புடாக்கு கம்பி - சிறுகதை



கொட்டிவாக்கத்தின் கடற்கரை, சென்னையின் பரபரப்பிற்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஒரு தனி உலகம். ஒருபுறம் பளபளக்கும் நவீன பங்களாக்கள், மறுபுறம் கொட்டிவாக்கத்தின் குப்பம். புதிதாக கட்டப்பட்ட ரசனையான வீடுகளும் இருக்கும் அதனுள் கடற்கரைக் உப்புக் காற்றில் தேய்ந்த பழங்கால வீடுகளும் இருக்கும். தேய்மான வீடுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். தெருக்களுக்குள் நடக்கும் போது இந்த பழமையை ரசித்தபடி தான் நடப்பேன் . பழைய ஜன்னல் டிசைன்கள் , வாசற்கதவுகள் , கூரைகள் , பால்கனிகள், கொள்ளைப்புறங்கள் என்று திருவான்மியூர் குப்பத்திலும் இதுபோல அழகிய பழமையான வீடுகள் இருக்கிறது . அவ்வப்போது வாடகைக்கு கேட்டுப்பார்ப்பேன் . கட்டுப்படி ஆகாது .

கொட்டிவாக்கதில் கடற்கரையை ஒட்டி உள்ள பதினைந்தாவது பிரதான சாலையின் கடைசியில், ராசு தெருவில் , கடல் அலைகள் மோதுகின்ற சத்தத்திற்கு மிக அருகில் இருந்தது அந்த 'பச்சை வீடு'. அந்த வீட்டைச் சுற்றி ஒரு மர்மம் எப்போதும் நிலவி வந்தது.

உரிமையாளர் சேகர். தனிவீடுகளுக்கு நடுவில் அறுபது வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு பழைய பங்களா வீடு. அந்த வழியாக செல்லும் எவரையும் அழகில் கவர்ந்து இழுத்து ஒருமுறை நின்று பார்க்கவைக்கும் வீடு. ஒரு காலத்தில் கப்பல் கேப்டனாக இருந்தவர் என்றும், ஏதோ ஒரு விபத்திற்குப் பிறகு உலகத்தையே வெறுத்து அந்த சேகர் இங்கே ஒதுங்கிவிட்டதாகவும் ஒரு கதை உண்டு. கடந்த பத்து ஆண்டுகளாக அவரை எவரும் வெளியே பார்த்ததில்லை.

அந்த வீட்டின் வாசலில் எப்போதும் இரண்டு ராஜபாளையம் நாய்கள் அமர்ந்திருக்கும். ஒன்று வெள்ளை நிறம் மற்றொன்று சுடர். அவற்றின் கண்களில் இருக்கும் தீட்சண்யம், அந்தத் தெருவில் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு அவர்கள் பாட்டிற்கு பரபரப்பாக நடப்பவர்களைக்கூட ஒரு நிமிடம் அச்சப்பட வைக்கும். அந்த நாய்களைத் தாண்டி ஒரு எறும்புகூட திருட்டுத்தனமாக உள்ளே நுழைய முடியாது என்பது கேள்வி. அந்த கேட்டின் வழியே சரசரவென்று ஒரு பாம்பு மிகவேகமாக சாலையின் எதிர்புற புதர்க்காட்டிற்குள் சென்று மறைந்ததை ஒருநாள் பார்த்தேன்.

அன்றிலிருந்து அந்த பக்கமே போகக்கூடாது என்று சபதம் செய்துவிட்ட பிறகு ஒரு நாற்பது முறை அந்த பக்கம் வாக்கிங் போயிருக்கிறேன். நண்பன் மைக்கில் ஜிம்மிற்கு அழைப்பான். ஜிம் முடிந்து பேட்மின்டன். "வாக்கிங் போற வயசா?” என்று கேட்பான்". "ஜிம்மில் பாம்பு ஊர்ந்து செல்லுமா" என்று கேட்பேன் . நிறைய கெட்ட வார்த்தைகளை சரளமாக பேசும் நண்பன். எப்படித்தான் சரஸ்வதி தாண்டவம் ஆட வேண்டிய நாவில் கெட்டவார்த்தைகளை சரள வைக்க முடிகிறது இவர்களால் என்று நினைப்பேன். வியப்பாக இருக்கும். என் பெயர் கண்ணன். அவனைவிட பத்துமடங்கு கெட்டவார்த்தை பேசுபவன். இருந்தாலும் வியப்பு தாளாது எனக்கு.

