தூத்துக்குடி கொத்தனார் ஆதிமூலம் - Kumari 2022 Malayalam
நாரணத்து பிராந்தன் ஒரு ஞானி, ஆனால் உலகம் அவரை ஒரு 'பைத்தியமாக' பார்த்தது. தினமும் காலையில் ஒரு மிகப்பெரிய பாறையை உருட்டிக்கொண்டு ஒரு மலையின் உச்சிக்குச் செல்வார். உச்சியை அடைந்ததும் அந்தப் பாறையை கீழே தள்ளிவிடுவார். அது உருண்டு ஓடுவதைப் பார்த்து கைகளைத் தட்டிச் சிரிப்பார். மனிதர்கள், பாறையை மேலே உருட்டுவது போல, தங்கள் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு செல்வம், புகழ் என எதையாவது சேர்த்துக் கொண்டே இருக்கிறார்கள் ஆனால் பாறை கீழே விழுவது போல, விதி அனைத்தையும் ஒரே நொடியில் அழித்துவிடுகிறது. இதை நினைத்து கவலைப்படாமல் சிரிப்பதே ஞானம் என்பது அவர் உலகிற்குச் சொன்ன பாடம். மித் ஆப் ஸிஸிபஸ் என்ற கிரேக்கத்தின் தொன்ம கதாபாத்திரத்தை ஒட்டி காம்யூ ஒரு கட்டுரை எழுதியிருப்பார். அதுவும் இதே துன்பம் வரும் போது ஜாலியாக இருக்க வேண்டும் என்னும் தத்துவத்தை இதே போன்றதொரு ஸிஸிபஸ் கதாபாத்திரத்தை மையப்படுத்திய கதையை வைத்துதான் எழுதியிருப்பார்.
ஒருமுறை ' எமன், நாரணத்து பிராந்தனை பிடிக்க வந்தபோது, அவரின் அறிவைக் கண்டு வியந்து, வரம் ஒன்றை கேட்க சொன்னாராம். அதற்கு "என் இடது காலில் உள்ள வீக்கத்தை வலது காலுக்கு மாற்று" என்று நாரணத்து பிராந்தன் கேட்டாராம். எதற்கும் ஆசைப்படாத ஒரு ஞானியின் உச்சக்கட்ட கேலி இது என எமன் வியந்தாராம். இதெல்லாம் நாட்டுப்புற கதை கடத்தல்கள் என்றாலும் சுவாரஸ்யமாக இருக்கும் கேட்பதற்கு. நாட்டுப்புறக் கதைகளின் சுவாராஸ்யமே அது கேள்வி ஞான கதைகளாக கடத்தப்படுவதால் தான். கள்ளியங்காட்டு நீலி தான் கேரள நாட்டுப்புறக் கதைகளில் மிகவும் அச்சமூட்டும் ஒரு கதை. நீலி ஒரு அழகான பெண், ஒரு நம்பூதிரியால் ஏமாற்றப்பட்டு கொல்லப்படுகிறாள். அவள் ஒரு பேயாக மாறி, கள்ளியங்காடு என்ற பகுதியின் வழியாகச் செல்பவர்களை, தன் அழகால் மயக்கி ரத்தம் குடித்துக் கொன்று வருபவள். பல மந்திரவாதிகளால் அவளை அடக்க முடியவில்லை. இறுதியில், மாபெரும் சக்திகள் கொண்ட கடமட்டத்து கத்தனார் என்ற பாதிரி ஒருவர், தன் மந்திரக்கோலைப் பயன்படுத்தி அவளை அடக்கியதாகக் கூறப்படுகிறது ஒரு புறம். கட்டமரத்து கத்தனார் கதையில் இருந்து தூத்துக்குடி கொத்தனார் கதை வந்ததா என்று படித்து பார்க்க வேண்டும். இதே கள்ளியங்காட்டு நீலி ஒரு நவீன சூப்பர் ஹீரோ கதையாக இருந்தால் அதுதான் லோக்கா.
