வண்ணமயமான திரைப்பட காவியம் - 2026 Cannes Film Festival
கான் திரைப்பட விழா அமைப்பு 2026 போட்டியிடும் 21 படங்களின் பட்டியலை தற்போது வெளியிட்டிருக்கிறது. அத்தனை படங்களையும் இம்முறை பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். கண்டிப்பாக பார்க்க வேண்டிய பத்து படங்களென நானொரு பட்டியல் போட்டிருக்கிறேன்.
தடைசெய்யப்பட்ட இயக்குனரான ஆன்ரே ஸ்வியகின்ஸேவின் MINOTAUR என்றொரு ரஷ்ய திரைப்படம். ஒரு தொழிலதிபர் தனது தொழிலிலும் குடும்பத்திலும் ஒரேநேரத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடி. அதிலிருந்து வெளிவரும் அரசியல் தான் கதை. லாட்வியாவில் ரகசியமாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. இயக்குனரின் முந்தைய படமான LEVIATHAN எனக்கு மிகவும் பிடித்த படம் என்பதால் இதை மிகவும் உற்றுநோக்குகிறேன். இந்த இயக்குனரின் ஒவ்வொரு படமும் புட்டின் ஆட்சியின் மீதான கடுமையான விமர்சனமாக இருக்கும் .
ஜேவியர் பார்டெம் நடித்திருக்கும் THE BELOVED. ஒரு பிரபல இயக்குனர் சஹாரா பாலைவனத்தில் படம் எடுத்துக்கொண்டு இருக்கும்போது தனது மகளை சந்திப்பதால் ஏற்படும் உறவு சிக்கல்களை பற்றிய கதை. ஸ்பானிஷ் சினிமாவின் ஒரு உளவியல் திரில்லர் கதை.
நாடுகடத்தப்பட்ட எழுத்தாளர் தாமஸ் மன் இடிபாடுகள் கிடக்கும் ஜெர்மனி சாலைகளில் அவரது மகளுடன் ஒரு கார் பயணம் மேற்கொள்கிறார். COLDWAR படத்தை எடுத்த இயக்குனர் பாவெல் பாவ்லிகோவ்ஸ்கியின் FATHERLAND. ஒரு உண்மை கதையின் தழுவல்.
ரொமேனிய நாட்டைச் சேர்ந்த அப்பா, நார்வே நாட்டைச் சேர்ந்த அம்மா நார்வேயின் ஒரு மலை கிராமத்திற்குக் குடிபோகிறார்கள். அங்கே அண்டை வீட்டில் இருக்கும் ஹால்பெர்க் குடும்பத்துடன் நட்பு ஏற்படுகிறது. ஆனால், தங்கள் குழந்தைகள் விஷயத்தில் ஏதோ தொல்லை தரும் நடத்தையை சந்தேகிக்கிறார்கள். இந்த பிரச்சனையால் அவர்களின் வாழ்க்கை எப்படி குழம்பிப்போகிறது? கிராமமே அவர்களை எப்படி பார்க்க ஆரம்பிக்கிறது? என்பது கதைக்களம். FJORD. நார்வே நாட்டு திரைப்படம் . இயக்குனர் Cristian Mungiu. ஏற்கனவே Palme d'Or வென்ற 4 MONTHS, 3 WEEKS AND 2 DAYS படத்தின் இயக்குனர்.
லீ செடோ நடிப்பில் திரையிடப்பட இருக்கும் GENTLE MONSTER. ஒரு பிரபல பியானோ கலைஞர் குடும்பத்துடன் கிராமத்திற்கு குடிபெயர்ந்த பின், ஒரு கொடூரமான உண்மையைக் கண்டுபிடிக்கிறார். பேயா ? வேறேதாவது உளவியல் சிக்கலா ? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
லீ செடோவின் மற்றொரு ஃப்ரெஞ்சு திரைப்படம். UNKNOWN. ஒரு ஆண் யாரென்றே தெரியாத அன்னிய பெண்ணின் உடலில் விழித்தெழுகிறான். இயக்குனர் Arthur Harari. ANATOMY OF A FALL திரைக்கதை எழுத்தாளரின் இயக்கம். பிரித்து மேய்ந்திருப்பார். இது அநேகமாக ஃபெமினிஸ படமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். பார்க்கலாம். ஃபெமினிஸ்ட் த்ரில்லர் எப்படியிருக்கிறது என்று.