மைக்கில் என்னைப்போல இயக்குனர் ஆகவேண்டும் என்று ஆரம்பித்து இன்று அவன் ஒரு இளம் ஆவணப்பட இயக்குநர். மனிதர்களின் தனிமை மற்றும் அவர்கள் ஒளித்து வைத்திருக்கும் ரகசியங்களைப் படம்பிடிப்பதில் அவனுக்கு ஆர்வம் அதிகமாகி பத்து மர்மங்களை ஆவணப்படமாக எடுத்துவிட்டான். கடைசியாக திருநெல்வேலியின் ஒரு பழைய சுவரை பற்றி ஒரு ஆவணப்படத்தை எடுத்திருந்தான். பல இலக்கிய அரசியல் இயக்கங்கள் அவனை வைத்து ஏகப்பட்ட நிகழ்வுகளை திட்டம்போட்டு அவனை அழைத்தது. செல்லவில்லை. அதுபற்றி ஏன்? என்று கேட்காமல் அவனிடம் அன்று கடற்கரை காற்றில் மாத்திரைகளை போட்டபடி கொட்டிவாக்கம் பச்சை வீட்டை பற்றிய கதைகளை நான் அவனிடம் நசொல்லிக்கொண்டு இருந்தேன். கடுமையான தலைவலி இருந்தது எனக்கு. “தலைவலிக்கு மாத்திரை போடாமல் சுடுதண்ணியில் கசாயம் போட்டுக்குடி” என்றான். நான் மாத்திரைகளை நம்புபவன். அவன் “வீட்டு வைத்தியம். பாட்டி வைத்தியம்” என்று கதையடிப்பான்.

பாம்புக்கதையை ஒருநாள் சொல்லும் போது. நான் எதிர்பார்த்த ஆச்சர்யம் அவன் முகத்தில் இல்லை என்பதால் மேலும் அடுக்கி “அடிக்கடி நிறைய பாம்புகள், வெவ்வேறு நீளத்தில் வந்துபோக இருக்குது மச்சா நம்பலன்னா இதப்பார்” என்று எனது மொபைலில் இருக்கும் காணொளியை காட்டும் வரை இழுத்தது அவனது நம்பிக்கை . காணொளியை பார்த்ததுமே அவனுக்குள் ஒரு பொறி தட்டியது. சேகரை பற்றி ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது தீர்மானமானது. பின்பு பல முயற்சிகளுக்கு பின் அதுவொரு பிடிவாதமானது . எப்போது அவர் வெளியே வருவார், போவார் என்று யாருக்கும் தெரியாது. சவுதி பணக்காரன் பாகிஸ்தானில் குடிபுகுந்து காட்டிய மர்மத்தை போல சேகரும் அந்த பழைய பங்களாக்குள்ளேயே பலவருடங்களாக ஒரு தீவிரமான மர்மத்தை அறுவடைசெய்துகொண்டிருந்தார. நூறு முறை அந்த தெருவில் நடந்திருப்பேன் நானே ஒருமுறை கூட அந்த சேகரை நேரில் பார்த்ததில்லை .

ராசு தெருவின் மக்கள் சொல்லிதான் அப்படி ஒருத்தர் உயிருடன் நடனமாடுகிறார் என்பதே எனக்கு தெரியும் . அவர்களே பத்து வருடங்களில் மூன்று நான்கு முறை தான் பார்த்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . காண்பது அரிதிலும் அரிது . பங்களாவுக்குள் மெயின்டனன்ஸ் யார் என்று பார்த்தால் அவருக்கு சமைத்துக்கொடுக்க அந்த ராசு தெருவிலேயே வாழும் மீனவர் தாத்தா கோபியின் இருபது வயது பேத்தி. சேகருக்கு சமைத்துக்கொடுக்க அந்த பங்களாவுக்கு உள்ளே வெளியே போய்ட்டு வரும் ஒரே ஆள் . அத்தனை மெய்ன்டனன்ஸும் அதுதான் . தோட்டக்காரர் அங்கொருவர் வீட்டிலேயே தங்குகிறார். கட்டிடத்தொழில் செய்பவர்களின் உடல்வாகு போலல்லாமல் கட்டுமஸ்தான உடம்பு. அதுமட்டுமல்லாமல் கழிவுநீர் அடைப்பு எடுத்தல் , எலெக்ட்ரிஷன் , பிளம்பர் வேலைகளுக்கு அவ்வப்போது அவர்களை உள்ளே அழைத்து மேற்பார்வை மற்றும் சம்பளம் எல்லாம் அந்தம்மா தான் .

