சோம்பேறியின் நினைவுச்சின்னம் - சிறுகதை


வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கிறேன். மொட்டை மாடியுடன் கூடிய ஒரு அறை. யாருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பினை? பாதி மொட்டைமாடி மீதி வீடு. ஒரு கயித்துக்கட்டில். இரவில் தாபாவில் பட்டர் நாண் சாப்பிடுவது போல பன்னீர் பட்டர் மசாலாவும் சிக்கன் 65யும் ஆர்டர் செய்து இரவு வானை ரசித்த படி சாப்பிடுவேன். 11 மணிக்கே இப்போதெல்லாம் சாப்பிட்டு விடுகிறேன். ஒருமணி இரண்டுமணி வரையெல்லாம் இப்போது எனது இரவுகள் செல்வதில்லை சுதாரித்துக்கொண்டது. இந்த நூறு சதுரடி அறைதான் இப்போது என் பிரபஞ்சம்.

ஒரு பழைய பேச்சிலர் ரூமாக இருந்தது. இதற்கு முன் இங்கே இருந்தவர்கள் செடி வளர்த்து மாட்டி பிரச்சனையாகி சண்டைபோட்டு வீட்டை காலி செய்து அதற்கு பின்னர் ஆறு மாதம் ஸ்டோர் ரூமாக வைத்து. வாடகை விடவே ஐடியா இல்லாத வீட்டு உரிமையாளரிடம் நான் பேசி இப்போது குடிபெயர்ந்து இருக்கிறேன். என்னுடைய பேச்சு திறமையை நினைத்து நான் வியக்காத நாளில்லை. ஆனால் எனது வாழ்வின் தோல்விகளுக்கும் இப்போது சொந்த வீட்டில் தங்காமல் இப்படி வாடகைக்கு தீப்பெட்டியின் ஒற்றை தீக்குச்சியாக தங்குவதற்கும் இந்த பேச்சு தான் காரணம். வீட்டு உரிமையாளர் ஒரு டீக்கடைக்காரர். இருபது வருடங்களாக நான் தான் அவரது சினிமா டிஸ்கஸர் . தொடர்ந்து இருபத்தைந்து வருடங்களாக தமிழ் திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கும் திருவான்மியூர் பகுதியில் கடை வைத்திருக்கும் ஒரு சங்ககால டீக்கடைக்காரர். களப்பிரர்கள் ஆண்ட நிலங்களை அவர்களுக்கு முன் ஆண்ட மூவேந்தர்கள் இவரின் கடையில் வந்து தேநீர் அருந்திவிட்டுதான் ஒரு நெல்லிக்கனியை கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள்.

காலை நான்கு மணிக்கே கடையை திறந்துவிடுவார். 4.05 மணிக்கு அங்கு வந்து முதல் ஆளாக அமர்ந்து, கடந்த பத்து வருடங்களாக நான் தான் அவரது முதல் கஸ்டமர். சிகரெட் பழக்கத்தை பற்றி அவரிடம் ஒரு நீண்ட உரையாடலை பலவருடங்கள் நிகழ்த்தி அந்த பழக்கத்தை நிறுத்தியதால் அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும். அந்த போதையில் இருந்து அவரை விடுவித்து, தமிழ் சினிமாவை டிவியில் பார்த்துக்கொண்டிருந்தவரை திரையரங்கிற்கு அழைத்துச் சென்று ஒவ்வொரு வெள்ளியும் சனியும் காலை மாலை காட்சிகளில் சரணாகதியடைய திருவான்மியூரின் தியாகராஜா தியேட்டரின் திரைச்சீலைக்கு அவரை அடிமையாக்கியவன் நான். அதில் பெரிய பாதகம் இல்லாததால் தான் இலவசமாக நிறைய பிஸ்கட்டுகளை இன்றுவரை அவர் எனக்கு கொடுத்திருக்கிறார். இப்போது வாடகைக்கு இருக்கும் அவரது வீட்டின் மொட்டை மாடி அறைக்கு கூட அவர் என்னிடம் வாடகை கேட்டதில்லை. இருந்தாலும் மாதாமாதம் அவரது சட்டைப்பாக்கெட்டில் ஆறாயிரம் ரூபாய் கேஷாக வைத்துவிடுவேன். வைத்துவிட வேண்டும் என்று நினைப்பேன்.

