சாவுக்கப்பால் - சிறுகதை

உலகத்திலேயே கொடூரமான விஷயம் நட்பு என்கிற பெயரில் நடக்கும் பித்தலாட்டங்கள் தான். கட்டமைக்கப்படாத கலாச்சாரமாக காலங்காலமாக சலம்பிக்கொண்டிருக்கும் ஒரு உலகம் உண்டென்றால் அது நட்புவட்டம் தான். காரில் வந்து இறங்கியதும் என்னை தான் பார்த்தாள். கடைசியாக அவளிடம் அந்நியன் படத்தின் ரெமோ பாட்டை பற்றி பேசியபோது சண்டை போட்டு போனமாதிரி ஞாபகம். கோபத்தில் "சில்ற அளவுக்கு கூட காமன்சென்ஸ் இல்ல உனக்கு" என்று திட்டித்தீர்த்துவிட்டேன்.
தமிழ், தெலுங்கு, கன்னட, ஹிந்தி சினிமாக்களில் காட்டப்படும் பைத்தியக்கார கதாபாத்திரங்களை விட பத்து மடங்கு முட்டாள்தனம் நிறைந்தவள். என்ன மனிதத்திற்கு இவளை நட்புவட்டத்தில் வைத்திருக்கிறேன் என்று தெரியவில்லை. பழக்கவழக்கத்திற்காக விட்டுக்கொடுக்கமுடியாமல் பழக வேண்டியதாக இருக்கிறது. "காதல் யானை வருகிறான் ரெமோ, முத்த தந்தத்தால் முட்டுவான் ரெமோ, அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ, ராம்ப்வாக் ரெமோ… தூக்கத்தில் துரத்தும் டிராகன் ரெமோ, பூக்கள் வெடிக்கின்ற ஸ்டன்கன் ரெமோ, ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்க்டோன் ரெமோ, ரெயின்போ ரெமோ" இந்த வரிகளினால் எங்களுக்குள் எழுந்த வாக்குவாதம் விடிய விடிய வளர்ந்தது. திடீரென அவளுடைய காதல் முறிந்து விட்டது. காரணம் அவளுடைய காதலன் சமீபத்தில் தவறிவிட்டான்.
அதிவேகத்தில் வந்த பைக் ஒன்று சாலையில் ஓரமாக கையைப்பிடித்து நடந்து சென்ற இவளுடைய காதலனை மட்டும் அடித்து தூக்கிவீசியிருக்கிறது. சம்பவ இடத்திலேயே காலி. நடந்து ஒருவருடம் ஆகிவிட்டது. இன்னும் அவள் மீண்டபாடில்லை. ஆறுதலுக்காக என்னிடம் வருபவள், பாடல்களின் உள்ள வரிப்பிழைகளை விளக்கி நண்பர்களின் வாழ்க்கையில் நடக்கும் ஒழுக்கக்கேடுகளை புரணி பேசி குதூகலப்படுத்துவாள். அவ்வப்போது வாக்குவாதம் வரும் எங்களுக்குள். "ஒருதடவக்கூட உன்ன மாதிரி அவன் ஆர்க்யூ பண்ணதில்ல" என்பவளிடம் "உன்கிட்ட சீன்போட எதுவுமில்ல மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிக்கிறோம். செருப்பு மாதிரி ரிலேஷன்ஷிப் பிஞ்சிடக்கூடாதுனு உன் பின்னாடியே சுத்துனவன் எப்படி வாக்குவாதம் பண்ணிட்டு இருப்பான் உக்காந்துக்கிட்டு?" என்றதும் அழுதுவிட்டாள்.
