வெள்ளைக்காரன் மூக்குப்பொடி - சிறுகதை


நண்பன் ஒருவன் ஞாயிறு அன்று “சுடச்சுட இட்லியும் சுடச்சுட சிக்கன் குழம்பு செய்து வைத்திருக்கிறேன். வீட்டுக்கு வா. இரவு எத்தனை மணி ஆனாலும் பரவாயில்லை” என்றான். நான் “வேலை இருக்கிறது” என்றேன். “நானே வந்து அழைத்து வரவா?” என்றான். சென்றவாரம் “பீஃப் சூப்பரா சமைப்பேன். உனக்காக ஒரு ஞாயிறு அன்று சமச்சுவச்சிட்டு அழைக்கிறேன்” என்றான். நானும் எப்போது அழைக்கிறான் பார்க்கலாம் என்று வேலையை பார்த்தேன். ஒருவாரம் ஆனது. இரண்டு வாரம் ஆனது. இப்போது மூன்று மாதத்திற்கு பின்னர் அழைத்து “சிக்கன் குழம்பு செஞ்சு வச்சிருக்கிறேன்” என்கிறான். அடியில் அவனுக்கு எவ்வளவு இருக்கும்? இவ்வளவு நாட்களும் பீஃப் குழம்பு அவன் செய்யாமல் இல்லை. அதை சமைத்த போது எல்லாம் வேறு ஒரு நண்பர் கூட்டத்தை அழைத்து எனக்கு தெரியாமல் விருந்து வைத்திருக்கிறான். ஆனால் இப்போது சிக்கன் குழம்பு வைத்து விட்டு என்னை அழைக்கிறான். எனக்கு வேறொருவன் மூலமாக செய்தி வந்தது. பீஃப் சமைக்கும் பொழுது ஏன் என்னை அழைக்க மாட்டேன் என்கிறான்?

சமீபத்தில் வீடு மாறியிருக்கிறான். என்னிடம் சொல்லவே இல்லை. அதனால் தான் இப்போது சிக்கன் குழம்பு சமைத்துவிட்டு அழைத்ததற்கு நான் சொன்ன பதிலை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. நானும் அப்படி சொல்லியிருக்கக்கூடாது. நம்மை அழைக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? நம்மை அழைக்க விருப்பமில்லை என்று அர்த்தம். அதை போய் ஏன் கேட்டுக்கொண்டு? நேரவிரயம். அதனால் எங்களுக்குள் ஏதாவது அன்போ நட்போ வளரப்போகிறதா? வெறுப்பு தான் வளரப்போகிறது. எதற்கு வெறுப்பை வளர்த்துக்கொண்டு? ஏன் என்றால் எனக்கு பீஃப் கறி மிகவும் பிடிக்கும். ஏனென்றால் எப்போதும் அழைக்கவில்லை என்றால் பரவாயில்லை. சரியாக பீஃப் சமைக்கும் போது மட்டும் அழைக்க மாட்டேன் என்கிறான். ஆனால் சிக்கன் சமைத்தால் அழைக்கிறான்.

சில நண்பர்கள் இருப்பார்கள். தரமணிக்கு ஏதாவது உதவி வேண்டுமென்றால் அழைப்பார்கள். அண்ணா நகரில் ஏதாவது உதவி வேண்டுமென்றால் அழைப்பார்கள். தாம்பரத்திற்கு ஏதாவது உதவி வேண்டுமென்றால் அழைப்பார்கள். நான் சினிமாக்காரன் என்பதால் உதவி இயக்குனர் என்று செய்யும் தொழிலை பார்க்காமல் திசைமாறி உதவியிருக்கிறேன். என்னை ஜுனியர் ஆர்டிஸ்ட்டாக அழைத்திருக்கிறார்கள். குறும்படத்திற்கு செட் டெக்கரேஷன் செய்ய அழைப்பார்கள். போய் உதவி செய்துகொடுத்துவிட்டு வருவேன். யூட்யூபில் ஏதேனும் புதிய ஷோ ஆரம்பிக்கிறார்கள் என்றால் அழைப்பார்கள். போய் உதவி செய்துகொடுத்துவிட்டு வருவேன். எந்த கேள்வியும் கேட்காமல். எல்லாவிதமான உதவியும் செய்துகொடுத்துவிட்டு வருவேன்.