இன்றுவரை கேரளாவின் சில பகுதிகளில் யட்சி என்று அழைக்கப்படும் இம்மாதிரி பேய்கள் பனை மரங்களில் வசித்து வந்து ஆண்களை கவர்ந்திழுப்பதாக கதைகள் உலவுகின்றன. 'குமாரி' படத்திற்கு இந்த கள்ளியங்காட்டு நீலி கதையே மூலம். அதுமட்டுமில்லாமல் பெருந்தச்சன் கதை ஒன்று இருக்கிறது. பெருந்தச்சன் ஒரு உலகப் புகழ்பெற்ற தச்சர். தன் மகனின் திறமையைப் பார்த்து பொறாமைப்பட்டு, தற்செயலாக ஒரு உளியைக் கீழே போட்டு மகனைக் கொன்றதாகச் சொல்லப்படும் ஒரு சோகமான சிற்பியின் கதை. நாட்டுப்புற கதைகளின் சிறப்பம்சமே என்னவென்றால் அவைகள் வெறும் பேய்க்கதைகளாக மட்டுமில்லாமல் மனிதனின் ஆசை, பொறாமை, ஞானம் மற்றும் கர்மாவை விளக்கும் தத்துவக்கதைகளாக இருக்கும்.
காயங்குளம் கொச்சுண்ணி என்ற கதை, 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு 'ராபின் ஹூட்' வகையறா திருடன் எப்படி பணக்காரர்களிடம் இருந்து திருடி ஏழைகளுக்கு கொடுத்தான் என்பதை பற்றிய கதை.ஒடியன் என்று ஒரு கதை உண்டு. ஓடியன் என்பது ஒரு பழங்குடி கூடுபாயும் கலை. இரவில் விலங்குகளின் வடிவமெடுத்து மனிதர்களை அச்சுறுத்தி தாக்குபவர்களை பற்றியது. பரயி பெட்ட பந்திரிகுலம் என்றொரு கதையுண்டு. வரருசி என்ற பிராமணருக்கும், ஒரு தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்ணுக்கும் பிறந்த 12 குழந்தைகள் 12 வெவ்வேறு சாதிகளில் வளர்கிறார்கள். அதில் ஒருவன் தான் நாரணத்து ஸிஸிபஸ் பிராந்தன். இன்னொருவன் பெருந்தச்சன். இப்படி 12 கதைகள். ஆந்தாலஜியாக எடுத்தால் செம்மையாக இருக்கும். கேரளாவின் பாம்புக் கோவில்கள் பற்றிய மர்மமான நாட்டுப்புற கதைகள் நிறைய இருக்கின்றன. அந்த கதைகள் இன்னும் சினிமாவில் பயன்படுத்தப்படவில்லை.
அதைவிட சுவாரஸ்யமான கேரளாவின் பழைய தலைநகரமான திருக்காரியூர் பற்றியும் அதன் அரசர்கள் பற்றியும் அவர்களின் மந்திரவாதிகள் பற்றியும் சுவாரசியமான பல கதைகள் திரைப்படமாக எடுக்கப்படாமல் இருக்கின்றன. கொட்டாரத்தில் சங்குண்ணியின் ஐதியமாலா படைப்புகளை படித்தால் இதுபோன்ற கதைகளில் இருக்கும் ஆழமான உலகத்தை அனுபவித்துவிட்டு வரலாம். நிர்மல் சகாதேவ் இயக்கத்தில் 2022-ல் வெளியான 'குமாரி' திரைப்படம், நாட்டுப்புறத் திகில் கதை வகை. சாபத்திற்கு உள்ளான ஒரு குடும்பத்தின் பின்னணியில் தாய்மையும், வர்க்கப் போராட்டத்தையும் பேசுகிற திரைக்கதை. Cyclical Tragedy பாணியில் கட்டமைக்கப்பட்டுள்ள திரைக்கதை. சோகமான கதை மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டே இருக்கும் படியான ஒரு திரைக்கதை அமைப்பு.
