நேரடியாக பேசும் திரைக்கதை - Crime 101 USA
டான் வின்ஸ்லோவின் நாவலை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். நாவலை படிக்கவில்லை. படித்திருக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறன் என்றால் படத்தின் கதை மூன்று முக்கிய கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு சுழல்கிறது. ஒருவன் மைக் டேவிஸ். திருடன். 101 என்ற சாலையை பயன்படுத்தி திருட்டுத் தொழில் செய்து வருபவன். மற்றொருவன் லுப்ஸ்னிக். காவல் துறையில் உள்ள ஒரு நேர்மையான டிடெக்டிவ். மூன்றாமவள் ஷரோன் கோல்வின். ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரியும் பெண். திருடுபோன ஆபரணங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய பொறுப்பில் இருப்பவள். மூவரையும் இணைக்கும் பாலமாக ஓர்மன் என்ற மனநிலைப் பிறழ்வு கொண்ட இளைஞன் வருகிறான்.
திரைக்கதை நம்மை நேரடியாகக் கதைக்குள் தள்ளி விடுகிறது. ஒரு திரைக்கதை அதை தான் செய்யவேண்டும் என்று நினைப்பேன். “தயவுசெய்து அதை செய் என்பேன்”. சில சினிமா நடிகர்கள் சிவனிடம் நேரடியாக பேசுவார்கள். நான் ஒரு படத்தின் திரைக்கதையுடன் நேரடியாக பேசுபவன். மைக், ஒரு திருட்டை அரங்கேற்றும் காட்சியுடன் படம் தொடங்குகிறது. அதுவும் பார்ட் லைட்டன் இயக்கத்தில். ரசனையுடன் ஆரம்பித்த படம் ரசிக்கும்படி இருந்ததே எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. ஒரு திருட்டை அதுவும் கதாநாயகன் செய்யும் திருட்டை எடுத்துக்காட்டும் போது இயக்குனர், மைக் என்பவன் எப்படியெல்லாம் திட்டமிட்டு, கவனமாக, யாருக்கும் எந்தவிதமான தீங்கும் செய்யாமல் எப்படி செயல்படுகிறான் என்பதைக் காட்டிவிடுகிறார். அதுவே கதாநாயகனின் பாத்திரத்தை பற்றிய ஒரு தெளிவை நம்மிடம் ஏற்படுத்தி தெளிவாக கதையை முன்னெடுத்து செல்கிறது. பக்கம் பக்கமாக வசனங்கள் பேசிக்கொண்டு இருக்காமல்… Show, Don’t Tell திரைக்கதை விதியை சிறப்பாக பயன்படுத்தியிருப்பார் இயக்குனர்.
ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் அவர்களின் சொந்த வாழ்க்கை, அவர்களின் அன்றாட போராட்டங்கள், அவர்களின் பின்னணி ஆகியவற்றுக்கும் திரைக்கதையில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெண் கதாபாத்திரங்கள் தனித்துவமான மனிதர்களாக இதில் ஓரளவிற்கு காட்டப்பட்டுள்ளனர். திரைக்கதையின் மையக் கதாபாத்திரங்களுக்காகவே வாழாமல், பிறருடைய தேவையை பூர்த்தி செய்யவே பிறப்பெடுத்த கதாபாத்திரமாக உழலாமல், தனக்காக வாழும் பெண் கதாபாத்திரங்கள் பணியிடத்தில் இயல்பாக அவர்களுடைய சொந்த வாழ்க்கையை வாழ்வது போன்று படத்தில் பிரதிபலிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, தனது முதலாளியை எதிர்த்துப் பேசும் ஷரோனின் காட்சி, அட்டகாசமாக எழுதப்பட்டு காட்சியமைக்கப்பட்டு இருக்கிறது. இப்படி ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் அவர்களின் தனிப்பட்ட வேலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டு அதன் சிறப்பு புரிந்து இயக்கப்பட்டிருப்பதால் நமக்கு கதை மீதும் மாந்தர்களின் உணர்வுகள் மீதும் மதிப்பு ஏற்படுகிறது. கதையை ரசித்து கேட்க முடிகிறது. படத்தை கொண்டாட்டமாக பார்க்க முடிகிறது. கதாபாத்திரம் நன்றாக எழுதப்பட்ட திரைக்கதை இதை செய்யும்.