திருவான்மியூர் ஒரு திரையரங்கமாக இருந்தவரை நான் அவருக்கு டிக்கெட் போட்டேன். ஐம்பது ரூபாய் பால்கனி டிக்கட். அப்பாவின் பாக்கெட்டில் எப்போதும் நூறு ரூபாய் நோட்டுகள் நிறைய இருக்கும். அதிலிருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்துக்கொண்டு போய் டிக்கட் வாங்கிவிட்டு வந்து இவரை அழைத்துக்கொண்டு டீக்கடையில் இருந்து திருவான்மியூர் சிக்னல் வரை டிவிஎஸ்ஸில் சென்று அங்கிருந்து வலது பக்கம் திரும்பி வண்டியை வலது பக்கமே தள்ளிக்கொண்டு போய் உள்ளே திரையரங்கின் பார்க்கிங்கில் விடுவோம். அப்போதெல்லாம் பார்க்கிங்கிற்கு தனியாக பணம் கொடுத்த நினைவில்லை. மணியிடம் கேட்கவேண்டும். அவர் பெயர்தான். டிவிஎஸ் காரர். டீக்கடைக்காரர். பெயிண்ட்டர். பெயரில் என்ன இருக்கிறது. பெயரில் தானே எல்லாமே இருக்கிறது? இல்லையென்றால் பெயரை துறக்க சொல்லுங்கள். உண்மைகளை மறைக்கும் முகமூடிகளை பிடிக்கவில்லை என்றால் உடலை மறைக்கும் சட்டைகளை களைய சொல்லுங்கள். பெயர் என்பது பலமூடிகளில் ஒரு முகமூடி தானே? சிலசமயம் அவனை ‘தியாகராஜா தியேட்டரே’ என்று கூட அழைப்பேன். என்னை அவன் பிக்பாகெட் என்று அழைப்பான்.

“ஒருநாள் அப்பா இதை கேட்டுவிட்டு அவனிடம் சண்டைபோட்டார். பாதிக்கப்பட்டவரே திருடனுக்காக என்னை அடிக்கவருகிறாரே” என்று மணிக்கு தர்மசங்கடமாக இருந்தது அன்று. எஸ்2வாக மாறிய பின்னர் அவன் எனக்கு டிக்கட் போட ஆரம்பித்தான். “எதற்கு?” என்றதற்கு, “நீ கொடுத்த சமோசா, ப்ரெட் ஆம்லெட், ஜிலேபி, குலாப் ஜாமூன், பானிபூரி, தாஹி பூரி, சுண்டல் வடை, மெதுவடை, வெங்காய போண்டா ஐடியாலதான் இப்ப பத்து மடங்கு சம்பாதிக்கிறேன். டிக்கட் என்ன உனக்கு இப்ப நான் கட்டிக்கிட்டிருக்க வீட்டையே எழுதி கொடுப்பேன்” என்றான். பின்னாட்களில் வீட்டை எழுதி கேட்கவில்லை. அது பெரிய தவறில்லை என்று தோன்றியது. மனித உறவுகளுக்குள் வீடு, சொத்து, பணம் எல்லாம் அன்பை வளர்ப்பதற்காக உள்ளே வரலாம் ஆனால் உறவுகளின் இடைவெளியை விரிவுப்படுத்த அவைகளை என்றுமே நாம் அனுமதிக்கக்கூடாது என்று நினைப்பேன். அதுமட்டுமில்லாமல் அவருடைய மனைவி மக்கள் எங்கள் நட்பிற்கு இடையே வராமல் இருக்க இதையெல்லாம் கேட்கக்கூடாது என்று முடிவெடுத்தேன்.

