குடும்பஸ்தனின் துரோகம் - சிறுகதை
சென்னை திருவான்மியூரின் கடற்கரை ஓரம் தான் என்னுடைய வீடு இருக்கிறது. என்னுடைய வீட்டில் இருந்து நூறு மீட்டர் நடந்தால் கடல் வந்துவிடும். ஸ்ரேயா எனது பள்ளிக்கூட காதலி. நான் அவளை பார்த்துக்கொண்டே இருப்பேன். அவள் என்னை பார்த்துக்கொண்டே இருப்பாள். இதுதான் காதல். யாருமில்லாத பள்ளிக்கூட தளங்களில் படிக்கட்டுகளில் நின்று கொண்டு கடலை வறுப்பது காதல் அல்ல. செக்கில் ஆட்டிய எண்ணெயாக வழிவது காதல் அல்ல. கரண்ட் ஷாக் ஏற்றிவிட்டு மேடையில் கொக்கரக்கொக்கரக்கோ என்று ஆடுவது காதல் அல்ல . நாங்கள் பேசிக்கொண்டதே இல்லை. இதுதான் காதல். அப்படியொரு காதல். என்னை பற்றி எனது நண்பர்களிடம் பேசியிருக்கிறாள். “கண்ணா, ஏன் என்னை பார்த்து முறைத்துக்கொண்டே இருக்கிறான்?” என்று கேட்டிருக்கிறாள். “அவன் முறைப்பது எனக்கு பயமாக இருக்கிறது” என்று என் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறாள். நான் தான் காதல் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டேன். முறைக்கிறேனாம். நான் பயங்கரமாக காதலித்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்திருந்தேன். அதோடு கண்கள் பார்த்து மட்டுமல்ல காதலிப்பதையே நிறுத்திவிட்டேன்.
“இதுதான் காதல் என்பதா? இளமை கொஞ்சி நிற்பதா? காற்றின் காற்றிலோர் ஓசைக்கேட்குதே… சொல் மனமே” என்ற பாடல்கள் என் நாவிலிருந்து குழையத் தொடங்கின. அசைக்க முடியாத பாறாங்கல் மனது சிதைந்து போயின. உப்புக் காற்றின் வாசனையும், பழைய பங்களாக்களின் மௌனமும் கலந்த கடற்கரையோர சாலைகளில் தான் நான் தினமும் வாக்கிங் செல்வேன். பல சாலைகள் நான்கு பக்கமும் பிரிந்து பதினாறு. முப்பத்திரண்டு என பல்கிப்பெருகியபடி விரியும் திருவான்மியூரில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசையெடுத்து வாக்கிங் செல்வேன். இன்று எனக்கு முப்பத்தைந்து வயது.
நடை பயிற்சி அடிப்படை . கணையம் இன்சுலின் சுரப்பதை நிறுத்துவது போல அடிக்கடி கனவு காண்கிறேன் . முன்பொரு காலத்தில் எனக்கு அறிவுரை வழங்க வரும் பெரியோர்களை "காலம் போன காலத்தில் வாக்கிங் போகாமல் அறிவுரை ஒரு கேடா ? " என்று அங்கலாய்த்து தள்ளியிருக்கிறேன் . அவளுக்கு முப்பத்தி நான்கு வயது. நேஷனல் ஜாக்ரஃபி சேனலில் பார்ட் டைம் புகைப்படக்காரி. வேளச்சேரி அமெரிக்கன் பள்ளியில் ஒரு நிரந்தர ஸ்டாஃப். ஒரு லட்சம் சம்பளம். என்னை பார்க்க வந்திருந்தாள். பார்த்துவிட்டாள். பாவம். அவளுடைய தொடர்பெல்லாம் பள்ளிக்கூடம் படித்தபோதே அத்துப்போன தொடர்பு தான்.
ஆனால் ஒரு நாள் கடற்கரையில் நடந்தபோது சூரிய உதயத்தை புகைப்படங்கள் எடுக்கவந்தவள் என்னை பார்த்துவிட்டாள். ஒருலட்சத்தில் பத்தாயிரம் கூட என்னால் தொடமுடியவில்லை. பார்க்காத மாதிரி வேறு பக்கம் திசைதிருப்பிக்கொள்ளலாம் என்று உத்தேசித்தபோது பார்த்துவிட்டாள்.