நன்கு படித்த பெண் . நுனிநாக்கு ஆங்கிலம். ஸ்கோடா கார் வந்து அவர் வீட்டு வாசலில் நிற்கும். பத்து மணிக்கு டிசிஎஸ் வேலை . காலை நான்கு மணிக்கு அந்த வீட்டிற்குள் புகுந்து சமையல் செய்து, தோட்டக்காரருடன் சேர்ந்து பங்களாவின் பல இடங்களை சுத்தம் செய்து முடித்து நான்கு மணிநேரம் கழித்து காலை எட்டு மணிக்கு வெளியே வந்து அதனுடைய வீட்டு தாத்தாவிற்கு மூன்று வேளை உணவும் செய்து வைத்துவிட்டு வேலைக்கு கிளம்பும் . மீன் குழம்பு அவள் வீட்டு ஜன்னல் வழியே மணக்கும். தோட்டக்காரன் மட்டும் சேகருடன் பங்களாவிற்குள் வாழ்கிறான் . அவன்கூட பார்த்ததில்லை என்கிறார்கள் திண்ணை புரணிகள். “அவனாவது வெளியே வருவானா? தமிழ் பேசுவானா? அப்ப எப்படின்னா சொல்றீங்க அவன்கூட பாக்கலன்னு? கேடிவி கேஆர்விஜயானு நீ வேற ஏன்னா?” என்று கேட்டதற்கு ஒரு நாள் ஒரு பெரியவர், “ஹிந்திக்காரம்பா அவன்ட்ட என்னத்த போய் கேக்க சொல்ற நீ?” என்றார். வடமாநில ஆசாமி . பீஹார் .

இவர்களின் கதைகளெல்லாம் கேட்டுவிட்டு “எப்படியாவது அந்த பங்களாவுக்குள் நுழைந்து, ஒரு படத்தை எடுத்துவிட வேண்டும் என்று என்னிடம் முயற்சி எடுத்து அந்த பெண்ணிடம் பேசி அவரிடம் பேசி ஏற்பாடு செய்”ய சொன்னான் மைக்கில் . ஆவணப்படம் எடுப்பதில் “எனக்கு ஆர்வமில்லை” என்று சொன்னேன் . கதையெழுதி படமாக வேண்டுமானால் எடுக்கலாம் . “பேய் படமா எடுத்தா பயங்கரமா இயக்கும். ஏன் சேகரே ஒரு பேயாக இருந்தா? செம்மையா இருக்கும்ல” என்று அவனை மூளைச்சலவை செய்வேன் . ஆனால், ஆவணப்படம் எடுப்பதில் பிடிவாதமாக இருந்ததவன் எப்படியாவது இதை சாதிக்க சொல்லி கேட்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டான். அவன் சொல்லும் சாதனையை செய்வது அவ்வளவு எளிதல்ல. சேகரை சுற்றி இரண்டு அரண்கள் இருந்தன. ஒன்று, அந்த ஆக்ரோஷமான நாய்கள். இன்னொன்று, அந்த வீட்டை நிர்வகிக்கும் செல்வி .