ஆனால் அதுவே பலவீனமாகவும் மாறுகிறது. மைக், ஓய்வு பெற நினைப்பதற்கு முன்பு கடைசியாக ஒரு திருட்டை செய்துவிட்டு எல்லாவற்றையும் முடித்துக்கொள்ளலாம் என்று நினைப்பது ஒரு க்ளிஷே. நூறு படங்களில் பார்த்த க்ளிஷே. அது சொல்லப்பட்ட விதமும் எந்தவித சுவாரஸ்யத்தையும் கொடுக்கவில்லை. இதையெல்லாம் திரைக்கதை எழுத்தாளர் பார்ட் லைட்டன் கவனித்திருக்க வேண்டும். இதற்கிடையே, டிடக்டிவ் லுப்ஸ்னிக்கின் தனிப்பட்ட வாழ்க்கை சிதறிக் கிடக்கிறது. மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்கிறான். காவல்துறையில் அவனது நேர்மையான கோட்பாடுகள் காரணமாக ஒதுக்கப்படுகிறான். ஷரோனின் பணியிடத்தில் பாலினப் பாகுபாடு நிகழ்கிறது என்று எல்லா சூழ்நிலைகளும் க்ளிஷேவாக இருப்பது சலிப்புணர்வை கொடுக்கிறது. இந்தப் பிரச்சனைக்கு முக்கியக் காரணம் கதாபாத்திரங்களின் உணர்வுப்பூர்வமான பயணத்தை விட, அவர்களின் சூழ்நிலை மீது அதிக கவனம் செலுத்தியிருப்பதே.
பின்னணி கதைகளும் ஏனோதானோ என்று இருக்கிறது. முழுமனதாக எழுதப்பட்டு காட்டப்படவில்லை. இரண்டுங்கெட்டான் மனநிலையில் பின்னணி கதையை சொல்லியதால் கடுப்பாகிவிட்டது எனக்கு. கதாநாயகனுடன் உணர்வுப்பூர்வமாக பயணித்த வாழ்க்கைக்கு payoff கொடுக்காமல், வெறும் சிலநொடிகளே சொல்லப்பட்ட கதைக்கு தீர்வு கொடுப்பது திரைக்கதையின் தெளிவற்ற போக்கு. படத்தை கெடுத்த வெகுசில நுட்பங்களில் இதுவுமொன்று.
எரிக் வில்சனின் ஒளிப்பதிவு பாராட்டப்படவேண்டிய ஒன்று. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் இரவு, விளக்கொளி, 101 ஃப்ரீவே சாலையின் பனோரமிக் காட்சிகள் அனைத்தும் அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன. நகரின் பரந்துபட்ட நிலப்பரப்பை ட்ரோன் ஒளிப்பதிவு மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். மைக், பரபரப்பாக இருக்கும் காட்சிகளில், காரில் பொருத்தப்பட்ட மவுன்ட்டட் கேமரா அவனின் மனநிலையை நமக்குக் நேரடியாக கடத்த உதவுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனித்தனியான விஷுவல் ஸ்டைலில் ஒளிப்பதிவு செய்து கொடுத்திருக்கிறார் எரிக்.
கார் ஸ்டண்ட் காட்சிகள் மிகச் சிறப்பாக எடிட் செய்யப்பட்டுள்ளன. ஆனால், திரைக்கதையின் இன்னொரு பகுதியில், கதாபாத்திரங்களின் வாழ்க்கையை ஆராயும் காட்சிகளில் எடிட்டிங்கின் வேகம் தளர்ந்து படுத்துவிடுகிறது. ஒரு க்ரைம் திரில்லரில், பதற்றத்தை கூட்டிக்கொண்டே வர வேண்டிய அவசியம் இருக்கிறது. இயக்குனர் பார்ட் லேட்டனின் முந்தைய படம் அமெரிக்கன் அனிமல்ஸ் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. அதில், அரிய புத்தகங்களைத் திருடும் நான்கு இளைஞர்களின் கதை சொல்லப்பட்டது. அந்தப் படத்தின் டாக்குமெண்டரி ஸ்டைல் இந்த படத்தில் இல்லையென்றாலும் க்ரைம் 101 படத்தில் வரும் மைக்கின் திருட்டுத்தொழில் எத்திக்ஸ். குறிப்பிட்ட ஒரு நெடுஞ்சாலையை மையமாகக் கொண்டிருப்பது, திட்டமிட்டு திருடுவது, இரத்தக்களரி ஏதுமின்றி தொழிலை செய்வது என்று சில ஒற்றுமைகள் இருக்கிறது. சாதாரணமான பணமோகம் கொண்டு கொலைவெறி தாக்குதல் செய்யும் பைத்தியக்காரத்தனமான திருடனாக இல்லாமல் தெளிவாக சிந்தித்து திருட்டுத் தொழிலை ஒரு கலையை போல செதுக்கி வாழும் கதாநாயகன்.