அவனே ஒருநாள் இப்படி ஒரு வீட்டை எனக்கு எழுதிக்கொடுக்கும் பேச்சை எடுத்தான். அவனுடைய கடை விரிவாக்க ஐடியாக்கள் கொடுத்ததற்காகவும், பலமுறை அவனுடைய கடையை என்னுடைய நண்பர்களின் சமூக வலைத்தள பக்கங்களில் காணொளிகளாக பரவவிட்டு. அவனை ஒரு உள்ளூர் ஸ்டார்பக்ஸ்காரன் என்னும் அடைமொழியை உருவாக்கி அதனால் இருபது முப்பது மடங்கு அதிக வாடிக்கையாளர்கள் கடைக்கு ரெகுலர் கஸ்டமராக்கி தற்புகழ் பாட்டை இரவு முழுவதும் குடித்து கும்மாளமிட்டு இருவரும் கடற்கரையில் சுடச்சுட சிக்கன் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டு கொண்டாடுவோம். அப்போதெல்லாம் எனக்கு நன்றி சொல்லுவான். “பிளாஸ்டிக் மாதிரி செயற்கையா இருக்கு. எனக்கு இது வெறும் ஐடியாக்கள். செயலையும் உழைப்பையும் நீதானே கொட்டிக்கொட்டி உனது சாம்ராஜ்யத்தை உருவாக்குன” என்பேன். அவன் கடும் உழைப்பாளி. என்னைப்போல் கிடையாது. இதெல்லாம் நான் கொடுத்த முக்கியமான ஐடியா என்பான். ஆனால் அவன் கடையின் மெனுவில் இருக்கும் உணவு சிற்றுண்டிகளை விரிவுபடுத்தியது எனக்கு பெரிய விஷயமில்லை. சவுக்கார்பேட்டையும், ப்ராட்வே பாரிஸும், தேவி தியேட்டர் பின்புற வடஇந்திய சிற்றுண்டி கடைகளிலும், கசினோ திரையரங்கிலும், க்ரிஷ்ணவேணியிலும், கமலாவிலும், பைலட் திரையரங்குகளிலும் அதனையொட்டிய சிற்றுண்டி கடைகளில் சினிமா நண்பர்களுடன் இருபது வருட திரைப்படத் தவமிருந்ததால் கிடைத்த துண்டுச்செய்தி ஐடியாக்கள் இவை. ஆனால் இதனை “மிகப்பெரிய மேதை கொடுத்த ஒத்துழைப்பு, வாழ்க்கையின் துன்ப காலத்தில் கூட இருந்தவன்” என்று சொல்லி குடித்துவிட்டு சலம்புவான். ஆனால் உண்மையில் நான் கொடுத்த ஐடியாக்களில் முக்கியமான ஐடியா அவனை கிளைகள் வைக்க ஊக்குவிக்காதது தான். அவன் அதிகபட்சம் டீமாஸ்டராக தான் இருக்கமுடியும் என்று நான் தப்புக்கணக்கு போட்டுவிட்டேன். எனது சுயநலமும் ஒரு காரணம். இந்த சூது எதுவும் உணராமல் ஒரு நாள் என்னை கடைக்கு கூப்பிட்டு ஒரு பத்திரத்தை நீட்டினான். தலைக்கு சூடேறி பைத்தியம் பிடித்தவன் போல வாழ்க்கையில் நான் கத்திய ஒரே நாள் அன்று தான். ஏப்ரல் மாதம் இருபத்தைந்து 2015. அவனை கடுமையாக திட்டி சண்டைபோட்டு பல மாதம் பேசாமல் இருந்து கடை பக்கமே போகாமல் இருந்து நாடகமாடி மறுபடி அவனை கண்ணீர்விட்டு அழவைத்து “இனி நான் கேக்காம ஒரு ரூபாக்கூட எனக்கு நீ கொடுக்கக்கூடாது” என்று வாக்குறுதி வாங்கிவிட்டு தான் மீண்டும் நட்பை தொடர்ந்தேன். எப்படியோ ஒரு கஸ்டமர் நல்லவர் அவனின் மனைவியிடம் சொல்லி அவர்களின் சொந்தங்கள் ஒரே சண்டை அவனுடன்.