பள்ளிக்கூடம் படித்த காலத்தில் ஈஷிய அதே நுனிநாக்கு ஆங்கிலம். சகிக்கவில்லை. நம்மை ரசிக்காத பெண் காதலியாக இருந்தால் என்ன? கள்ளக்காதலியாக இருந்தால் தான் என்ன? அவளோடு அங்கே நிற்பதே எனக்கு பிடிக்கவில்லை. ஏதேதோ சோகங்களை பகிர்ந்தவள். எனது கையை பிடித்து குலுக்கினாள். கட்டிப்பிடிக்க வந்தாள். தோளை பிடித்து தள்ளினேன் . பழைய சிந்தனைகள் புற்றீசல் ஆகியிருந்த மூளையில் அவளது மாடர்ன் நடவடிக்கைகள் என்னை சுந்தர காண்டம் ஷண்முகமணியை போல நடந்துகொள்ள வைத்தன . எப்போது இவளுடைய கதையை நிறுத்திவிட்டு வீட்டிற்கு போய் படுப்பேன் என்றிருந்தது. வாய். பேசிக்கொண்டே இருந்தாள். “வீடு இங்கிருந்து பக்கமா?” என்றாள். “இல்ல ரொம்ப தூரம். வருஷத்துக்கு ஒருதடவ வருவேன்” என்றேன்.
கதையை நிறுத்தப்பார்த்தேன். என்னைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. பள்ளிக்கூட நண்பர்கள் பற்றி எதுவும் கேட்கவில்லை. “பார்த்ததில் சந்தோஷம்” என்றாள். “நல்லா தானே இருந்தோம் . திடீர்னு ஏன் பேசுறத நிறுத்திட்ட” என்றாள். “நிறுத்துனா என்ன? நிறுத்தாட்டி என்ன?” மனதிற்குள் நினைத்துக்கொண்டேன். அவளுடைய அம்மா ஆங்கிலோ இந்தியன். அப்பா மலையாளத்துக்காரர். இந்திராநகரில் அவருடைய வீட்டிற்கு முன் பெரிய நட்ஸ் கடை வைத்திருந்தார். பாதாம், பிஸ்தாஷியோ எல்லா வகையான நட்ஸ்களும் அவரிடம் கிடைக்கும். இறக்குமதி செய்யப்பட்ட நட்ஸ். அப்போது டாட்டா குவாலிஸ் வைத்திருந்தார். கார் வந்த புதிதில் அந்த ஏரியாவிலேயே அவருடைய கார் தான் முதல் குவாலிஸ். எங்கள் பள்ளி இந்திரா நகர் பக்கம் தான். பள்ளி முடிந்து அவளை வீட்டிற்கு அழைத்து செல்ல குவாலிஸை எடுத்துக்கொண்டு வருவார் பெரிய கட்டை மீசை ஒன்றை வைத்துக்கொண்டு. டீச்சர் அம்மாவும் அவரின் முதல் மதிப்பெண் பெண்ணும் காரில் ஏறி செல்வார்கள். பள்ளிக்கூடத்தில் இருந்து நடந்தே வீட்டிற்கு போகலாம். ஆனால் கார் எடுத்து வந்து அவர்களை ஏற்றிக்கொண்டு செல்வார் அவளின் அப்பா. இரண்டு ரூபாய் பெப்சி என்று அழைக்கப்படும் ட்யூப் ரஸ்னா ஐஸ்க்ரீம் தள்ளுவண்டி பள்ளிக்கூடம் முன்பு ஒன்று நிற்கும்.