இயக்குனர் கொஜி ஃபுக்கடாவின் NAGI NOTES. ஜப்பானிய திரைப்படம். ஒரு சிற்பி, தனது கடந்தகால காதலின் நினைவுகளால் பாதிக்கப்பட்டு, தனது கலைகொண்டு குணமாகும் முயற்சி. ஃபுக்கடாவின் ஹிப்னாட்டிக் கதைசொல்லலை அவரது HARMONIUM 2016 படத்தில் பார்த்திருப்போம். அவரே ஒரு கவிதையை போல படங்களை இயக்குபவர். பத்தாதற்கு இந்த கதையே ஒரு ஜப்பானிய கவிதை போல இருப்பதால் அவரின் திரைமொழி கவித்துவத்தை இந்த நாகி நோட்ஸில் எதிர்பார்க்கலாம்.
ஒரு கொரிய திரில்லர் மாஸ்டரின் sci-fi த்ரில்லர். HOPE. கொரியன் திரைப்படம். WAILING படத்தின் இயக்குனர் நா ஹாங் ஜின். தொலைதூர துறைமுக நகரத்தின் எல்லையில் ஒரு மர்மமான அறிவியல் பரிசோதனையினால் ஒரு கண்டுபிடிப்பு நடந்துவிடுகிறது. அந்த நகர மக்கள், ஒருபோதும் சந்தித்திராத ஒன்றுக்கு எதிராக உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஒரு தப்பிப்பிழைக்கும் போராட்டத்தில் ஈடுபட நேரிடுகிறது. எப்படிப்பட்ட சர்வைவல் த்ரில்லர் படமாக இருக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
ஜப்பானிய திரைப்படமான SHEEP IN THE BOX. ஹீரோக்கஸு கொரீடா இயக்கம். SHOPLIFTERS படத்திற்கு கான்ஸின் தங்கக்கை விருது பெற்ற இயக்குனர் . ஒரு கட்டடக் கலைஞராகப் பணிபுரியும் மனைவிக்கும் ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தும் கணவருக்கும் ஒரு மனித உருவ ரோபோ ஒன்று அவர்களின் மகனாக வீட்டிற்குள் வருகிறான். குடும்பமாக அவர்கள் உறவு எப்படி நகரப்போகிறது என்பது திரைக்கதை. இதுவும் சைன்ஸ் ஃபிக்ஷன் கதை.
இயக்குனர் அக்சார் ஃபர்ஹாதியின் PARALLEL TALES. ஒரு இளைஞன், தன்னைவிட வயதான ஒரு பெண்ணின் மீது மிகுந்த காதல் கொண்டு அது வெறியாக மாறி எப்படிப்பட்ட இருண்ட பயணமாக அந்த வாழ்க்கை மாறுகிறது என்பதை பேசும் கதை.
BITTER CHRISTMAS. ஸ்பானிஷ் இயக்குனர் பெட்ரோ அல்மொடோவர் படைப்பு. ஒரு விளம்பர இயக்குனர் தனது தாயின் மரணத்திற்கு வருந்தாமல், லன்சரோட் தீவிற்கு ஒரு நண்பருடன் பயணம் மேற்கொள்கிறார். ஆல்பெர் காம்யூவின் அந்நியன் கதை நினைவிற்கு வருகிறது. அதன் தழுவலாக இருக்கலாம். அல்மொடோவர் துக்கத்தையும் நகைச்சுவையையும் அழகாக எழுதி அற்புதமான வண்ணங்கள் கொண்ட ஒளிப்பதிவையும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களை இயக்கி ஒரு முழுமையான திரைப்பட அனுபவத்தை கொடுப்பதில் வல்லவர். அவருடைய இயக்கத்திற்கு நான் ரசிகன் என்பதை விட அவருடைய ஸ்பானிஷ் ரசனை கொண்ட ஸ்டைலான வண்ணங்கள் கொண்ட திரைப்பட அனுபவத்திற்கு நான் தீவிரமான ரசிகன்.
21 படங்களையும் பார்த்துவிடுவேன் என்றாலும் இந்த பத்து சொச்ச படங்களை முதலில் பார்த்துவிட வேண்டும் என்பது திட்டம்.
கேபிஆர்










Comments
Post a Comment