நடித்துக்காட்டி கொண்டிருப்பாள். சினிமாவுக்கு நடிக்கப்போகலாம். ஆனால் அவளுக்கு எதிர்காலம் இல்லை. "நடிக்க தெரிஞ்சா போதுமா? அறிவுமைறு வேணாமா? இவ்ளோ லூசுத்தனமா ஒரு பொம்பள நடந்துக்கலாமா? எதுக்கு வந்தயோ வந்த வேலைய பாரும்மா!" என லைட்மேன் கூட அவளைத் திட்டலாம். ஆனால் அவளிடம் என்னைப்பற்றி கேட்டுப்பார்த்தால், நான் சொன்னதை விட பத்து மடங்கு என்னைப்பற்றி அவதூறு சொல்லுவாள், பணக்கார வீட்டு நாய் தெரு நாயை பார்த்து அகராதி குரை குரைப்பதைப்போல.
“உன்னைய நம்பு உன் திறமைய நம்பு" என்று எனக்கு ஒருநாள் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாள். எதுகை மோனையாக திட்டிவிட்டு அவளுடைய உறுப்பை கிண்டல் செய்து வைத்துவிட்டேன். கவலையை புலம்பிய வேகத்தில் அவளை திட்டிவிட்டேன். அவளும் எனது பரம்பரையை திட்டி சந்தி சிரிக்கவைக்க முயற்சித்திருக்கிறாள். நான் அமைதியை தொட்டு நகர்ந்திருக்க தயங்கியதில்லை. நட்பின் எல்லையை மீற வேண்டாம் என்று எச்சரிப்பாள். "உன் நட்பே தேவையில்லை கெளம்பு" என்று சொன்னாலும் எனது காலை சுற்றிக்கொண்டிருப்பாள்.
"வெட்கங்கெட்டு ஏன் மறுபடி மறுபடி என்னிடம் வந்து ஒட்டிக்கிற அட்ட மாதிரி" என்று ஒருநாள் கேட்டபோது அவளிடம் எந்த பதிலும் இல்லை. அவளை செல்லில் இருந்து ப்ளாக் பண்ணி, அவளுடையை எல்லாத் தொடர்புகளையும் துண்டித்து போட்டாலும் வீட்டிற்கே நேரில் வந்து அதிகாலையில் என்னை எழுப்புவாள். பட்ஜெட் கிடைக்காத இயக்குனர்கள் தங்களின் சினிமாமொழியை சுயாதீன சினிமாக்களில் உருவாக்கி காட்டும் மனநோயாளி கதாபாத்திரத்தை கண்முன் நிறுத்துவாள். அவளுக்கு நான் ஒரு போதை. நான் இல்லாமல் அவளால் வாழமுடியாது. நானோ அவளோ இருவரும் காதலித்து திருமணம் செய்துக்கொள்ள முடியாது. ஏன் என்றால் எதுவும் தோணாது.
எங்கள் நட்பை கொண்டாடவும் முடியாது. பள்ளிக்கால தோழி என்பதால் அவளை நான் தவிர்க்கவும் முடியாது. பள்ளிக்கால நண்பர்களை கூட்டு சேர்த்தால் என் பாரம் குறையும் என்று எண்ணினால் அதற்கும் அனுமதிக்க மாட்டாள். எனது வேலையை நிம்மதியாக செய்யவிடுவதில்லை சமீப ஏழெட்டு மாதங்களில். எனக்கும் தான் அவளுடைய காதலன் மரணித்ததில் மயான சோகம் இருக்கிறது. அதற்காக பொழப்பை விட்டுட்டு அவனை நினைத்து நான் வாடிக்கொண்டிருப்பதா? எனக்கும் அவளை நினைத்து பாவமாகத் தான் இருக்கிறது என்ன செய்ய? என் பெயர் சேஷு இல்லை என்னை அப்படி இனிமேல் அழைக்க வேண்டாம். என் பேர் குமரன். என்னை ஏன் சேஷு என்று அவள் அழைக்கவேண்டும் என்றே தெரியவில்லை?