“ஆரஞ்சு, பிங்க் ஸ்தாபிரி, நீலம் க்ரேப்ஸ், மஞ்சள் மேங்கோ, பைனாப்பிள் ரெண்டு ரூபா ரெண்டு ரூபா” என்று எல்லா வண்ணத்திலும் கிடைக்கும். அப்போது அவர்களுக்காக காத்துகொண்டு நிற்கும் மலையாள கட்டை மீசை எங்களுக்காக இந்த ரெண்டு ரூபாய் ரஸ்னாவை வாங்கிக்கொடுப்பார். ஒரு மணிக்கு மதிய உணவை முடித்து. மூன்று மணி நேரங்கள் கடுப்பான மொக்கையான பாடம் நடத்த தெரியாமல் நடத்தும் தத்தக்கா பித்தக்கா க்ளாஸ்களை கடந்து. நான்கு மணிக்கு கிரவுண்டில் ஆட்டம் போட்டு அரைமணி நேரம் விளையாடி பெரும் களைப்புடனும் மாபெரும் பசியுடணும் வரும் எனக்கும் எம் நண்பர்களுக்கும் வயிறார வாங்கிக்கொடுப்பார். “எந்த ஸ்ரேயா மச்சி??? மகான் பொண்ணு ஸ்ரேயா மச்சான்” என்று தணிக்கை செய்யத்தக்க உரையாடல்களை தொடர்வோம். ஆசிரியர்கள் எத்தனையோ முறை கண்டித்து பார்த்துவிட்டார்கள். அவர்களில் எவராலும் எங்களை தடுக்கமுடியவில்லை. கிரிக்கெட் போட்டிகளை நிறுத்தப்பார்த்தார்கள், பாஸ்கட்பால் போட்டிகள், கபடி, பால் பேட்மிண்டன், கொக்கோ என்று எல்லா சந்தர்ப்பங்களையும் பழிவாங்குவதற்காக பயன்படுத்தி எங்களை எங்களின் தடைசெய்யப்பட வேண்டிய மொழியை ஒட்டுக்கேட்டு தடுக்கப்பார்த்தார்கள். கண்டித்தார்கள். சஸ்பெண்டு செய்தார்கள். டிசி கொடுத்துப் பார்த்தார்கள். அடக்கமுடியவில்லை எங்களை.
நாங்கள் அப்போதே அடங்கியிருந்தால் இப்போது ஒரு லட்சம் சம்பளம் வாங்கியிருக்கலாம். ஆனால் என்ன இப்போது பத்தாயிரத்தில் எனக்கு இருக்கும் மகிழ்ச்சியான மனம் ஸ்ரேயாவிடம் இல்லை. அவள் அப்போது காதலித்தது. சொல்லாமல் விட்டது எல்லாமே அவள் செய்த தவறு என்று ஒப்புக்கொண்டாள். அதற்கு வருத்தம் தெரிவித்தாள். எனது நண்பர்கள் என்னிடம் அவளை பற்றி தவறாக சொல்லி என்னை மூளைச்சலவை செய்திருக்கிறார்கள். அவளை அணுவணுவாக வெறுக்க வைத்திருக்கிறார்கள். தேங்காய் மூடி கூட என்னை விட தெளிவாக சிந்திக்கும். அம்மா, தேங்காய் வாங்கி வர சொன்னால் கடைக்கு போய்ட்டு தேங்காயை உடைத்து நானும் கடைக்காரரும் தேங்காய் தண்ணி குடிப்போம் . அப்படி தேங்காய் தண்ணி வாங்கி குடித்த எனக்கு தேங்காய்க்கு இருக்கும் தெளிவுகூட இல்லை. அப்போதென்று இல்லை . எப்போதும் இருந்ததில்லை . எனது அலைபேசியில் தொடர்பு கொள்ள என்னுடைய எண்ணை நண்பர்களிடம் இருந்து பெறுவதற்கு முயன்றிருக்கிறாள்.
சேர்ந்து பேசி வைத்து என்னை அவளிடம் இருந்து தள்ளியே வைத்து இருந்திருக்கிறார்கள். ஏன் என்று தெரியவில்லை. அந்தளவுக்கு பொறாமை பிடித்தவர்களா? தெரியவில்லை. பதினோரு மணி வெயில் சுட்டெரித்து கொண்டிருந்தது. அவள் கண்களில் நீர். காலை பதினோரு மணிக்கு பலவருடங்கள் கழித்து பார்த்த ஒரு நண்பன் கூட இல்லை. கிட்டத்தட்ட மூன்றாம் மனிதன். யாராவது சோகக்காவியம் பாட ஆரம்பிப்பார்களா? அவளது மை கலைந்திருந்தது. முப்பத்தைந்து வயது. எனக்கு. “கடவுள் சித்தம் உன்ன இங்க பார்த்தது” என்றாள். பள்ளிக்கூடம் நான்கு மணிக்கு முடிந்துவிடும். நான்கிலிருந்து ஐந்து மணி வரை நெட்ஸில் கிரிக்கெட் பயிற்சி விளையாடிக் கொண்டிருக்கும் போது முதல்தள பத்தாவது அறைவாசலில் இருந்து கொண்டு, கையில் சில புத்தகங்களை வைத்துக்கொண்டு நான் விளையாடுவதை ஒரு மணி நேரம் அப்படியே பார்த்துக்கொண்டு இருப்பாள். அவள் கீழே இறங்கி வருகிறாளா ? அவளது அப்பா கேட்டிற்கு வருகிறாரா ? அவள் அம்மா வருகிறாரா ? என்று பார்த்துக்கொண்டே முதல்தளத்தில் என்னையே பார்த்துக்கொண்டு நிற்கும் அவளை அவ்வப்போது நான் திரும்பி திரும்பி பார்ப்பேன்.