ஒரு குறும்படத்திற்கு இப்படி நடிக்க அழைத்த போது கிலோமீட்டர் கணக்கில் ஓட சொன்னார்கள். ஸ்டண்ட் செய்ய சொன்னார்கள். மதில் மீது ஏற சொன்னார்கள். தாவ சொன்னார்கள். ஓட சொன்னார்கள். பிணமாக நடிக்க சொன்னார்கள். கேட்ட கேள்வி இல்லாமல் நடித்துக்கொடுப்பேன். சினிமாவையும் அதன் கலையையும் காதலிக்கும் காரணத்தினால் இதையெல்லாம் நானும் மறுபேச்சின்றி செய்து கொடுப்பேன். நாற்பது சினிமா கதை டிஸ்கஷனில் போய் கதை பேசிவிட்டு வருவேன். சினிமா மீது காதல் தானே? பின்பு ஏன் இதெல்லாம் பெரிய இமயமலையை தூக்கி சுமக்கும் ஒரு வேலையைப்போல இரநூறு கோடி தொழிலை விட்டு இரண்டாயிரம் கோடி தொழிலுக்கு மாறும் தியாகம் போல பேசிக்கொண்டு இருக்கிறேன் என்று தெரியவில்லை. சினிமா மீது காதல் இருக்கிறது.

காதல் என்றால் எல்லாவிதமான பைத்தியக்காரத் தனத்தையும் செய்யவேண்டியது தானே என்று மனம் கேள்வி கேட்கிறது. ஆனால் இதெல்லாமும் என்னுடைய சொந்த சினிமா வேலையை நிறுத்தி வைத்துவிட்டு நட்புக்காகவும் அவரவர்களின் தனிப்பட்ட நோக்கங்களுக்காகவும் செய்து கொடுத்த உதவிகள். “சரி உதவி என்றால் அதை ஏன் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்காமல் போதையில் செய்த தவறை போல சுட்டிக்காட்டுகிறேன்?” என்று என்னை நானே என்னை நானே கேட்டுக் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் எல்லை மீறி நான் செய்த இந்த உதவிகள் எதுவும் உதவியை கேட்டு பெற்றுக்கொண்ட அதே நண்பர்கள் எனக்காகவும் எனது நோக்கங்களுக்காகவும் எனக்கு திருப்பி எதுவும் செய்ததில்லை. சுயநல மயிறுகள். “நண்பா… நண்பா” என்று சொல்லி துரோகம் தான் இழைத்திருக்கிறார்கள். இனியும் எந்த உதவியும் அவர்கள் செய்யவும் போவதில்லை. முடிந்தது நிலவு முறிந்தது உறவு.

அதெல்லாம் செய்வது வீண்வேலை அவர்களுக்கு. வெற்று நேரவிரயம் என்பது என்னை விட அவர்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. என்னை இளிச்சவாயன் என்று தக்க சான்றுகளுடன் நிறுவிப்பார்க்கும் முயற்சியின் போது மனதிற்கு கிடைக்கும் இன்பத்திற்கு ஈடுயிணையில்லை. எனக்கு அவ்வளவு தெளிவுமில்லை. அதுதான் கோபம். என் மீது கோபம். சிக்கன் சமைக்கும் போது அழைப்பவன். தொடர்ந்து மூன்று நான்கு மிஸ்டு கால் கொடுத்து அழைக்கும் அந்த நண்பன் ஏன் பீஃப் சமைக்கும் போது என்னை அழைப்பதில்லை? பீஃப் சாப்பிட ஒவ்வொரு ஞாயிறும் அவனின் பெசன்ட் நகர் வீட்டிற்கு போகும் நண்பர்களிடம் நான் சேர்வதை அவன் ஏன் விரும்புவதில்லை. ஜுனியர் ஆர்டிஸ்ட்டாக நடிக்க வைக்கும் நண்பர்கள் ஏன் கொடைக்கானல் டூர் போனால் என்னை அழைப்பதில்லை. அழைக்காமல் இருப்பது கூட பரவாயில்லை “உன்னை விட்டு தான் நாங்கள் போய்ட்டு வரோம்” என்று அலைபேசியில் அழைத்து வேறு ஏன் வெறுபேற்றுகிறார்கள்? இப்படிப்பட்ட நண்பர்களை என்னால் புரிந்துகொள்ளவே முடிவதில்லை. ஏனென்றால் அவர்கள் நண்பர்களே இல்லை.