சுறுசுறுப்பான பெண் போல தோன்றினாலும் அவளது முகத்தில் ஒரு அமைதியும், அதே சமயம் ஊடுருவ முடியாத ஒரு ஆழமும் இருக்கும். “என்ன சோகம்?” என்று இதுவரை என்னால் ஊகிக்கமுடியவில்லை . அவளின் வீட்டிற்கு வெளியே தாத்தா வைத்திருக்கும் பெட்டிக்கடையில் சில விடுமுறை நாட்களில் அவளை பார்க்கமுடியும். ஃப்ளிப் மாடல் கொரியா ஃபோன் வைத்திருப்பாள். அவளுடைய காதலனுக்கு டெக்ஸ்ட் செய்துகொண்டிருக்கிறாள் என்று நினைப்பேன். கொடுத்துவைத்தவன். பேரழகியொருவள் பெட்டிக்கடைக்குள்ளிருந்து ஃபோன் பார்த்துக்கொண்டிருக்கும் ஃப்ரேமை புகைப்படம் எடுக்கலாம் என்று தோன்றும். ஈரானிய சினிமா போஸ்டர் பெண் போல அமர்ந்திருப்பாள். பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றினாலும், பத்து ரூபாய்க்கு விற்கும் குளிர்ந்த ரஸ்னா பெப்சி ஒன்றை வாங்குவேன். “என்ன ஃப்லேவர்?” என்பாள். “ஸ்தாபிரி” என்பேன். “ஸ்டாபெரினு சொல்லணும்” என்பாள். “உன் உதடு” என்று சொல்லவந்தேன் என்று சொல்ல தோன்றும். ஆனால் அவளுடனான எனது உரையாடல்களின் நீளத்தை வளர்க்க அமைதியாக சிரித்தபடி தலையாட்டுவேன். என்னை பழித்தபடி என்னைப்போலவே தலையாட்டி சிரித்துவிட்டு மறுபடி கொரியாவிற்குள் மூழ்கிப்போவாள். கொரியா ஃபோனை பிடுங்கிப்போட்டுவிட்டு அவளுக்கு ஐபோன் வாங்கிக்கொடுக்கலாமா? என்று தோன்றும். நானே எட்டு வருடங்கள் அப்டேட் செய்யாமல் ஒரு சேம்சங் ஃபோனை தான் பயன்படுத்துகிறேன் என்று நினைத்துக்கொள்வேன். ரஸ்னா பெப்சி, தேன்மிட்டாய், தேங்காய் பிஸ்கட், டிப்பிடிப்பி சிப்ஸ் என்று அவளிடம் சில சமயங்களில் பேசியிருக்கிறேன் . ஃபிங்கர் அப்பளத்தை எப்படி காதலாக மாற்றலாம் என்று யோசிப்பேன். ஆனால் அப்படிப்பட்ட உரையாடல்களால் கிழிக்க முடியாத அமைதி அவளுடையது. மைக்கில் சொல்லி பலமுறை முயற்சி செய்தும், செல்வி அந்த சேகரை பற்றி எதுவும் சொல்லவில்லை . அப்படியென்ன ரகசியம் ?

அப்படியென்ன மர்மம் என்று அவளை அதட்டி கேட்க தோன்றும் . அதைவிட படம் எடுப்பது முக்கியம் மைக்கிலுக்கு. அதைவிட உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பது எனக்கு முக்கியம் . சேகர் எதை மறைக்கிறான் ? கடைசியாக கப்பலில் என்ன நடந்தது ? எதனால் விபத்து நடந்தது ? வாழ்க்கையை வெறுத்து மனிதர்களிடம் தொடர்பற்ற நிலைக்கு அவனின் மனநிலையை கொண்டு சென்றது எது ? பணம் இல்லையென்றால் இதே மனிதர்களற்ற வாழ்வியலை ஜன்னலை பார்த்தபடி இருட்டறைக்குள் அவனால் வாழமுடியுமா ? என்று அடாவடி கோபத்தின் நீட்சிகளாக அவனுடைய எல்லையை மூக்கால் உரசிக்கொண்டிருந்தது எனது பொறுமை .

"அவர் யாரையும் பார்க்க விரும்பல. நீங்க கிளம்புறீங்களா?". இதுதான் செல்வியின் வழக்கமான பதிலாக இருந்தது . பங்களாவின் ஏழடி உயர மெய்ன் கேட்டை வலது கையில் ஓங்கி பிடித்தவாரு இடது கையை இடுப்பில் வைத்துக்கொண்டு நிலவொளி பின்னால் மின்ன அவள் பேசுவது கடலலை குரலாக கனவில் வருமொரு பெண் தெய்வ சிலை போல காட்சியளித்தாள். கடற்கரை காற்று என் முகத்திற்கு அடிக்கிறதா ? அவளின் கூந்தலுக்கு அடிக்கிறதா ? என்று சந்தேகம் எழுமளவிற்கு அவளின் அழகை மெருகேற்றும் காற்று எனது மூக்கிற்குள் சென்று கண்களை குளிரவைத்தது. அவளோடு பேசி ரசிக்கும் காலத்தை நிறுத்தும் இரவுகளை நான் என்றும் மறந்ததில்லை . அவளது தேவதைத்தனத்தை ரசிப்பவன் நானாக இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் தான் செட்டானது.