பேட்டிங் ஆடும் போது ஹெல்மெட் சரிசெய்வதுபோல அவளை பார்ப்பேன். என்னை மட்டும் பார்த்துக்கொண்டு இருப்பாள். இப்படி நம்மீது ஈடுபாட்டுடன் இருக்கும் ஒருவள் எப்படி நான் “முறைக்கிறேன்” என்று நண்பர்களிடம் சொல்லுவாள். எனது மாமா அவரது நண்பரிடம் இரண்டு கோடி சொத்தை நட்புக்காக எழுதிக் கொடுத்துவிட்டு பின்னர் அந்த நண்பரிடம் திருப்பி கேட்கும் போது தான் வாழ்வில் முதன்முதலாக துரோகம் என்றால் என்னவென்று உணர்ந்ததாக என்னிடம் சொன்னார். “அதுக்கு ஏன் மூஞ்ச அப்படி வச்சிருக்கீங்க? வாங்க லஸ்ஸி குடிக்கலாம்” என்று படம் பார்த்துவிட்டு தியேட்டர் பின்னால் ஒரு பாரம்பரிய வடஇந்திய நொச்சகத்தில் ஒரு லஸ்ஸி வாங்கிக்கொடுத்தேன். நான் வாழ்க்கையில் குடித்த சிறந்த லஸ்ஸி. தேவி தியேட்டர் பின்புறத்தில் இருக்கும் நொச்சிக லஸ்ஸி தான் என்று எவர் கேட்டாலும் சொல்வேன். குடித்து முடித்துவிட்டு மாமாவின் கிளாஸை பார்த்து “டேஸ்ட்டா இருக்கா மாமா?” என்றேன். “வலிக்குது” என்று நெஞ்சை பிடித்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்து விட்டார்.
நண்பர்களிடம் மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். உயிர் நண்பர்கள் என்று சொல்லி சொத்துக்கும் பணத்திற்கும் பெண்ணிற்கும் ஏமாற்றிவிடுவார்கள் என்று ஒரு தத்துவத்தை சொன்னார். நான் மதிக்கவில்லை. ஆனால் “நெஞ்சு வலின்னா என்ன மாமா? நெஞ்சுக்குள்ள வலிக்குமா?” என்றேன். லஸ்ஸி கிளாஸை ஒரு கையில் பிடித்துக்கொண்டு நெஞ்சை மறுகையில் பிடித்துக்கொண்டே என்னை முறைத்தார்.
“பிடிக்கலையா?” என்று லஸ்ஸியை வாங்கி நான் குடித்தேன். “என்னவொரு அடர்த்தி, என்னவொரு இனிப்பு, என்னவொரு குளிர்ச்சி, என்னவொரு பானம்… ஆஹா” என்றேன். அப்போது வலி என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தேன் இல்லையா? இப்போது அந்த நண்பனுக்கு ஃபோன் போட்டு அழைத்தேன். “எப்படியெனக்கு அப்படியொரு பொய் சொல்லி இப்படியொரு துரோகத்தை செய்யலாம்?” என்று ஸ்ரேயாவை வைத்துக்கொண்டே... அவளை எதிரில் வைத்துக்கொண்டே அவனிடம் கேட்க அழைத்தேன். எடுக்கவில்லை. மீண்டும் அழைத்தேன். எடுக்கவில்லை. ஆரண்ய காண்டம் படத்தின் இம்பெண்டிங் டூம் துணுக்கை ரிங்க்டோனாக வைத்திருந்தான். ஐந்தாவது முறை தொடர்ந்து அடித்ததும் எடுத்தான். “என்ன மச்சி?” என்றான் கடுப்பாக. “ஏண்டா அஞ்சு வருஷம் கழிச்சு கால் பண்றேன்… ஒரு சந்தோஷமே இல்லையே டா” என்றேன் சீசர் முகத்துடன். “டேய் ங்கோத்… ஒரு கல்யாணம் பண்ணி பாருடா… அப்பதெரியும் … சொல்றா மச்சி” என்றான்.