திருமணம் ஆகி மனைவியை வைத்திருக்கும் கணவர்கள் எப்படி முறையாக பிரிவதற்கு முன்னமே வேறொரு பெண்ணை விரும்புகிறார்கள்? இழைக்கும் துரோகத்தை பற்றி நினைத்து பார்க்கமுடியாத ஒரு குரூர மனது அவர்களுக்கு எப்படி வருகிறது? சென்னை. மார்ச் மாத இரவு. கடும் உழைப்பை போட்டு செய்யும் வேலையின் களைப்பிற்கிடையே ராயப்பேட்டை பழைய கட்டிடங்களின் இடுக்கில் இருக்கும் அந்தச் சிறிய காபி கடைக்குள் நான் அமர்ந்திருந்தேன். என் முன்னால் கமல் அமர்ந்திருந்தான். கமல் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலன். ஆனால் அவனை நவீனகாலத்து சித்தன் என்று சொல்வது தான் நியாயம். சென்னைக்கு அருகிலுள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க அவன் நடத்தும் போராட்டங்கள் அவனை ஒரு செயல்பாட்டாளனாக மாற்றியிருந்தது. அவனுக்கும் எனக்கும் இடையில் அமர்ந்திருந்தாள் லாவண்யா. நான் அவளை மியா என்று அழைப்பேன். அவன் அவளை சௌந்தர்யா என்று அழைப்பான். நடிகை சௌந்தர்யா போல பேரழகி. அவள் ஒரு வைராக்கியமான பெண். கமலின் மனைவி என்பதைத் தாண்டி, அவனுடைய போராட்டத்தின் முதுகெலும்பாக இருப்பவள்.

"கமல், நீ உள்ளே போன பிறகு இந்த ஐந்து மாதங்கள் எப்படி இருந்தன என்று உனக்குத் தெரியுமா?" என்று நான் கேட்டேன். கமல் அமைதியாக சிரித்தான். அவன் முகத்தில் ஒரு நிரந்தரமான அமைதி இருந்தது. கடுந்தவம் புரிந்த சித்தர்களை எல்லாம் நான் சதுரகிரியிலும், திருவண்ணாமலையிலும், கொல்லிமலையிலும், வெள்ளியங்கிரியிலும், இமையமலையிலும் கண்டிருக்கிறேன். அவர்கள் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் கடுந்தவம் புரிந்ததாக சொல்வார்கள். எனக்கு அவர்கள் மீது துளியும் நம்பிக்கை கிடையாது. அவர்களிடமே அதை சொல்வேன். என்னை ஒன்றுமறியா சிறுவன் என்பார்கள். சிறுவனா நான்? என்பது தெரியவில்லை. ஒன்றுமறியாதவன் என்பதில் உடன்பாடு இருக்கிறது. அவர்களின் முகத்தில் கூட நான் இப்படியொரு நிரந்தரமான ஞானமார்க்க அமைதியை கண்டதில்லை.

சாய்பாபா, அருணகிரிநாதர், ராகவேந்திரர், ஏசு, இமயமலை பாபா முகங்களில் கூட இப்படியொரு நிதானத்தை நான் உணர்ந்ததில்லை. இவனிடம் உணர்கிறேன். ஏன் என்பது நான் மேற்சொன்ன ஒளிகளுக்கே வெளிச்சம். “புழல் சிறையின் அந்தச் சிறிய அறையில் நான் இல்லை நண்பா. நான் இங்கேயே தான் இருந்தேன். ஆனால் வேறொரு பரிமாணத்தில்" என்றான். குலை நடுங்கிப்போனது எனக்கு. ‘தலையில் அடிபட்டு இருக்கிறதா?’ என்று அவன் தலைமுடிகளுக்குள் கைவிட்டு கோதியபடி தடவிப்பார்த்தேன். எதுவுமே இல்லை. தடவியபோது அருகில் லாவண்யா என்னை ஒருமாதிரி புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் உரிமையை பறித்ததுபோல. அவளால் முடியாத ஏதோ ஒன்றை செய்துவிட்டது போல. அவளால் முடியாதது என்னவென்றால் என்னை நிரந்தரமாக காதலிக்க முடியாது என்பதுதான்.