பாட்டி சொல்லும் ஒரு கதையுடன் தொடங்குகிறது திரைக்கதை. ஒரு தேவதை ஒரு மனிதன் மேல் காதல் கொண்டு அவனுக்கு சாத்தன், கார்ய தேவன் என இரு மகன்களைப் பெற்றெடுக்கிறாள். அசுர சக்தி கொண்ட இவர்கள் மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதால், தேவதை அவர்களை விட்டுவிட்டு அவள் உலகத்திற்கு சென்றுவிடுகிறாள். மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக இந்த சக்திகளை அடிமைப்படுத்தத் தொடங்குவதே காஞ்சிரங்காட்டு குடும்பத்தின் சாபத்திற்குத் தொடக்கமாகிறது. இப்போது குமாரி என்ற ஒரு அநாதை பெண் காஞ்சிரங்காட்டு குடும்பத்தின் இளைய மகன் துருவனிடம் அவர்களின் பழங்கால வீட்டில் வாக்கப்படுகிறாள். முதலில் மனநலம் பாதிக்கப்பட்டவனாகத் தோன்றும் துருவன், குமாரியின் அன்பால் மெதுவாக மாற ஆரம்பிக்கிறான். ஒரு நாள் அந்த வீட்டின் பரணில் ஒரு மர்ம உருவம் இருப்பதை குமாரி பார்த்துவிடுகிறாள்.
அதை அவள் ஆராயப்போக, அந்த வீட்டின் மூதாதையரான துப்பன், கார்ய தேவனுடன் ஒரு ஒப்பந்தம் செய்திருப்பதை அறிகிறாள். கிராமத்தினுடைய செல்வத்திற்காக, ஒவ்வொரு 12 தலைமுறைக்கும் ஒருமுறை பிறகும் முதல் ஆண் குழந்தையைப் பலி கொடுக்க வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம். தற்போது குமாரியின் வயிற்றில் வளரும் குழந்தையே அந்த பலிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 12டாவது குழந்தை. அதிகாரத்தின் மீதான ஆசையால் துருவன் மெல்ல மெல்ல ஒரு அரக்கனாக மாறுகிறான். கார்ய தேவனைப் போலவே தன் விரல்களைச் சிதைத்துக் கொண்டு, தன் சொந்தக் குழந்தையையே பலி கொடுக்கத் துணியும் அளவுக்கு அவன் மனம் மாறுகிறது. குமாரி தன் குழந்தையைக் காக்க, காட்டில் வாழும் பழங்குடி மக்களையும் அவர்கள் வணங்கும் சாத்தனையும் துணைக்கு அழைக்கிறாள். இறுதியில் இருபெரும் சக்திகளுக்கு இடையே நடக்கும் போரில், என்ன நடக்கிறது? படம் எப்படி முடிகிறது என்பதே கதை.
ஆணாதிக்கத்திற்கு பலிகடாவாகும் பெண்ணின் கதையாக இதை நான் பார்க்கிறேன். காஞ்சிரங்காட்டு ஆண்கள் எப்படி பெண்களை வெறும் ஓரு வாரிசை உருவாக்கும் இயந்திரமாக பார்க்கிறார்கள்? குமாரி தன் மீதான ஆதிக்கத்தை உடைத்துத் தன் குழந்தையைக் காக்கும் பயணம் எப்படி இந்த கதையின் மையக்கருவாக மாற்றியெழுதப் பட்டிருக்கிறது? 'கார்ய தேவன்' கதாபாத்திரம் நிலப்பிரபுத்துவத்தின் அடையாளமாக படைக்கப்பட்டு, 'சாத்தன்' கதாபாத்திரம் காடும் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளமாகவும் எழுதப்பட்டு காட்டப்படுகிறார்கள். மேட்டுக்குடி மனிதர்கள் அரக்கர்களை விடக் கொடூரமானவர்கள் என்பதை இந்த கதை உணர்த்துகிறது. குமாரியின் திருமணமும் அந்த வீட்டின் திகிலான சூழலும் முதலில் அறிமுகபடுத்தப்பட்டு அவள் கர்ப்பம் தரித்தலும் பரணில் அந்த ரகசிய உருவத்தை பற்றி அறிதலும் துருவன் வில்லனாக மாறுவதும் கதையின் முக்கியமான திருப்பங்களாக மாறி குழந்தை பிறப்பதும் இரண்டு சக்திகளுக்கு இடையிலான இறுதிப் போரும் முடிவும் என திரைக்கதை அழகாக எழுதப்பட்டிருந்தாலும், துருவன் ஒரு பரிதாபமான மனிதானாக இருந்து ஒரு கொடூரமான மந்திரவாதியாக மாறும் விதம் அபாரமாக எழுதப்பட்டிருந்தாலும், குமாரி கண்காணிக்கப்படும் காட்சிகள் தொய்வை தருகிறது. கதைக்கு தேவையில்லாத கள்ளத்தொடர்பு கிளைக்கதைகள் பிரதானக் கதையின் ஈடுபாட்டை தடுக்கும் தேவையற்ற அம்சமாக தோன்றியது.