“மச்சி ஸ்கூல் படிக்கும் போது நம்ம கூட ஸ்ரேயான்னு ஒரு பொண்ணு படிச்சிச்சி ஞாபகம் இருக்கா?” என்றேன். “சொல்லு மச்சி உனக்கு கூட ரூட்டு விட்டுச்செ” என்று சொல்லி நாக்கை துடுக்கினான். சத்தம் கேட்டது . நாக்கை துடுக்கிய சத்தம் கேட்டது. “ஆமா நீ கூட அவன் அப்படித்தான் முறைப்பான். எங்களையும் அப்படிதான் முறைச்சிட்டே இருப்பான்னு சொல்லிட்டு. எங்கிட்ட வேற என்னமோ சொன்னியே… டுயூ ரிமெம்பர் மச்சி?” என்றேன். வீடியோ காலில் அழைத்தேன். எடுத்தான் . “மச்சி.. பாப்பா பாரு… பாப்பா மாமா பாரு.. மாமா பாரு… சாப்பிட வைக்கணும் மச்சி .. வர்க் இருக்குடா?” என்று கட் செய்துவிட்டான். செய்வதற்கு முன் அவனது கண்களில் நான் துரோகத்தையும் பார்த்தேன். என் நெஞ்சிற்குள் குடியிருந்த வலியையும் பார்த்தேன். மாமாவின் வலி மெதுவாக என் இதயத்திற்குள் ஏறி பிசைய ஆரம்பித்தது. “மே வி ஜஸ் மூவ் டுவர்ஸ் த ட்ரீஸ்… ஹிட்டிங் ஸ்ட்ரெய்ட் டு மை ஃபேஸ்” என்றாள். “வெயிட்ட மொமண்ட்… ஐ வாண்ட் திஸ் லைட் ஆன் யுவர் ஃபேஸ் … மூ திஸ்சைடு டீ” என்றேன். “ஓ யா” என்றாள் லண்டனில் புகைப்படக்கலை படித்துவிட்டு வந்த போலித் திமிர் தொனி ஆங்கிலத்தில்.
குடும்பஸ்தனுக்கு வீடியோ கால் அழைத்தேன். ஆறு முறை அழைத்தேன். ஏழாவது… எட்டாவது முறை எடுத்தான். வீடியோ வாட்சாப் கால். “என்ன மச்சி” என்றான். ஒரு நிமிஷம் மச்சி ஒரு பழைய ஃபிரெண்டு உன்னைய பாக்கணுமாம்” என்றேன். “புரியல” என்றான். “பாக்கணுமாம் மச்சி... உனக்கு ஸ்ரேயா தாட்டா காட்டணுமாம்” என்றேன். முழிமுழியென்று முழித்தவனுக்கு முகத்தில் அடித்தாற்போல் கேமரா ஆப்ஷனை அந்தப்பக்கம் மாற்றினேன். “ஸ்ரேயாவின் முகம். அவன் முகம். ஸ்ரேயாவின் முகம். அவன் முகம். எரிச்சலின் உச்சம். இவள் முகம். சோகக்காவியத்தின் அழகு. கேமரா ஆப்ஷனை மாத்தினேன் . எனது முகம் . உச்சத்தின் குதூகலம். “மச்சி என்னடா? ஸ்கூல் ஸ்ரேயா மாதிரியே இல்ல” என்றான். “மாதிரியெல்லாம் இல்லடா லவடா… ஸ்ரேயாடா… ஸ்கூல் க்ரஷ்டா… உன் ட்ரீம் கர்ள்டா… பாய்டா மச்சி… பாப்பாக்கு சாக்லேட் வாங்கிக்குடு” என்று ஃபோனை வைத்தேன். துரோகத்தின் வலியை காட்டியவனின் கண்களில் கொடும் வஞ்சனை தாக்குதலுக்குட்பட்ட ஒரு புதுவிதமான வலியை பார்த்தேன்.
குடும்பஸ்தனின் துரோகம்
சிறுகதை
கேபிஆர்

Comments
Post a Comment