். ரயிலின் மீது எல்லா மனிதனுக்கும் ஒரு மெல்லிய காதல் இருப்பதாக நான் நம்புகிறேன். அந்த புதைந்திருக்கும் காதலை கீட்டன் இந்த படத்தில் மீட்டெடுத்துக்கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அவர் அதை செவ்வனே செய்கிறார். ரயிலின் சக்கரங்கள், நீராவி, இன்ஜின் ஒலிகள் அனைத்தும் கதையின் ஓட்டத்துடன் இணைந்து ஒரு இசையைப் போல ஒலிக்கின்றன.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களின் பசுமையான வயல்வெளிகள், சிறிய நகரங்கள், மற்றும் மரங்கள் நிறைந்த பகுதிகள் அனைத்தும் அழகுடன் படமாக்கப்பட்டுள்ளன. போர்க்காலத்தின் கொடுமைகளை மறைத்து, ஒரு காதல் பார்வையை முன்வைத்து, போரில் இறப்பதை விட, நகைச்சுவைக்கே முக்கியத்துவம் கொடுத்து, எதிரி வீரர்கள் முட்டாள்களாகவும் அபத்தமானவர்களாகவும் காட்டி , அவர்களை கொல்வதை கூட நகைச்சுவையான முறையில் காட்டி, போரின் கடுமையான யதார்த்தத்தை மறைத்து இயக்கப்பட்டிருக்கும் அணுகுமுறை ஒரு நகைச்சுவைப் படம் எப்படி எடுக்கப்பட வேண்டும்? எப்படி ஒரு போர் திரைப்படத்தை நகைச்சுவையாக கதைசொல்ல முடியும்? என்பதற்கெல்லாம் இந்த ஜெனெரல் 1925 படம் ஒரு எடுத்துக்காட்டு.
1861-1865 அமெரிக்க உள்நாட்டுப்போர் நடந்த காலகட்டத்தில் நடக்கும் கதை. துல்லியமாக சொல்லப்பட்ட நகைச்சுவை என்பதால் காலத்தால் இந்த படத்தை அழிக்கமுடியவில்லை. ஆனால் அறத்துடன் பார்க்கும் போது கீட்டன் Southern Confederacy பக்கம் நிற்காமல் northern union பக்கம் நின்றிருக்க வேண்டும் என்று தோன்றும். அல்லது எந்த பக்கமும் நிற்காமல் சமத்துவத்திற்கு குரல் கொடுத்திருக்க வேண்டும். அமைதியான முறையில் ஒரு கதைசொல்லியாக சமத்துவ கதைகளாக படங்களை எடுத்திருக்க வேண்டும். கான்ஃபிடெரசிக்காரர்களை ஹீரோவாகக் காட்டியதால் Northern Union குழுவை வில்லன்களாக அது மாற்றியது, அக்காலத்தில் பெரும் விமர்சனம் இல்லாமல் இது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இன்றைய காலத்தில் white supremacy-யை ஆதரித்து Confederacy-ஐ glorify செய்வதால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கி பார்க்கவேண்டிய அரசியலை படம் பேசுகிறது. அதை தவிர்த்திருந்தால் மிக உன்னதமான கலைப்படைப்பாக ரசிக்கப்பட்டிருக்க வேண்டிய படம். மிகுந்த முயற்சி எடுத்து வரலாற்று நேர்த்தியுடன் படம் எடுக்க ஏகப்பட்ட சிரத்தை எடுத்து Civil War புகைப்படக் கலைஞர்களான Matthew Brady, Alexander Gardner போன்றோரின் புகைப்படங்களைப் பயன்படுத்தி costumes, props, buildings, locomotives-ஐ அசல் காலத்திற்கு ஏற்ப உருவாக்கிய கீட்டன், Oregon Cottage Grove என்ற இடத்தில் உண்மையான நீராவி இன்ஜின்களை பயன்படுத்தி miniatures இல்லாமல் படம்பிடித்த கீட்டன், visual authenticity தரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த கீட்டன், train chase sequence ஒரு ரயிலை பாலத்திலிருந்து ஒற்றை ஷாட்டில் விழ வைத்த ரிஸ்க்கான சாகசங்களை நிகழ்த்திய கீட்டன் ஏன் நியாயமான அரசியல் பார்வை கொண்டு நியாயம் கிடைக்க வேண்டிய மக்களின் பக்கம் நின்று இந்த கதையை எடுக்கவில்லை என்பது தான் எனது கேள்வி? ரயில் என்பது தொழில்நுட்ப முன்னேற்றத்தின் சின்னம். ஜானி கிரேக்கு ரயில் ஒரு காதலியை போல. கதையில் அவர் இரண்டு காதல்களை காப்பாற்றுகிறார். மனிதர்கள் மீதான காதல் மற்றும் தொழில் மீதான காதலை இரண்டையும் சமமாக சுமப்பது என்பது அமெரிக்க தத்துவத்தை பிரதிபலிக்கிறது.
பேசும் படங்கள் வந்த பிறகு, அவரது சுதந்திரம் பறிபோனது. அவரது பிற்கால வாழ்க்கை சவாலாக இருந்தாலும், இறுதியில் அவரது மேதைமை உலகால் இன்றும் அங்கீகரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஒரு சிறந்த இசைக்கோர்ப்பு போல நமது உணர்வுகளுடன் மிகச் சரியாகப் பொருந்திப் போகும் கீட்டனின் பல படங்களை நூறுமுறைக்கும் மேல் பார்க்கலாம். ஒரு நல்ல இசைக்கோர்வையை தினமும் கேட்டு ஆயிரம் முறைக்கு மேல் நாம் கேட்டு லயித்திருப்போமே? அதுபோல! சிரிப்புக்காக காட்சிகளை ஒருபோதும் எழுதியது போலவே இருக்காது, வலுக்கட்டாயமாக திரைக்கலை நுட்பங்களை ஆபாசமாக பயன்படுத்தி சிரிப்பை வரவழைக்கும் ஒரு செயற்கையான சூழலை அவர் ஒருபோதும் எக்ஸ்ப்ளாய்ட் செய்ததில்லை. "சாப்ளினின் கதாபாத்திரம் ஒரு ஏழை, அவன் வாய்ப்புக் கிடைத்தால் திருடுவான். ஆனால் என் கதாபாத்திரம் ஒரு நேர்மையான தொழிலாளி" என்று கீட்டன் ஒருமுறை சொல்லியிருக்கிறார்.
மௌனப்படம் என்பதால், உரையாடல்கள் இல்லாதது எனது ரசனைக்கு ஒரு சவாலாகவே இல்லை. சொல்லப்போனால் இன்னும் மெடிடேட்டிவாக இருந்தது. வார்த்தைகள் இல்லாமலேயே கதையை எப்படி தெளிவாகச் சொல்ல முடியும் என்ற காட்சிமொழி படத்தில் அப்பட்டமாக தெரிகிறது. படத்தின் இசைக்கோர்வை, காட்சிகளின் உணர்வுகளை மிகச் சரியாக வெளிப்படுத்துகிறது. பரபரப்பான துரத்தல் காட்சிகளில் வேகமான இசையும், காதல் காட்சிகளில் மென்மையான இசையும் படத்தின் அனுபவத்தை அநாயசமாக மேம்படுத்துகின்றன. ஒரு சாதாரண நிகழ்வை எப்படி ஒரு காவியமாக மாற்றலாம் என்பதற்கு இந்த ஜெனரல் படம் ஒரு உதாரணம்.
கல்முகத்தின் காதல் - General 1925

Comments
Post a Comment