அவன் மண்டையில் எந்தவிதமான தடயமும் இல்லை. பின்னர் ஏன் ஆள் இப்படி குளறிக்கொண்டு இருக்கிறான் என்று சிந்திக்க ஆரம்பித்தேன். கமல் சென்ற செப்டம்பர் மாதம் சென்னையில் ஒரு போராட்டத்தின் போது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டான். அவனை சென்னை சிறையில் வைக்காமல், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி புழல் சிறைக்கு மாற்றினார்கள். அங்கே அவன் சந்தித்தது ஒரு அதிகார வர்க்கச் சிக்கலை. லாவண்யா வாரத்திற்கு இரண்டு முறை புழலுக்கு சென்று வருவாள். சென்னையிலிருந்து ரயில், பிறகு அந்தத் தகிக்கும் வெயிலில் ஒரு ஆட்டோ. இத்தனை அலைச்சலும் எதற்காக? வாரம் இரண்டு முறை, வெறும் 60 நிமிடங்கள் அவனைப் பார்ப்பதற்காக. "அந்த 60 நிமிடங்கள் தான் எங்களை உயிர்ப்போடு வைத்திருந்தன," என்பாள் மியா. நான் லாவண்யாவை மியா என்று அழைப்பது அவளுக்கு தெரியாது. இதுபோன்ற டைரி குறிப்புகளில் தான் மியா வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்றில்லை. அவள் பல இடங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

லாவண்யா ஒவ்வொரு முறையும் கமலை பார்த்துவிட்டுத் திரும்பும்போது, அவளிடம் ஒரு விசித்திரமான மாற்றத்தை நான் கவனித்தேன். அவள் உடலிலிருந்து மெல்லிய ஈரப்பதமான மணம் வீசும். கொடைக்கானலில் ஈர மலைகளின் வாசனை போன்றோ… சென்னையின் மழை வாசனை போன்றோ… மனதின் அடியாழ உணர்வை கிளறும் ஒரு வாசமாக அது இருக்கும். தீராக்காதலுக்கு ஒரு வாசனை இருந்தால் எப்படியிருக்கும்? அதுதான் அவளிடம் அடிக்கும் வாசம். ஒவ்வொரு முறை அவனை பார்த்துவிட்டு திரும்பும் போதும் அவளிடம் அந்த வாசம் தான் அடிக்கும். ஆனால் அவள் ஒவ்வொரு முறையும் சென்று வந்தது வறண்ட பூமி வாட்டியடிக்கும் வெயிலில் இருந்து. இப்படியிருக்கும் போது அவளிடம் எப்படி அப்படியொரு வாசம்?

கமல் சிறைக்குள் இருந்தபோது அவனுடைய உளவியல் நிலை ஒரு விசித்திரமான கட்டத்தை எட்டியிருந்தது. உளவியலில் டிஎம்எம் என்பார்கள். ஒரு மனிதன் ஒரு சிறிய அறையில் அடைக்கப்படும்போது, அவனுடைய மூளை அந்த இடத்தைத் தாண்டி ஒரு புதிய உலகத்தை உருவாக்கத் தொடங்கும். சிறைக்குள் இருந்தபடி சென்னையின் சதுப்பு நிலங்களை மனதாலேயே மீட்டுருவாக்கம் செய்யத் தொடங்கியிருந்தான் கமல். பள்ளிக்கரணை சதுப்புநிலம் அதில் முக்கியமான பங்கு வகித்தது. அங்கு தான் நான் முதன் முதலில் லாவண்யாவை சந்தித்தது. அங்கு தான் அவனுக்கு முதன் முதலில் அவனுடைய சௌந்தர்யாவை அறிமுகம் செய்துவைத்தது. எனக்கு அது அப்படிப்பட்ட இடம். ஆனால் அவனுக்கு அது பாதுகாக்கப்பட வேண்டிய சதுப்புநிலம். அவன் அவளை மறந்திருந்தால் மட்டுமே இதுபோன்ற மனநிலைகளை எட்ட முடியும் இல்லையா? அவன் அவளை மறக்கும் சமயத்தில் நான் அவளை நினைப்பதில் என்ன தவறு?

