வெற்றிடத்தின் பிரதிபலிப்பு - Spirited Away 2001
சிஹிரோ என்ற சிறுமி அவள் அம்மா அப்பாவுடன் புதிய வீட்டிற்கு செல்கிறாள். அந்த பயணத்தில் ஒரு மர்மமான உலகிற்குள் தவறுதலாக நுழைகிறாள். அந்த உலகம் சாதாரண மனிதர்களுக்கானது அல்ல. ஆவிகளின் உலகம்.
அங்கே மனிதர்கள் விதிகளை மீறினால் தங்கள் உருவத்தையும் அடையாளத்தையும் இழக்க நேரிடும். சிஹிரோவின் பெற்றோர் பேராசையால் பன்றிகளாக மாறிவிடுகிறார்கள். பேராசை மனிதனை மிருகமாக மாற்றும் என்பதை காட்டி குறியீட்டு திரைக்கதையை ஆரம்பிக்கும் படம் அதற்கப்பால் அடுத்தடுத்த காட்சிகளில் ஆயிரக்கணக்கான குறியீடுகளை வைத்து நகர்கிறது. சிஹிரோ தனது பெற்றோரை மீண்டும் மனிதர்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த ஆவி உலகில் வேலை செய்ய ஆரம்பிக்கிறாள்.
யுபாபா என்ற சக்திவாய்ந்த சூனியக்காரியின் மாளிகையில் வேலைக்கு சேருகிறாள். யுபாபா என்பது அதிகாரம். கட்டுப்பாடு மற்றும் பேராசையை குறிக்கும் ஒரு பாத்திரம். அந்த மாளிகை ஒரு bathhouse. மனித சமுதாயத்தின் ஒரு சின்னமாக உள்ளது. அங்கே வரும் ஒவ்வொரு ஆவியும் மனிதர்களின் குணங்களை பிரதிபலிக்கிறது. சிலர் சுத்தமாக இருப்பார்கள். சிலர் மாசாக இருப்பார்கள். சிலர் தனிமையில் தத்தளிப்பார்கள்.
சிஹிரோ அந்த உலகில் தனது பெயரையே இழக்கிறாள். யுபாபா அவளை சென் என்று அழைக்கிறாள். இதன் மூலம் பெயர் அடையாளம் என்பதை இழந்தால் நாம் நம்மையே இழக்கிறோம் என்பதையும் படம் உணர்த்துகிறது.
ஹாகு என்ற மர்மமான சிறுவன் சிஹிரோவுக்கு உதவுகிறான். ஆவி உலகின் காவலன் போல இருப்பவனுக்கும் தனது கடந்தகாலத்தை மறந்துவிட்ட நிலைதான். இவர்கள் இருவருக்குள்ளிருக்கும் உறவு மிகவும் மென்மையான கவிதை.
திரைக்கதை அமைதியாக செல்லும். உரையாடல்கள் குறைவாக இருந்தாலும் காட்சிகள் கதை பேசும்.
Hayao Miyazaki மிக நுணுக்கமான உலகத்தை உருவாக்கியிருப்பார். அவர் உருவாக்கிய உலகம் குழந்தைகளுக்கான கற்பனையாக மட்டுமில்லாமல் கெடாமாடு பெரியவர்களுக்கும் பொருள் தரும் ஒரு தத்துவ உலகமாக இருக்கும். காட்சிகளில் நீர், காற்று, அமைதி போன்ற இயற்கை அம்சங்களின் உயிர்ப்புநிலை அடிக்கோடிட்டு காட்டப்படுகின்றன. குறிப்பாக ரயில் பயண காட்சி.
folk கதைகளின் தாக்கம் இந்த படத்தில் மிக தெளிவாக தெரியும். ஜப்பானிய ஷின்டோ மத நம்பிக்கைகளில் ஆவிகள், இயற்கை தெய்வங்கள், யோகாய் போன்ற பல உருவங்கள் உள்ளன. அவற்றை அடிப்படையாக கொண்டு தான் இந்த உலகம் மியாசகியால் உருவாக்கப்பட்டுள்ளது.
குளியலறை மாளிகை என்பது ஆன்மாவை சுத்திகரித்து ஆன்மீக மாற்றத்தை குறிக்கும் ஒரு பழமையான கலாச்சார சின்னம். நோ-ஃபேஸ் என்ற முகமற்ற பாத்திரம் இந்த கதையில் நான் மிகவும் முக்கியமான ஒன்றாக நினைக்கும் பாத்திரம். ஏனென்றால் அது மனிதர்களின் வெற்றிடத்தை பிரதிபலிக்கிறது. அது யாருடன் இருக்கிறதோ அவர்களின் குணங்களை எடுத்துக்கொள்கிறது. சமுதாயத்தில் நாம் எவ்வாறு பாதிக்கப்படுகிறோம் என்பதை துல்லியமாக நமக்கே காட்டும் மிகமுக்கியமான உவமைகுறியீடு.
சிஹிரோ. கதையின் ஆரம்பத்தில், பயப்படும் ஒரு குழந்தையாக இருப்பாள். ஆனால் கதையின் முடிவில் தன்னம்பிக்கை உள்ள ஒருவளாக மாறுகிறாள். இந்த மாற்றமே இந்த படத்தின் ஆன்மா.
ஜோ ஹிஷைசியின் இசையும் இந்த படத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. காட்சிகளின் உணர்ச்சியை மேலும் உயர்த்திக்காட்டும் இசை. Academy Award for Best Animated Feature விருதை வென்ற ஜப்பானிய திரைப்படம். ஆனால் படத்தின் உண்மையான வெற்றி அதன் உள்ளடக்கத்தில் உள்ளது. ஏன் என்றால் அது நம்மை பற்றி யோசிக்க வைக்கிறது. நாம் யார்?நம்முடைய அடையாளம் என்ன? நமது பேராசை நம்மை எங்கே கொண்டு செல்லும்? நமது நினைவுகள் எவ்வளவு முக்கியம்? இயற்கையுடன் நம்முடைய உறவு எப்படி இருக்க வேண்டும்? என்பதையெல்லாம் சிந்திக்க வைக்கிறது. ஒரு நல்ல படம் ஒருவனை சுவாரஸ்யப்படுத்துவதோடு நிறுத்திக்கொள்ளாமல், ஒருவனை உலகம் மறக்க செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், ஒருவனை குதூகலப்படுத்துவதோடு நிறுத்திக்கொள்ளாமல்... ஒருவனது வாழ்வை நினைவுபடுத்தி அவனை சிந்திக்கவைக்க வேண்டும்.
Spirited Away திரைப்படம் ஒரு குழந்தையின் சாகசம் போல தெரிந்தாலும் அது ஒரு மனிதனின் ஆன்மீக பயணத்தை பேசும் காவியம் என்றே எனக்கு தோன்றுகிறது. ஒரு தியானம்.
வெற்றிடத்தின் பிரதிபலிப்பு
Spirited Away 2001 Japan



Comments
Post a Comment