காதல் விஷயத்தில் மைக்கில் இடத்தில் இருக்கும் ஆண்கள் தான் எனக்கான வில்லன்கள். எப்போதுமே அப்படிதான் . உயிருக்கு உயிரான காதலி என்று நான் நினைத்தால், எனது உயிருக்குயிரான நண்பனை ஏற்கனவே அவள் காதலித்து கொண்டிருப்பாள் . தலைவிதிகளை நான் நம்புவதில்லை . ஆனால் தடுமாறும் வழக்கமான உயிர் நண்பர்களைப்போல 'சாவியே கிடைத்ததும் கம்பிக்கென்ன வேலை ? ' என்று என்னை கழட்டிவிடுபவனல்ல மைக்கில் . நல்ல நண்பன் . துணைக்கு வைத்துக்கொண்டான் . ஆவணப்படமே ஆர்வமில்லாத எனக்கு அதே படத்தின் உதவி இயக்குனராக பயன்படுத்திக்கொண்டான் . ஆனால் எனது நோக்கமோ சேகரின் மர்மத்தை அவிழ்ப்பது என்பதால் பயணத்தை தொடர்ந்தேன் . தடமாறி தடுமாறுமொரு மர்மத்திற்காக மைக்கில் திசைமாறாமல் இருந்தால் சரி .

ஒரு மழைக்கால மாலையில், மைக்கிலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. நாய்களில் ஒன்றான சுடர் நிற நாய்க்கு காலில் காயம்பட்டுத் தவிப்பதைப் பார்த்தவன், துணிச்சலாக உதவி செய்ய முன்வந்தான். அந்த நாயின் மூர்க்கத்தை தடுத்து, அதற்கு மருந்திட அவன் காட்டிய கனிவு செல்வியின் மனதைச் சற்று மாற்றியிருக்க வேண்டும். ஒரு நாய், இப்படியொரு வாய்ப்பை வாங்கித்தரும் என்று நாங்கள் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை . நாயை தாண்டி எப்படி போவது என்று யோசித்த நாங்கள் . நாயை வைத்தே எப்படி போவது என்று யோசிக்கவில்லை . டம்மிக்களாக திட்டம் தீட்டியிருக்கிறோம். புடாக்கு என்று சொல்வார்கள் . அப்படி புடாக்குத் தனமாக நேரத்தை வீணடித்திருக்கிறோம் . நாய்க்கு நடந்த ஒரு விபத்து எங்களுக்கு வாய்ப்பை வாங்கி கொடுத்திருக்கிறது . முதல்முறையாக அந்த பச்சை வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டோம்.

வீட்டின் உட்புறம் ஒரு நாவலின் பழுப்பு நிற கற்பனையைப் போல விரிந்தது. பழைய மரச் சாமான்கள், கடல் வரைபடங்கள், துருப்பிடித்த திசைகாட்டிகள், சக்கரங்கள் உடைந்த நாற்காலிகள், ஆதிகால தேக்கு மர சோஃபாக்கள் கவிழ்ந்து கிடத்தப்பட்டு அந்த இடமே ஒரு கால இயந்திரப் பயணத்தை போல நிறம் மாறியது. முதல் மாடியில் இரண்டு மூடிய அறைகள். இரண்டாம் மாடியில் ஒரு மூடிய அறை அங்கிருந்துதான் சேகர் எப்போதும் கடலை பார்த்துக்கொண்டிருப்பார் என்று செல்வி சொன்னாள். "கடலில் இருந்து பலமுறை பார்த்திருக்கிறோம். அவரை பார்த்ததில்லையே " என்று மைக்கில் கேட்டதற்கு செல்வியிடம் பதிலில்லை . இவன் விடவில்லை . இருவருக்கும் ஒரு ரசாயன துள்ளலின் காந்தவிசை நடனத்தின் உரையாடல் நீண்டு கொண்டிருந்தது . அவர்களை பின்தொடர்ந்து அடிபடாத வெள்ளை நிற ராஜபாளையத்துடன் நான் படிகளில் ஏறிக்கொண்டிருந்தேன் .

"ஏன் அவர் கீழே வருவதில்லை?" என்று கேட்டான். செல்வி புன்னகைத்தாள். "சில நேரங்கள்ல, நாம உலகத்த விட்டு விலகி இருக்கோம்னு நினைப்போம். ஆனா உண்ம என்னன்னா, உலகம் நம்மள விட்டு விலகிப் போயிருக்கும். அவர் அந்தத் தனிமையை ரசிக்கிறார். அப்படி நெனச்சுக்கோங்க" என்றாள். அதற்கு இவன் "புரியுது" என்றான் . "என்ன புரிஞ்சிருச்சு இவருக்கு " என்று நான் நினைக்க எத்தனிக்கையில் மைக்கில் தனது கேள்விகளின் மூலம் மெல்ல மெல்ல அந்த வீட்டின் மர்ம அடுக்குகளைத் திறக்க ஆரம்பிக்கிறான் என்பதை நான் புரிந்துகொண்டேன். ஒரு உண்மை புரிந்தது. சேகர் அங்கு ஒளிந்து கொள்ளவில்லை; அவர் அங்கு பாதுகாக்கப்படுகிறார். யாரோ ஒருவரிடமிருந்து அல்ல, தன் சொந்த நினைவுகளிடமிருந்து.