நான் அவளிடம் இவனை அறிமுகப்படுத்திய போது இவள் என்னை காதலித்து கொண்டிருந்தவள். இப்போது அவனுக்கு மனைவி. இடையில் எனது கையாலாகாத் தனத்தை வெறுத்து அவனை கரம்பிடித்தாள் சரி… என்னை ஏன் கைவிட்டாள்? நான் லட்சங்களில் சம்பாதிப்பவன். அவன் இயற்கை, மரம், செடி, கொடி, பறவைகள் என்று சுற்றித்திரியும் காட்டுக்காரன். நான் புரிந்துகொண்டது ஒன்றே ஒன்று தான். இந்தக் கதையில் நான் வெறும் பார்வையாளன் அல்ல. கமலின் நெருங்கிய நண்பனாக இருந்தாலும், மியாவின் மீது எனக்கு இருக்கும் ஒருவித ஈர்ப்பு குறைந்தபாடில்லை. ஒரு கோடி வருட ஈர்ப்பு. மனிதர்களின் பரிணாம லட்ச வருடங்களுக்கு முன்பு கரப்பான் பூச்சியாக தேங்கிய குட்டைகளின் இடுக்குகளில் பசிக்கு புசித்துக் கொண்டிருக்கும் பூச்சியாக திரிந்த காலத்தில் உருவான ஈர்ப்பு தான் அவள் மீது இப்போது எனக்கு இருக்கிறது. சொல்லாமல் கொள்ளாமல் அவளுக்கு என் மீதிருந்த காதல் கமல் மீது எப்படி போகும்? ஒரு பூச்சியின் பசியைப் போல.

இயற்கையை விரும்பும் கமல் ஏன் நண்பனின் காதலுக்கும் அவனது நட்பிற்கும் துரோகம் செய்தான்? இயல்பான காதல் ஒரு செடி போல வளராததை அவன் உணர்ந்ததாலா? என்னிடம் அந்த செடிக்கு ஊற்ற தண்ணீர் இல்லை என்று அவன் ஊற்ற தொடங்கிவிட்டானா? இல்லையென்றால் செடி வாடிவிடுமா? அவனை சந்திப்பதற்கு முன் ஒரு வருடமாக வாடாத செடி அவனை பார்த்ததும் என்னுடன் இருந்தால் தான் பட்டுப்போய் விடுகிறதா? இவள் என்னிடம் இருந்து பேசி முறிந்தபாடில்லை. கமல் தான் என்னை அழைத்து பேசினான். அவளுக்கு என் மீதிருந்த காதல் கசந்துவிட்டு இப்போது அவன் மீது கசிகிறதாம். அதற்கு நான் என்ன செய்யவேண்டுமாம்? என்னுடைய காதல் அவள் மீது இன்னும் கசிந்துகொண்டிருக்கிறதே? அவள் மீது எனக்கு அன்பு இருந்ததுண்டு. இப்போதில்லை. காதல் மட்டும் கசிந்து ஒழுகிக்கொண்டு இருக்கிறது. காது வழியாக… வாய் வழியாக… கண்கள் வழியாக… கழுத்து வழியாக… வியர்வை வழியாக… வலிந்து வலிந்து வலிந்து வலிந்து வலிந்து வலிந்து வலிந்து ஊற்றும் திரவம் காமத்தால் ஆனதல்ல. மியாவின் அர்ப்பணிப்பின் மீது வந்த காதல்.

“என்னை மியா என்று அழைக்காதே” என்று எனது முகத்திற்கு நேராக சொன்னவள் ஏன் “என் மீது காதலும் இல்லை… காமமும் இல்லை” என்று சொல்லவில்லை? காதலும் இல்லை காமமும் இல்லையென்றால் இந்த உறவுக்கு பெயர் என்ன? இப்போது என்னிடம் நட்பாக பழகிக்கொண்டு இருக்கிறாள். நானும் நண்பனாக பழகிக்கொள்கிறேன் என்று பொய் சொன்னதால் அவள் அனுமதிக்கிறாள். இல்லையென்றால் என்னிடம் ஏன் பேசப்போகிறாள்? வேறு யாரோ நான் இப்போது நானிருக்கும் இடத்தில நின்று கொண்டு அவளுக்கு தேவையான உதவிகளை செய்து கொண்டிருப்பான். எனக்கு நானே போட்டியா? லட்சங்களில் சம்பாதிப்பவன் நான். இன்று ஹீரோக்களுக்கு மேனேஜராக இருக்கிறேன். எனது கையில் ஒன்பது ஹீரோக்கள் இருக்கிறார்கள். மாதாமாதம் பணம் எனது வங்கி கணக்கில் விழுந்துவிடும்.