அவனுடைய மனைவி மக்கள் அவளது குடும்பங்கள் சொந்தங்கள் எல்லாம் ஏற்கனவே பத்து வருடங்களாக “எப்போது இந்த நட்பு முறியும்?” என்று காத்துகொண்டு இருந்தார்கள். அவன் ஒரேயொரு அடுப்பை மட்டும் வைத்துக்கொண்டு டீயும் சிகரெட்டையும் மட்டுமே வியாபாரம் செய்தபோது அவனிடம் யாருமில்லை. அவன் சின்னப்பையனாக இருபத்தைந்து வயதில் ஊர் சுற்றிக்கொண்டிருந்த போது அவனுக்கென்று ஒரு துணை தேட வேண்டும் என்று அவனும் நினைக்கவில்லை. அவனுக்கு ஒரு கல்யாணம் செய்துவைக்கும் முயற்சிகள் யாரும் எடுக்கவுமில்லை. அப்போதெல்லாம் இவர்கள் குடும்பங்களே இல்லை. என்னுடைய அப்பாவிடம் பேசி அவனுடைய அனுமதியை வாங்கி எங்கள் குடும்பத்தில் தேடி அக்கம்பக்க நண்பர்களின் சொந்தங்களை தேடி பின்னர் பக்கத்து தெருவில் தையல் மெஷின் கடை நடத்தி வந்த ஒரு பெண்ணை பேசிமுடித்து அவனுக்கு திருமணம் செய்து வைத்தது நான். என்னால் சொந்தக்காரர்களாக ஆனவர்கள் இன்று எங்கள் நட்பை முறிக்க பார்க்கிறார்கள். காரணம் அவன் என்மீது வைத்திருக்கும் அதீத அன்பு. அவன் எனக்கு ஒதுக்கும் நேரம் அவர்களை தொந்தரவு செய்கிறது. இதனால் விடியவிடிய பேசும் இரவுகளை நான் நிறுத்திக்கொண்டேன். இரவுகளில் தான் எங்கள் உரையாடல்கள் தலைவிரித்து தாண்டவமாடும். ஆனாலும் தியாகம் செய்தேன். நண்பனுக்காக நண்பனின் குடும்பத்துக்காக. ஆனால் அவனுடன் வெள்ளி, சனிக்கிழமை திரையரங்க நேரங்களையும் விட்டுக்கொடுக்க வேண்டுமாம். வெள்ளிக்கிழமை கோயில் போகவேண்டுமாம். காரில் மேல்மருவத்தூர், மாங்காடு எல்லாம் மனைவியை கூட்டிக்கொண்டு போகவேண்டுமாம். அதையும் தியாகம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. குடும்பக்கலாச்சாரம் தானே இங்கே முக்கியம். நட்புக்கென்று கலாச்சாரம் இருக்கிறதா என்ன? ஏற்கனவே நட்புக்கென்று கட்டமைக்கப்பட்ட கலாச்சாரத்திற்குள் அவனை இழுத்துவிடவா? உங்கள் குடும்ப சடங்குகளுக்காக போட்டிப்போட்டு அவனை இருளுக்குள் இழுத்துவிட எனக்கு விருப்பமில்லை. கல்யாணத்திற்கு முன்னர் “இனி சிகரெட்டும் இல்லை சரக்கும் இல்லை” என்று சத்தியம் வாங்கிக்கொண்டது நான் தான். அவனுக்கு புகை உள்ளே போய் என்ன செய்யும் சரக்கு உள்ளே போய் என்ன செய்யும் என்பது தெரியாது. போதையில் எல்லைகளை கடப்பவன் அவன். “போதையானா உனக்கு ஹாஃப் எது? ஃபுல் எது?ன்னு தெரியாதே” என்று அடிக்கடி கிண்டலடிப்பேன். இவ்வளவு செய்துகொடுத்து இன்று அவன் என்னுடன் திரையரங்கிற்கு ஒரு வாலிபர் போல வந்து படம் பார்ப்பது யாருக்கும் பிடிக்கவில்லை. எங்களை தவிர. எங்கள் நட்பின் கோட்டைச்சுவரே சினிமாவும் திரையரங்க மதில்களும் தானே? அதனால் கதிகலங்குகிறது அவர்களது சொத்துரிமை. எந்த உரிமையும் எங்கள் நட்பிற்குள் வரக்கூடாது என்று இப்போதெல்லாம் அவனின் வீட்டிற்கே நான் போவதில்லை.