அடிக்கடி சேகர் வீட்டிற்கு செல்வி மூலமாக நாங்கள் உள்ளே சென்றோம் . கோழி , மட்டன் , காடை , கனவா என்று ஒவ்வொரு காரணத்தை வைத்து உள்ளே செல்வோம் . செல்வி தான் எல்லாம் என்பதால் எங்களுக்கு எளிதாக இருந்தது . ஆனால் ஒருமாதம் ஆகியும் இன்னும் சேகரை பார்க்க முடியவில்லை . செல்வியுடன் சேர்ந்து காலை ஐந்து மணிக்கு சம்மந்தமே இல்லாமல் சமைத்துக்கொண்டிருக்கும் நாங்கள் பொறுமையிழந்து "சேகர் சார பார்க்க முடியாதா ? " என்றதற்கு "சொல்லிருக்கேன் . நேரம் வரும் போது" என்றாள் . பெரிய மர்மமெல்லாம் இல்லையே ? இதை வைத்து என்ன எடுக்கப்போற ? நான் சொன்ன பேய்க்கதைக்கு ஒரு லொகேஷனாவாது யூஸ் பண்ணிக்கலாம்ல ? " என்றேன் . அங்கு சில நாட்கள் தோட்டக்காரனுடன் சேர்ந்து தங்க ஆரம்பித்திருந்தான் மைக்கில் .

இரண்டு மூன்று அறை பூட்டியிருந்தது அவனுக்கு தெரியும் . அதை திறக்கவேண்டும் . "ஓப்பனாவே கேட்கலாம்ல அவர பார்த்து அந்த சம்பவத்த பத்தி ஆவணப்படம் எடுக்கணும்னு " என்றதற்கு செல்வி , "பொறுமை"க்காக்க சொன்னதாக சொன்னான் . “மொக்க பங்களாக்குள்ள ஒரு மொக்கையன்னு தெரிந்திடுச்சு அப்பறம் அப்படியென்ன ராணுவ ரகசியம்?” என்று நினைத்துக்கொண்டேன் . மைக்கில் அங்கு தங்கியிருந்த நாட்களில் என்னிடம் இரவுகளில் ஃபோன் போட்டு பேசுபவன் திடீரென்று கட் செய்துவிடுவான். அவன் கவனித்த ஒரு விஷயம் அவனை உறைய வைத்திருக்கிறது. என்னையும்.

சேகர், அந்த அறையை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அவர் நினைக்கவில்லையாம். ஆனால், அவர் வெளியே வரத்துடிக்கும் ஒவ்வொரு முறையும், செல்வி மிக நுட்பமாக, அன்பாலான ஒரு வலையை அவருக்கு முன்னால் விரிக்கிறாள் என்றான். திடுக்கிட்டேன். படுத்துக்கொண்டே தான் அவன் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தேன். அதற்கே தூக்கிவாரி போட்டது எனக்கு. எந்தளவு தடிமனான வலை என்றால், இவரை தனியாக இரவில் விட்டு அவளது தாத்தா வீட்டில் தூங்கி, காலை விடிவதற்குள் அப்படி ஒன்றும் நடந்துவிடாது என்பது போல ஒரு அழுத்தமான தைரியத்துடன் இவளால் எப்படி சாவகாசமாக வரமுடிகிறது என்ற கேள்வி அந்த அர்த்தராத்திரி நடுநிசியில் எனக்குள் அதிர்ச்சியை கிளப்பிக்கொண்டிருந்தது. ஒன்பது மணி காலை உணவிற்கு விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்து கேட்டை திறந்து இந்த பங்களா வீட்டிற்குள் செல்வி நுழைவது இதனால் தானா? அவள் ஒவ்வொரு இரவும் சேகரின் அறையை பூட்டாமல் தான் செல்கிறாள் ஆனால் ஒவ்வொரு இரவும் அவள் தாத்தாவின் குடிசை வீட்டிற்குள் செல்லும்போது அவளது இடுப்பில் ஒரு பைனாகுலர் சொருகியிருக்கிறது என்றான். சேகரின் அறையில் இரவு முழுக்க ஒரு மந்தமான வெளிச்சத்தை தரக்கூடிய நைட்லைட் எரிகிறது என்றும் செல்வியின் தரைத்தள வீட்டிற்கும் இவரது இரண்டாவது மாடி அறைக்கும் இடையில் ராசு தெருவின் மின்விளக்கு மஞ்சள் வெளிச்சம் மட்டுமல்ல இரண்டு வீட்டு அறைகளின் ஜன்னல் கதவுகள் திறந்தேயிருக்கிறது என்று சொன்னபோது எனது ஈரக்குலை நடுங்கி மோமோஸுடன் சாப்பிட்ட சிவப்பு நிற சட்னி நெஞ்சைக் கரித்த கடியில் தூக்கம் சிதைந்துபோனது.