தேதிகள் பார்ப்பது, அவர்களின் வெளியூர் பயணங்களுக்கு டிக்கட் போடுவது, வெளியூர் சென்று அவர்கள் ஊர் சுற்றியபின் அவர்களுக்கு உடல் நோவாதா? அதற்கு மசாஜ் ஏற்பாடு செய்ய வேண்டாமா? அதெல்லாம் நான் பார்க்கவில்லை என்றால் யார் எனக்கு மாதாமாதம் லட்சக்கணக்கான பணம் அனுப்பப் போகிறார்கள்? “இப்படிப்பட்ட ஒருவன் ஏன் என்னை பார்க்க வருகிறான்? அப்படியென்ன நட்பு?” என்று என்னை சந்தேகப்பட ஆரம்பித்தான் கமல். அவன் சிறைக்குள் இருந்த அந்த 170 நாட்களில், நான் தான் சௌந்தர்யாவிற்கு துணையாக இருந்தேன். அவனா இருந்தான்? ஆனால், லாவண்யா புழல் சென்று வரும்போதெல்லாம் அவளுடைய சிறையின் பயண நினைவுகள் சிதையத் தொடங்கின. அவள் புழலில் கமலை பார்த்தாளா அல்லது பெருமாள் மலையில் நந்தவன சோலையை பார்த்தாளா என்பதில் அவளுக்குக் குழப்பம் ஏற்பட்டது.

திடீரென்று. "கமல் அங்கே இல்லை," என்று ஒரு நாள் இரவு என்னிடம் கதறினாள். "அங்கே சிறையே இல்லை. நான் ஒரு பெரிய பனிப்பாறைக்கு முன்னால் உட்கார்ந்து அவனிடம் 60 நிமிடங்கள் பேசிக்கொண்டிருக்கிறேன். அந்தப் பனிப்பாறை மெல்ல மெல்ல உருகுகிறது" என்றாள். இது ஒரு ‘உளவியல் சிக்கலா அல்லது சிறையின் அதிகார வர்க்கம் செய்த சதியா? என்று எனக்கு தெரியவில்லை. கமல் நிஜமாகவே சிறையில் தான் இருந்தானா? அவன் சிறையில் இல்லை என்றால் எப்படி அவனால் அடுத்த மாதம் விடுதலை ஆக முடியும்? ஆம். கமல் அடுத்த மாதம் தான் விடுதலையாகிறான். அப்போது “கட்டன் சாயா” என்று மாஸ்டரிடம் ஆடர் போட்ட இவன் யார்? உண்மையான கமல் அதிகாரமாக பேசமாட்டானே அன்பாகத்தானே சாயா சொல்லுவான்? இவன்? மத்திய அமைச்சகம் அவனுக்கான ஆணையைத் திரும்பப் பெற்றது. இன்று நாங்கள் டீக்கடையில் அமர்ந்திருக்கும்போது, கமல் திடீரென ஒரு வரைபடத்தை என் முன்னால் வைத்தான்.

"இதுதான் ஆறாம் அட்டவணை” என்றான். “என்னடா இது? நூற்றி எழுபது நாள் கழித்து வெளியே வந்து அருகில் இப்படியொரு சௌந்தர்யத்தை வைத்துக்கொண்டு “அட்டவணை குட்டவணை” என்று கிறுக்கு பிடித்தவனாக இருக்கிறானே?” என்று நினைத்தேன். ஓரக்கண்ணால் மியாவை நான் பார்த்தேன். பத்து வருடங்களாக இப்படி நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் என்பது அவளுக்கு தெரியாது. தெரிந்திருந்தால் என்னோடு இப்படி நட்பாக பழகிக்கொண்டிருக்க மாட்டாள். அல்லது என்னை பயன்படுத்தி கொண்டிருக்கிறாளா? ஒருவேளை கமல் என்ற ஒருவன் இல்லாமல் போனால் அவன் இடத்திற்கு நான் வந்துவிடுவேனா? லட்சக்கணக்கான பணம் செலவே செய்யப்படாமல் வங்கியில் சும்மா கிடக்கிறது.

கமல் என்ற ஒருவன் இல்லையென்றால் அத்தனை லட்சங்களையும் எனது மியாக்காக நான் வாரியிரைப்பேனே? அது ஒரு தெளிவான வரைபடமல்ல. ஒருவேளை புரியாததால்… எனக்கு சுற்றுசூழல் இயற்கை மரம் வேர் மீதெல்லாம் ஈடுபாடு இல்லாததால்… வறண்ட தார் சாலை போல அவளை நினைத்து ஏங்கி ஏங்கி மனதும் உடலும் பொசுங்கிப் போயிருப்பதால் வெப்பம் கண்ணுக்கு ஏறி அந்த வரைபடம் தெளிவாக தெரியவில்லை போலிருக்கிறது. ஆனால் “பெண்களுக்கு உளவியல் கவனம் கூர்மையான கத்தி போல இருக்கும்” என்று கமல் சொல்லி தான் கேள்வி பட்டிருக்கிறேன். அப்படிபட்ட கத்தி ஏன் பத்து வருடங்களாக எனது தவறான பார்வையை குருடாக்கவில்லை என்று தெரியவில்லை. குறி பார்க்கிறதா? தக்க சமயத்திற்காக பொருளை கொண்டையில் வைத்துக்கொண்டு என்னை போட ஏவல் காத்துக்கொண்டிருக்கிறதா? தெரியவில்லை.