எங்களின் ஒரே கடற்கரை இந்த மொட்டைமாடி வீடு. எங்களின் ஒரே நதிக்கரை அவனின் தேநீர் கடை. ஒவ்வொரு முறையும் என்னுடைய “பாக்கி டிக்கட் பணத்தை மொத்தமாக திருப்பி கொடுத்துவிடுவேன்” என்று சொல்லும் போதெல்லாம் என்மீது கையோங்கி அடிப்பது போல அவனொரு சைகை செய்துவிட்டு ஒரு புன்னகையுடன் "அடிங்" என்பான். சில சமயம் அந்த "அடிங்" கேட்பதற்காகவே அவனை சீண்டுவேன். முரளி ரசிகன். ரஜினியோ, கமலோ, சிவாஜியோ, விஜயோ அல்ல முரளி. சுந்தரா டிராவல்ஸ் படத்தை இரண்டு முறை பார்த்திருக்கிறோம். அப்போது திருவான்மியூர் தியாகராஜா திரையரங்கம் எதிரில் ஜெயந்தி திரையரங்கம் இருக்கும். சில சமயங்களில் தியாகராஜா திரையரங்கத்தில் படம் பார்த்துவிட்டு அடுத்த காட்சி எதிரே சென்று 30 ரூபாய்க்கு ஜெயந்தியில் இன்னொரு புதுப்படத்திற்கு டிக்கெட் வாங்கி அதையும் பார்த்துமுடித்து வெளியே வரும்போதுதான் மதிய உணவையே சாப்பிடாமல் திரையரங்கிலேயே முழு நாளையும் கழித்துவிட்டோம் என்பதயே அப்போதுதான் உணர்வோம். கேன்டீன் ஸ்நாக்ஸ் வகையறா தொகையறா எனக்கும் பிடிக்காது அவனுக்கும் பிடிக்காது. அதனால் கேன்டீனில் பெரும்பாலும் சாப்பிட மாட்டோம். பழைய எண்ணெய் வாசம் அடிக்கும். பக்கத்தில் அவருக்கு தெரிந்த கந்துவட்டிக்காரர் சிவம் வீட்டிற்கு சென்று, “எங்கிருந்தாலும் வருக” என்று அவரையும் ஃபோன் பண்ணி வீட்டிற்கு வரச்சொல்லி அவர் வாங்கிவைத்திருக்கும் அன்று பொரித்த பேக்கரி மிக்ஸரும், மிளகு வாசமடிக்கும் காராசேவும் சுடச்சுட ரெண்டு மூன்று இஞ்சி டீயும் குடித்தபடி ஏழு மணிவரை அன்று பார்த்த புதுப்படங்களை பற்றி பேசிக்கொண்டு பின்னர் டீக்கடைக்காரரின் டிவிஎஸில் வீட்டிற்கு போக எப்படியும் எட்டு மணி ஆகிவிடும்.