அவருக்குப் பிடித்த பழைய பாடல்களை ஒலிக்க விடுவது, அவர் விரும்பும் மீன் குழம்பின் வாசனையை வீடு முழுக்கப் பரப்புவது, நாய்களை விட்டு அவரிடம் விளையாடச் செய்வது என்று அவள்தான் சேகரை கட்டுப்படுத்தியிருக்கிறாள் . எதற்காக ? ஒருநாள் இரவு, தற்செயலாக சேகரை மைக்கில் பார்த்திருக்கிறான். நரைத்த முடி, தள்ளாடும் நடை, ஆனால் கண்களில் ஒரு தேடல். அவர் செல்வியிடம் ஏதோ கெஞ்சுவது போலப் பேசிக்கொண்டிருதிருக்கிறார். "செல்வி, ஒரேயொரு தடவ அந்தப் பழைய துறைமுகத்திற்குப் போய்ட்டு வரலாமா?" என்றிருக்கிறார். மிக அமைதியாக, அவர் கைகளைப் பற்றிக்கொண்ட செல்வி, "வெளியே ரொம்பக் காத்தடிக்குது. புயல் வரமாதிரி இருக்கு கேப்டன். உங்க உடம்பு தாங்காது. நாளைக்குப் பாத்துக்கலாம்." என்றிருக்கிறாள். மல்லாக்கப்படுத்து உறங்க முயற்சி செய்தேன். நெஞ்சம் அழுத்திக்கொண்டே போனது. அழுத்தம் நிற்கவில்லை.

அந்த 'நாளை' ஒருபோதும் வராது என்பது மைக்கிலுக்கு அப்போதுதான் புரிந்தது. ஏன் ? ஏனென்றால் அவனே ஒருமாதம் அவளது மாயத்தில் சிக்கியிருக்கிறான். அவனால் அங்கிருந்து வெளியே வரமுடியவில்லை. மைக்கில் தனது ஆவணப்படத்திற்காக பழைய ஆவணங்களை அவனுடைய லேப்டாப்பில் தேடியபோது, ஒரு அதிர்ச்சியான செய்தியைக் கண்டறிந்தான். சேகர் பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஒரு விபத்தில் தனது நினைவாற்றலை முழுமையாக இழந்துவிட்டார். அவருக்குத் தான் யார், தனது வீடு எது என்பது கூடத் தெரியாது.

செல்வி, உண்மையில் சேகரின் வீட்டு சமையற்கார பெண் அல்ல . அந்த பெட்டிக்கடை தாத்தாவும் செல்வியின் உண்மையான உறவினரே கிடையாது. அவள் டைடல் பார்க்கில் வேலை செய்யும் ஐடி கம்பெனி ஊழியரும் அல்ல . அவளுக்கு இருபது வயது என்பது அந்த தெரு மக்களுக்கு அவளே பட்டம்விட்ட கட்டுக்கதை, அந்த கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண். சேகர் செய்த ஒரு தவறால் தன் குடும்பத்தை இழந்தவள். ஆனால் அவள் சேகரை பழிவாங்க நினைக்கமல் மாறாக ஏன் அவரை ஒரு குழந்தையைப் போலத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாள்? என்று என்னிடம் பிஸ்விஸ் குரலில் சன்னமாக பதட்டத்துடன் கேட்டுக்கொண்டிருந்தான் மைக்கில். "டேய்! எனக்கு பதட்டமா இருக்கு? ஒன்னு காலைல பேசிக்கலாம் இல்லனா சத்தமா பேசு" என்றேன். "தோட்டக்காரன் இன்னும் தூங்காமல் என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறான்" என்றான் . எனக்கு அவன் என்ன சொன்னான் என்றே புரியவில்லை .