அவர்கள் இருவரும் அப்படிப்பட்ட ஆட்கள் இல்லை. நானும் அப்படிப்பட்டவன் இல்லை. அப்படிப்பட்ட நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் நான் வேலை பார்ப்பதில்லை. கோடி ரூபாய் கொடுத்தாலும் சில நபர்களிடம் வேலை செய்துவிடக்கூடாது. அப்படி ஒரு நடிகர் என்னை அணுகினார். மசாஜிற்கு இங்கிருந்தே டிக்கட் போட முடியுமா என்று கேட்டார். அவரிடம் பேசும் போது மட்டும் எனக்கு சிக்னல் கிடைப்பதில்லை. நான் நல்லவன் தான். மியாவின் மீதிருக்கும் மோகத்தை என்னால் தணிக்க முடியவில்லை. அதனால் அவளை நான் துன்புறுத்தியது இல்லை. தவறாக பேசியது இல்லை. நண்பனாக செயல்பட்டு கொண்டிருக்கிறேன். ஆனால் நண்பனாக என்னால் எண்ணத்தை வளைக்க முடியவில்லை. அவளையும் வளைக்க முடியவில்லை.

உள்ளேயே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறேன். அவளிடம் காதலை சொன்ன முயலும் போது ஒருமாதம் இந்த உணர்வு இருந்தது எனக்கு. மறக்க முடியவில்லை. அவளையும் அவளுடனான தருணங்களையும். அவளிடம் காதலை எப்படி சொல்வது. ஏதாவது நினைத்துக்கொள்வாளா? ஒரேயடியாக என்னுடனான பழக்கத்தை முறித்துக்கொண்டு விடுவாளா? என்னிடம் இருந்து வெகுதூரம் சென்றுவிடுவாளா? என்னை பிளாக் செய்துவிடுவாளா? என்றெல்லாம் பயம் இருந்தது. ஆனாலும் தைரியம் வரவழைத்து அவளிடம் என் காதலை சொன்னேன். ஒரு வருடம் உருக உருக காதலித்தோம். அது ஒரு மனித இதயத்தின் வரைபடம். அதன் இடது பக்கத்தில் ‘புழல்’ என்றும் வலது பக்கத்தில் ‘கொடைக்கானல்’ என்றும் கீழே ‘சென்னை’ என்றும் எழுதப்பட்டிருந்தது.

"நீ இப்ப சிறையில் இல்லதான?" என்று நான் நடுங்கும் குரலில் கேட்டேன். கமல் சிரித்தான். "சிறை என்பது ஒரு புவியியல் இடம் அல்ல நண்பா, அது ஒரு மனநிலை. நான் புழலில் இருந்தபோது, என் உடல அங்கே விட்டுட்டு என் ஆன்மாவ சௌந்தர்யாவிடம் அனுப்பினேன். லாவண்யா சிறை வந்ததெல்லாம் உடலைத் தேடி அல்ல, எனது நிழலைத் தேடி. அதனால்தான் அவள் பார்த்த இடமெல்லாம் பனி உருகிக் கொண்டிருக்கிறது" என்றான். அப்போதுதான் எனக்கு அந்த உண்மை புரிந்தது. கமல் ஒரு முனியாக மாறியிருக்கிறான். அவன் கொடைக்கானலின் பனியை சென்னையின் வெப்பத்திற்கு தற்காலிகமாகக் கடத்திக் கொண்டிருக்கிறான். அதனால்தான் மியாவிடம் அந்த வாசனை வீசியது. ஆனால் அது ஏன் எனக்கு இருபது லட்ச வருடத்தை பின்னோக்கி கடத்தியது? கமல் சிறையிலிருந்து தப்பிக்கவே இல்லை. அவன் இப்போதும் புழல் சிறையில்தான் இருக்கிறான் என்பதை உணர்ந்தேன்.