அவளுடைய சம்பவித்த காதலன் பெயர் பீட்டர். எப்படி பார்த்தாலும் சேஷு என்ற செல்லப்பெயர் வரப்போவதில்லை. இப்படித்தான் அவளுக்காக நான் தேவையில்லாமல் தலையைப்போட்டு வெடிக்க வைத்து கொண்டிருப்பேன் ஒவ்வொரு இரவும். என்னுடைய இரவுகளை போல ஒரு வேலையற்ற இரவுகள் எவன் வாழ்க்கையிலும் நடக்க சாத்தியமே இல்லை. ஒருநாள் பீட்டர் தலை மட்டும் அவளது கனவில் வந்து நடனமாடியது என்றாள். நான் தான் பீட்டர் என்றாள் திடீரென. இரவு இரண்டு மணிக்கு அவளுக்கு சூடாக ஒரு க்ளாஸ் பாலை செய்து கொடுத்ததற்கு எனக்கு வந்த கேடு. "பீட்டர் கீட்டர்னு என்னையப் பாத்து உளறிட்டு இருந்தேன்னா செருப்பால அடிப்பேன் சனியனே" என்று அவளுக்கு கெட்டவார்த்தை தாலாட்டு பாடுவேன். தாலாட்டை எனக்கே திருப்பி பாடுவாள்.
எனது அப்பா, அம்மாவிற்கு, அக்கம்பக்கத்தினருடன் இருந்த தவறான உறவு பரம்பரையில் இருந்து எப்படி வந்தது? என்னுடைய வம்சம் என்ன? எப்படிப்பட்ட ஒழுக்கமான வம்சம் என்று எனக்கு புரிகிற மொழியில் பாடமெடுப்பாள். "அதுவொரு கேடுகெட்ட வம்சம்" என்பேன். எனக்கு அவளிடம் ஆகவேண்டியது எதுவுமே இல்லை. அவள் முழுக்க முழுக்க என்னை பயன்படுத்திக் கொண்டிருக்கிறாள் என்று எனக்கு நன்றாக தெரிகிறது. அவள் தன்னை தொலைத்து பல மாதங்கள் ஆகியிருக்கின்றன என்பதையும் நான் தெரிந்துகொண்டேன். அவளை மீட்டெடுக்க வேண்டுமா வேண்டாமா? அது எனது கடமையா? இல்லையா? பொழப்பை பார்க்கவேண்டாமா? இவளை சுமக்கணுமா? அப்பா அம்மா இல்லாதவள் தான். காதலன் உட்பட எல்லா உறவுகளையும் இழந்தவள் தான். என்னை மாதிரியே சென்னை மாநகரத்தில் நுங்கம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு தீப்பெட்டியில் வாழும் ஒரு நகரவாசி. எனக்கு நூறு பேர் தெரியும் ஆனால் அவளுக்கு நான் மட்டும் தான் தெரியும். அதனால் என்னை அத்துவிட அவளுக்கு தோணவில்லை. ஆனால் எக்கேடாவது கெட்டொழியட்டும் என்று நான் நினைக்கிறேன். எனக்கு பிடித்த சனி. என் நிம்மதி நேரம் எல்லாவற்றையும் குத்தகைக்கு எடுத்துக்கொண்டாள்.