"ஏதோ அந்த பெண்ணிடம் பெரிய மர்மம் இருக்கிறது . கப்பல் விபத்தை சம்மந்தப்பட்ட ஏதோ மிகப்பெரிய மர்மம் சம்மந்தப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன் . காலை எழுந்ததும் சேகரையும் மைக்கிலையும் பார்த்து பேசிவிட்டு அழைத்துக்கொண்டு வரவேண்டும் என்று எனக்கு நானே கட்டளையிட்டு கொண்டேன் . செல்வியை மீறி வரவேண்டும் என்று சவால் விட்டு தூங்கப்போனேன் . சொக்கியது . உறங்கிப்போனது . பச்சை பங்களாவின் கருப்பு கேட்டை இம்முறை தனது இடது கையால் தாங்கிப்பிடித்து சிலையாக நின்றாள் செல்வி . அவளுக்கு பின்னால் இருந்த தோட்டம் இப்போதொரு கருப்பு காடாக மாறி என்னை நடனமாட அழைத்தது . அவளது கால்கள் வஞ்சரத்தின் வால்போல மாறியிருந்தது. செல்வி ஒரு கடற்கன்னி.

கம்பியின் வளைவுகள் சில கேள்விகளை சிந்தனை செய்தது. செல்வி , சேகரை பழிவாங்க நினைத்திருந்தால் அவரை ஏதாவது செய்திருக்கலாம்? அல்லது தெருவில் விட்டிருக்கலாம்? அல்லது அறைக்குள் அடைத்து துன்புறுத்தியிருக்கலாம்? ஆனால், அவரை இந்த பச்சை வீட்டிற்குள் ஒரு அரசனைப் போல ஏன் வாழ வைக்கிறாள்? அந்த ராஜவாழ்க்கை செல்வியின் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக ஏன் இருக்கவேண்டும் ? நினைவுகளை இழந்தவரிடம் இவளுக்கு என்ன வேலை ? அவளது குடும்பத்தை மீறி அந்த கப்பல் விபத்தை மீறி ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது? அவர் எங்கு பார்க்க வேண்டும், எதைச் சாப்பிட வேண்டும், யாரைப்பார்த்து பேச வேண்டும் என்பதை செல்வியே ஏன் தீர்மானிக்கிறாள்? உறக்கத்தில் மட்டுமல்ல அவளது அழகில் சொக்கிப்போய் கடற்கன்னியிடம் நான் கேட்டேன்,

"ஏன் இதைச் செய்கிறீர்கள்? இது தர்மமா?"

செல்வி கடலைப் பார்த்தபடி சொன்னாள்,

"இந்த உலகம் அவங்களுடையதுனு அவங்க நினைக்கிறாங்க. ஒவ்வொரு ஆணும் ஒரு கப்பலை ஓட்டுற கேப்டன்னு தங்களை நினைச்சுக்கிறாங்க. ஆனா, அந்தக் கப்பல் தங்குறதுக்கான கரையைக் கட்டுறது ஒரு பெண் தான். கரை நினைச்சா கப்பலை உள்ளே விடலாம், இல்லன்னா அலைகளிலேயே தவிக்க விடலாம். அவர் என் கட்டுப்பாட்டுல தான் இருக்கார்னு அவருக்குத் தெரியாது. மைக்கிலுக்கும் தெரியாது. அந்த தோட்டக்காரனுக்கும் தெரியாது. என்னோட கட்டுப்பாட்ட மீறுனா அவங்களே ஒருத்தருக்கொருத்தர் எதிரியா மாறிப்பாங்கனு அவங்களுக்கு தெரியாது. அதுதான் அவங்களுக்கு நான் கொடுக்குற மிகப்பெரிய மரியாதை. கடலுக்கு எல்லையே இல்லைனு தோணும். ஆனால், கரை இருக்கும் வரைதான் கடலுக்கு அழகு. சுதந்திரம் என்பது நாம் நினைப்பது போலச் சிறகுகளை விரித்துப் பறப்பதில் இல்லை கண்ணா; நாம் நேசிக்கப்படுபவர்களின் அன்பெனும் சிறைக்குள் விருப்பத்துடன் கைதியாவதில் இருக்கிறது."

நானும் பச்சை பங்களாவிற்குள் சென்று பெருங்கடல் மயக்கத்திற்குள் கரையக் காத்திருக்கிறேன்.


புடாக்கு கம்பி
சிறுகதை
கேபிஆர்


  click this QR get me a coffee

Comments

Popular posts from this blog

சோம்பேறியின் நினைவுச்சின்னம் - சிறுகதை

சாவுக்கப்பால் - சிறுகதை

கல்முகத்தின் காதல் - General 1925 USA