உணரப்படும் உண்மை என் மூக்கிற்குள் ஏறியது. பனி ஏறுவதைப் போல. வெள்ளைக்காரன் மூக்குப்பொடியை போல. நான் அதிர்ச்சியில் உறைந்து மியாவைப் பார்த்தேன். அவள் புன்னகைத்தாள். "ஆமா, இப்ப உன் முன்னாடிருக்கும் கமல், அஞ்சு மாசமா உருவாக்கி வச்ச மனபிம்பம். அவனுடைய தவத்திற்கு காட்டுமுனி பலன் குடுத்துருக்கு. அவன் தவம் பண்ணி தியானம் செஞ்சு உணர்வுகளாலயே அவனோட மனித உருவத்த உருவாக்கிருக்கான்" என்று சொல்லி கெக்கலித்தாள். முதல் முறையாக நான் அன்று அவளுடைய மன சிறைக்குள் சென்றது அன்று தான். “டுள்பா” என்றாள். “டுள்பாவா?” பித்துபிடித்துக்கொண்டிருந்தது எனக்கு. ஒரு தீவிரமான உணர்வு மூலம் ஒரு உருவத்தைப் பெறுவது என்று அவள் உளறியபோது எனக்கு பேய்க்கதையை நேரில் பார்ப்பது போல இருந்தது.

கமலின் லட்சியமும், சௌந்தர்யாவின் காதலும் சேர்ந்து ஒரு புதிய கமலை உருவாக்கிவிட்டன. நிஜமான கமல் இன்னும் சில நாட்களில் சிறையிலிருந்து வருவான். ஆனால் அவன் வருவதற்கு முன்பே அவனுடைய லட்சியம் இங்கே ஒரு உருவமாக உலவத் தொடங்கிவிட்டது. "இதுதான் அன்பு" என்றான் அந்த மாயக்கமல். அதை மட்டும் அவன் சல்லாபிக்கவில்லை "அன்பு எங்கே இருக்கிறதோ, அங்கே இறைவன் இருக்கிறான். சிறை என்பது உடலுக்கு மட்டும்தான். எண்ணங்களுக்கு எல்லைகளே இல்லை" என்றான். “என்னை இந்த கனவில் இருந்து வெளியேற்று ஆண்டவா” என்றேன். முதன்முதலாக கடவுளை அழைத்தேன். “கடவுள் என்ற ஒன்று இன்றில்லை என்றுமிருந்ததில்லை” என்றான் மாயக்கமல். இஞ்சிட்டீ எனது குரலை கிழித்தது. அவனையும் மியாவையும் சேர்த்துவைத்து பைத்தியக்கார புரளிகளை கேட்டுக்கொண்டிருப்பது எனது குரல்வளையை நெரித்தது.

இடுக்குகளுக்கு வெளியே தெரிந்து கொண்டிருந்த சாலையில் இப்போது மழை பெய்யத் தொடங்கியது. அந்த மழையில் அந்த மாயக்கமல் மெல்ல மெல்ல கரையத் தொடங்கினான். ஆனால் அவன் விட்டுச் சென்ற ‘ஆறாம் அட்டவணை’ வரைபடம் என் கையில் ஈரமாக இருந்தது. “நாம் யாரை நேசிக்கிறோம், யாரைப் பாதுகாக்கப் போராடுகிறோம் என்பது முக்கியமல்ல. அந்தப் போராட்டத்திற்காக நாம் எதை இழக்கிறோம், எதை உருவாக்குகிறோம் என்பதே முக்கியம்” என்று என்னையும் மியாவையும் பார்த்துக்கொண்டே சொன்னான். புழலின் வெப்பமும், கொடைக்கானலின் குளிரும், சென்னையின் ஈரப்பதமும் ஒரே புள்ளியில் சந்தித்தன. அந்தப் புள்ளிதான்… லாவண்யா அவன் மீது வைத்திருக்கும் தளராத உறுதி என்பது புரிந்தது. புரிகிறது. பீஃப் சமைக்கும் பொழுதுகளில் என்னை ஏன் அவன் அழைப்பதில்லை என்று இன்றும் புரியாத புதிராக இருக்கிறது.


வெள்ளைக்காரன் மூக்குப்பொடி
சிறுகதை
கேபிஆர்

  click this QR give me coffee

Comments

Popular posts from this blog

சோம்பேறியின் நினைவுச்சின்னம் - சிறுகதை

சாவுக்கப்பால் - சிறுகதை

கல்முகத்தின் காதல் - General 1925 USA