"நீ தான் பீட்டர் எனக்கான லெட்அவுட்" என்பாள். "என்னை எதுக்குடி பீட்டர்னு கூப்பிட்ற? குமரன்டி நா!" என்பேன். "உன் தலைமேல் பீட்டர் தான் உக்காந்திருக்கிறான். கொஞ்சமா பீட்டரா மாறிட்டு வர குமரா புரியுதா உனக்கு?" என்பாள். கண்ணாடியை போய் சரிபார்ப்பேன். எனக்கும் பைத்தியம் பிடிக்க வைத்துவிடுவாள். இரவு அவளை படுக்கவைத்துவிட்டு எனது வீட்டுக்கு திரும்புவேன். சேர்ந்து தான் சாப்பிடுவோம். ஒரு நாள் என்னை சாப்பிடு என்று சொன்னதில்லை. எல்லாவற்றுக்கும் ஒரு சாக்கு அவளுடைய பீட்டர் பேய். பீட்டர் பேயாக சுற்றிக்கொண்டிருக்கிறான் அவளது வீட்டில். அவளுக்கு சோறு கொடுக்க மாட்டான், அவளுக்கு உடம்பு முடியாமல் போனால் பார்த்துக்கொள்ள மாட்டான். அஜாக்கிரதையாக நடந்து சென்று ஒரு விபத்தில் உயிரை துச்சமாக இழந்துவிட்டு, மனநல மருத்துவரிடம் அழைத்து போகலாம் என்று ஒருநாள் முடிவெடுத்து “மாலிற்கு போய் படம் பாக்கலாம்” என அழைத்தேன்.
"டிக்கெட்டை வாட்சாப் அனுப்பு" என்றாள். பின்னர் உண்மையாகவே வடபழனி மாலிலுள்ள ஒரு திரையரங்கில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான டிக்கெட் எடுத்து அவளுக்கு அனுப்பிவைத்தேன். எனக்கு போனில் அழைத்து "டாக்டர் பிரபாவிற்கு அப்பாய்ன்ட்மென்ட் ஃபிக்ஸ் பண்ணிருக்க? எதுக்கு என்னைய கேக்காம இதெல்லாம் பண்ற? என் நம்பர வேற குடுத்துருக்குற? இனிமே இர்ரெஸ்பான்சிபிளா நடந்துக்காத? என்னைய முதல்ல கேளு ஓகேவா? சாயங்காலம் ஸ்ட்ரெய்ட்டா வந்துடு. நானும் வந்துடுறேன்" என்றாள். அவளுக்கு தெரிந்திருக்கிறது அவள் தன்னை தொலைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை. சாயங்காலம் மனநல மருத்துவர் பிரபாவை சந்திக்க சரியான நேரத்திற்கு சென்றுவிட்டேன். அவளுக்கு அழைத்தேன். எடுக்கவில்லை.
"எப்படியிருக்கீங்க பீட்டர்?" என்றார் பிரபா. "நான் பீட்டர் இல்லை குமரன்" என்றேன். "என்ன சொல்றாரு இவரு..." என்று சந்தேகமாக கேட்டாள் பிரபா.
சச்சித்தா தைரியமாக சொன்னாள் "இதுதான் பிரபா பிரச்சன? அப்பப்ப பீட்டர்ங்கிறதையே மறந்துறான்". "என்ன பேசிக்கிறீங்க ரெண்டுபேரும்? குமரன்!!!" என்று என்னை காட்டினேன் ஆட்காட்டி விரலால். "சச்சித்தாவின் நண்பன்" என்றேன். இருவரும் சிரித்தார்கள். நான் பீட்டரோட இரெண்டு மூணு போட்டோ எடுத்திருக்கேன். நீங்க பீட்டர் மாதிரி தான் இருக்கீங்க பாருங்க" என்று போனில் உள்ள அவர்கள் சேர்ந்து எடுத்த போட்டோவை காட்டினார்கள். நான் அதை பார்க்க... அதில்... பீட்டர் தான் இருக்கிறான்!
கிளீனிக்கில் இருந்த கண்ணாடியில் போய் பார்த்தால் நான் பீட்டராக மாறியிருக்கிறேன்.
என்னுடைய பழைய முகம் எங்கே என்று தேடுகிறேன் கிடைக்கவில்லை.
"இதுவா பாருங்க" என்று சாலை விபத்தில் இறந்துபோன குமரனின் போட்டோவை காட்டுகிறார்கள்.
நான் தான் அது.
சாவுக்கப்பால்
சிறுகதை
கேபிஆர்

Comments
Post a Comment