க்ரைம் 101 ஒரு நல்ல படம். ஆனால், அது ஒரு கிளாசிக்காக மாறத் தவறியதற்கான காரணங்களில் முக்கியமானது கதாநாயகன் மைக் டேவிஸ் ஏன் இப்படி இருக்கிறான்? மனி என்பவர் அவனை எப்படி வளர்த்தார்? அவனுக்குள் இருக்கும் ஏக்கத்துக்கு காரணம் என்ன? இவை அனைத்தையும் வசனங்களாக சொல்லாமல், ஒரு 10 நிமிட முழுமையான ஃபிளாஷ்பேக் போல காட்டியிருக்கலாம். ஒரு முழுமையான குறும்படம் மாதிரி. ஏனெனில், மைக் ஒரு மர்மமான கதாபாத்திரமாக இருக்கிறான். அவனுடைய கதாபாத்திரம் அவனுடைய பின்னணி கதை எல்லாம் தெளிவாக எழுதப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தால் தான் நாம் அவனுடைய வலியை உணர முடியும். அப்போதுதான் படத்தின் இறுதியில் ஏற்படும் மாற்றம் உணர்வுபூர்வமாக நம்மை தொடும். தற்போது, அவன் ஒரு மூன்றாம் மனிதன் உணர்வை மட்டும் தான் ஏற்படுத்துகிறான். நண்பனாக தோன்றவில்லை.
ஷரோன் கோல்வின் கதாபாத்திரம் படத்தில் மிக முக்கியமானது. அவளுடைய கதைதான் படத்தின் அமெரிக்க சமூகத்தின் மீதான விமர்சனத்தை முன்னெடுத்துச் செல்கிறது. ஆனால், அவளது பணியிடப் பாகுபாடு காட்சிகள் க்ளிஷேவாக உள்ளது தான் பிரச்சனை. பலநூறு படங்களில் பார்த்து மரத்துப்போன சமூக விமர்சனங்களால் என்ன பயன்? உதாரணத்திற்கு, அவளது வயதை பற்றிய காட்சிக்குப் பதிலாக, அவளது திறமை மற்றும் பாலினம் காரணமாக அவள் எப்படி அந்த பணியிடத்தில் ஒதுக்கப்படுகிறாள் என்பதை மிக நுட்பமாகக் காட்டியிருக்கலாம். அதுமட்டுமின்றி படத்தின் இறுதியில் அவள் எடுக்கும் ஒரு முக்கியமான முடிவு அவளது கதாபாத்திரத்தின் மதிப்பை கூட்டுவதாக இல்லை. ஒரு பாதிக்கப்பட்டவளாக மட்டுமில்லாமல் டெசிஷன் மேக்கராக இருந்திருந்தால் சிறப்பான கதாபாத்திர வடிவமைப்பாக அவளுடையது இருந்திருக்கும். இப்போது பத்தோடு பதினொன்னாக போய்விட்டது. கதையின் முக்கியமானவளாக காட்டப்படுபவள் முதல் இடத்திற்கோ இரண்டாம் இடத்திற்கோ மனதுக்கு நெருக்கமாக வரவேண்டும் இல்லையா? பத்தோடு பதினொன்னாக போவதற்காகவா முழுக்கதையும் பார்த்துக் கொண்டிருந்தோம் என்ற கேள்வி எழுகிறது. மிக முக்கியமாக 101 ஃப்ரீவே சாலை ஒரு கதாபாத்திரமாக மாறியிருக்க வேண்டும்.
நேரடியாக பேசும் திரைக்கதை
Crime 101 2026
கேபிஆர்


Comments
Post a Comment