கதை முழுக்க முக்கியமான கதாபாத்திரமாக செயல்பட்டு வந்த குமாரி கதாபாத்திரம், இறுதிப்போர் காட்சிகள் முழுக்க முழுக்க அந்த இரண்டு எதிரெதிர் துருவங்களுக்கு இடையே நடப்பதால், அவளின் பங்கு சண்டையை வேடிக்கை பார்க்கும் ஒரு பார்வையாளரின் பங்காக சுருங்கிவிட்டது. கதையில் பதற்றமான சூழலை உருவாக்குவதில் இயக்குனர் நிர்மல் சகாதேவ் வெற்றியடைந்தாலும், சில இடங்களில் கதையின் வேகத்திற்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை விட வேகத்தை தடை செய்வது போல கதையின் போக்கிற்கு சம்மந்தமில்லாத உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையில் இருந்து நம்மை வெளியே தூக்கிப்போடுகிறார்.
ஐஸ்வர்யா லக்ஷ்மி, புதிதாக திருமணமான ஒரு எளிமையான பெண்ணாக இருந்து தன் குழந்தையை காக்கும் தாயாக மாறும் விதம் அபாரமான நடிப்பு. ஷைன் டோம் சாக்கோவின் பேராசையால் அழிந்து போகும் கதாபாத்திரத்தின் 'உணர்வுப் பூர்வமான நடிப்பு அட்டகாசம். நெருப்புப் பந்தம் போன்ற பொருட்களை வைத்து இயற்கை ஒளியைப் பயன்படுத்தி ஓவியம் போன்ற காட்சியமைப்புகளை தந்துள்ள ஒளிப்பதிவாளர் ஆபிரகாம் ஜோசப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். திகில் காட்சிகளின் மர்மத்தை அதிகரிக்க விளக்கொளியை வைத்து லைட்டிங் செய்தது காட்சிகளை சுவாரஸ்யப்படுத்தியது. வீட்டிற்கு பின்னால் இருக்கும் குளங்கள், காட்டுப்பகுதிகளை சரியான கோணங்களில் பயன்படுத்தி கேமரா மூலமாக கதை சொல்ல கடுமையாக வேலைப்பாடு பாத்திருக்கிறார் ஆபிரகாம். அந்தப் பழைய தறவாடு வீட்டை ஒரு கதாபாத்திரமாகவே மாற்றியுள்ள கோகுல் தாஸின் கலை வடிவமைப்பும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பழங்கால ஓலைச்சுவடிகள், பலிபீடங்கள் போன்ற பொருட்கள் தான் நாட்டுப்புற கதைக்கான நம்பகத்தன்மையை வழங்குகின்றன. ஒளிப்பதிவும் கலை வடிவமைப்பும் இது போன்ற கதைகளில் வழக்கத்திற்கு அதிகமான மடங்கு இணைந்து பின்னிப்பிணைந்து வேலைப்பார்க்க வேண்டும். பின்னிப்பிணைந்து வேலை பார்த்திருக்கிறார்களா தெரியவில்லை ஆனால் கதைக்கு தேவையான வேலையை பார்த்திருக்கிறார்கள்.