பெரம்பூரில் ஏதோ ஒரு சந்தில், ஒரு கட்டிடத்தில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தவனை ஒரு சினிமா தான் என்னை சந்திக்கவைத்தது. என் சந்திப்பு தான் அவனை திருவான்மியூர் பக்கம் வரவைத்தது. க்ளாஸை கட் அடித்துவிட்டு ஊர் பொறுக்கியாக சுற்றிக்கொண்டிருந்த என்னை அவனது உழைப்புதான் சினிமாவை போட்டிப்போட்டு பார்க்கவைத்தது. அப்போதே அவன் ஐநூறு படங்கள் பட்டியலிட்டான். என்னால் இருநூறு படங்கள் தான் சொல்ல முடிந்தது. ஐசிஃஎப்பில் கட்டிமுடிக்கப்படாத பாலத்தின் நிழலில் நின்று கொண்டு இந்த விளையாட்டை விளையாடியபோது எனது நண்பர்களால் நூறைக்கூட தொடமுடியவில்லை. அந்த வெறித்தனமான சினிமா ரசனை தான் என்னை உதவி இயக்குனர் ஆக்கியது. அவனை இயக்குனர் வேலைக்கு அழைக்கும் போதெல்லாம் “எனக்கு கதையும் எழுத வராது. இயக்கமும் வராது” என்பான். “எனக்கு பணம் சம்பாதிக்கணும். தியேட்டர் கட்டணும்” என்பான். ஆனால் என்னை இயக்குனர் ஆக்கி பார்க்கவேண்டும் என்று அவனுக்கொரு ஆசை இருந்தது. கூடவே கடும் உழைப்பும் இருந்தது. அந்த உழைப்பு தான் அவனை இன்று திருவான்மியூரில் பத்து சொந்த வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு அதில் ஒரு வீட்டு மாடியில் என்னை குடிபெயரவும் வைத்திருக்கறது. வாடகைக்கு.

பத்து வீட்டுக்கு சொந்தக்காரன். முப்பத்தைந்து வயதாகிறது. குழந்தை குட்டி என்றாகிவிட்டது. “இன்னும் என்னோடு ஏன் சுத்திட்டிருக்க?” என்பேன். எழுத்துப்பிழைகளோடு ஒரு பேப்பரில் விமர்சனம் எழுதி எடுத்துவருவான். தினத்தந்தி படிப்பவன் அதில் வரும் சினிமா விமர்சனங்களுக்கு ரசிகன் அவன். எழுத்துப்பிழைகளை வைத்து அவனை கிண்டலடிக்கலாம் என்று தோன்றும். ஆனால் அவன் வைத்த விமர்சனங்களுக்கு முரண்பட்டு வாதாட ஆரம்பிப்பேன். “நீ நினைக்கிற மாதிரி இயக்குனர் படம் எடுக்கணும்னு ஏன் நினைக்கிற?” என்பேன். அவனுக்கு இயக்குனர் ஆகவோ கதாசிரியர் ஆகவோ? வசனகர்த்தா ஆகவோ? திரைக்கதை ஆசிரியனாகவோ? வருவதற்கெல்லாம் எந்த ஆர்வமும் இல்லையாம் ஆனால் இவர் ஆசைப்படுவது போல் அந்த படத்தின் இயக்குனர் படத்தை இயக்கியிருக்க வேண்டுமாம்! படத்தின் கதையை விட இவரின் கதை நல்லா இருக்கே என்று நினைப்பேன். ஆனால் சொல்ல மாட்டேன். ஏதோ மனச்சிக்கல் இந்த விஷயத்தில் அவனுக்கு. பெயிண்ட்டராக இருந்தவன் இன்று டீக்கடை வைத்து பத்து வீட்டை சொந்தமாக வாங்கி மூணு மாடிகள் கட்டி முப்பது வீடுகளில் வாடகை வசூலிக்கிறான். இப்படியொரு உழைப்பும் தன்னம்பிக்கையும் இருப்பவனால் மட்டுமே நல்ல இயக்குனராக இருக்க முடியும். கூடவே கொஞ்சம் உலகசினிமா மற்றும் கவிதைகள் நாவல்கள் இலக்கிய உரையாடகல்கள் இருந்தால் இவனை அடித்துக்கொள்ள இன்னொரு இயக்குனர் வரவேண்டும் என்றிருக்கும். ஆனால் “ஏன்? என்ன நினைக்கிறான்” என்று தெரியவில்லை. ஒரு கல்வி படுத்தும் பாடோ? என்று நினைப்பேன். இதற்காகவே படிப்பை பாதியில் விட்டுவிட்டு வந்த இயக்குனர்களின் வரலாற்றை எல்லாம் அவனிடம் பகிர்வேன். ஆனாலும் அந்த மனிதன் இன்றும் என்னுடன் வெள்ளி, சனிக்கிழமை எஸ்2வில் சினிமா பார்த்துக்கொண்டு தான் இருக்கிறான். டிவிஎஸ் மட்டும் மாருதி ஆல்ட்டோவாக மாறியிருக்கிறது.