காட்டின் அமைதியும், கண்ணுக்குத் தெரியாத சக்திகளின் சத்தத்தையும் கேட்பதை போன்ற உணர்வையும் துல்லியமாக வடிவமைத்துள்ள ஒலி வடிவமைப்பு. சுரபி லக்ஷ்மி என்பவர் 'முத்தம்மா' என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு விறுவிறுப்பாகத் தொடங்கினாலும், திரைக்கதையின் நடுப்பகுதி காட்சிகளில் ஏற்படும் தொய்வை அவரது எடிட்டிங் திறமையை வைத்து சரிசெய்ய முடியவில்லை. லொகேஷன் ஸ்கவுட்டிங் பிரமாதமாக செய்திருக்கிறார்கள். அதுவும் இந்த குமாரி படத்தின் கதை சொல்லலின் வெற்றிக்கு முக்கியக் காரணம். கேரளாவின் அந்த மேகமூட்டமான மலைகளும், காடுகளும் கதையின் தீவிரத்தை உணர்த்துகின்றன.
முழுக்க முழுக்க கேரளாவின் 'சாத்தான்' வழிபாட்டு முறையை ஒட்டி மனிதர்கள் தங்களின் பேராசைக்காக தெய்வங்களை எப்படி அடிமைப்படுத்துகிறார்கள் என்பதை இந்த கதை காட்டுகிறது. நிலப்பிரபுத்துவ காலத்தின் அதிகாரத்தையும், அந்த அதிகாரத்தைத் தக்கவைக்க அதிகார துஷ்ப்பிரயோகம் செய்ய துணிபவர்கள் செய்யும் கொடூரங்களையும் இந்த கதை எடுத்துக்காட்டுகிறது. படத்தில் வரும் 'துப்பன்' கதாபாத்திரம், கேரள நாட்டுப்புறக் கதைகளில் வரும் மந்திரவாதிகளின் சாயலில் உருவாக்கப்பட்டிருக்கிறது. தீய சக்திகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, தலைமுறை தலைமுறையாக மரணமில்லாமல் வாழ்வதும், அதற்குப் பிரதிபலனாகத் தன் வம்சத்தையே பலி கொடுப்பதும் கேரளாவின் பழைய 'மாந்தீரிக' கதைகளில் வரும் ஒரு முக்கியமான அம்சம். அதை இந்த கதையில் அப்பட்டமாக அப்படியே காட்டியிருக்கிறார்கள். தமிழகத்தில் 'காவல் தெய்வங்கள்' மற்றும் 'சிறு தெய்வ வழிபாட்டு' முறைகளுடன் இந்த கதைகளை ஒப்பிடலாம். ஆனால், 'குமாரி' படத்தில் காட்டப்படும் மந்திரவாத சாபங்கள், தமிழின் 'முனி' அல்லது 'காட்டேரி' கதைகளை விடவும் அதிக சிக்கலான பாணியை கொண்ட கதைகளாகும். கேரள நாட்டுப்புறக்கதைகளின் கதையம்சம் அதன் உணர்வுகளால் உருவாகும் சூழ்நிலைகளே வேறு. துல்லியமாக சொல்லப்போனால் 'தும்பாட்' படத்தைப் போல, மூதாதையர்களின் பாழடைந்த வீட்டின் இருண்ட ரகசியங்களை மையமாகக் கொண்ட கதைகள் தான் குமாரி போன்ற மாந்த்ரீக கதைகளின் அடிநாதம். தமிழில் இதுபோன்ற உணர்வுகளை கொண்ட நாட்டுப்புற கதைகளை நாம் அனுபவிக்க முடியாது. தமிழகத்து நாட்டுப்புற கதை கொடுக்கும் உணர்வுகள் தனி ரகம். இயக்குநர் நிர்மல் சகாதேவ், இந்தக் கதையை வெறும் பேய்க்கதையாக சொல்லாமல், பெண்ணியத்தையும் சாதிய படிநிலைகளையும் விமர்சித்திருக்கிறார். "தெய்வங்கள் தீய சக்திகள் அல்ல, அவற்றை ஆள நினைக்கும் மனிதர்களின் மனம் தான் சாத்தான்" என்பதுதான் இந்த நாட்டுப்புற கதையின் சாராம்சம்.
தூத்துக்குடி கொத்தனார் ஆதிமூலம்
Kumari 2022 Malayalam
கேபிஆர்


Comments
Post a Comment