என்னை பார்க்க ஒவ்வொரு ஞாயிறும் இங்கே மாடி வீட்டிற்கு வருகிறான். ஒருநாளும் என்னை அனாதை என்று அவன் சொன்னதில்லை. எனது தாய் தந்தை இரண்டும் ஒரே நாளில் பரலோகம் சென்றதற்கு என்னைவிட அவன்தான் அதிகமாக கண்ணீர்விட்டு அழுதான். என் அப்பாவை என்னைவிட அவனுக்கு மிகவும் பிடிக்கும். “எனது தாய் அவனுக்கும் தாய்” என்று அடிக்கடி சொல்வான். “எப்படி இருக்க முடியும்? எனக்கே அவள் தனது தாய்மையை முழுவதும் கொடுக்க முடியாதபோது நீ என்ன தாய்மையை உணர்ந்திருக்க போற?” என்பேன். அவன் ஒரு அனாதை. பால்யத்தில் அவனை அனாதை என்று சொல்லி பலமுறை கிண்டல் செய்து சிரித்திருக்கிறேன். சினிமா வில்லன்களின் தாக்கத்தில் “படிப்பறிவு இல்லாத அனாதை” என்றெல்லாம் திட்டியிருக்கிறேன். “அவனையும் என்னுடன் சேர்ந்து பத்தாவது படிக்க வைத்திருக்க வேண்டும். அப்பாவிடம் சொல்லி அவனை பத்தாவது படிக்க வைக்க சொல்லியிருக்க வேண்டும். மேலும் என்னுடனே கல்லூரி வரை படித்திருக்கவேண்டும்” என்று அடிக்கடி நினைப்பேன். படித்திருந்தால் அவன் இந்நேரம் தொடமுடியாத உயரத்திற்கு சென்றிருப்பான். ஆனால் என்னுடன் படம் பார்க்க யார் இருப்பான்? எனது பால்யக்கால வில்லன் மனோபாவத்தை நான் வெறுக்கிறேன்.

அவன் அதையெல்லாம் மறந்தாலும், ஒரு காம்யூவையும், காஃப்காவையும், தஸ்தாவெஸ்கியையும் தால்ஸ்தாயும் சாத்தரையும் கர்த்தரையும் சிலுவைராஜின் சரித்திரங்களும், தாகூரின் தரிசனங்களும், ஜெயமோகனும் காந்தனும், சுந்தரனும், நிலவனும், கோணங்கியும், பிரமிளும், டாக்கின்சும், டிக்கன்ஸும், சந்திரனும், யாரேனும், நிவேதிதாவும், ராமகிருஷ்ணனும், நாகராஜனும், முருகனும், தஞ்சை ப்ரகாஷையும், பித்தனையும் படித்து முடித்து அவர்களின் கருத்துக்களோடு முரண்டுபிடிக்கும் பிறழ்ந்த மனதை என்னால் கட்டுப்படுத்த முடியாததால் இப்போது நினைவில் வரும் அவனது அப்பாவி முகம்… அந்த முகத்தினுடைய வலி… அடிக்கடி வந்து என்னை தொந்தரவு செய்கிறது. என் நண்பன் மணி இதையெல்லாம் அனுபவிக்காமல் வெறும் தமிழ் படங்களை மட்டும் திரையரங்கில் பார்த்துவிட்டு தெளிவாக இருக்கிறான். எனக்கு அதுவொருவித பொறாமை உணர்வை தருகிறது. “இலக்கியம் படிடா” என்ற போதெல்லாம் அவன் “பக்தி இலக்கியம் இருக்கிறதா?” என்பான்.

மருந்தீஸ்வரர் கோயிலின் ஸ்தல புராணம் வாங்கி வந்து ஒருமுறை அவனுக்கு படித்து காட்டினேன். மெய்மறந்து கெட்டவன் “கபாலீஸ்வர் கோயிலின் கதையை இப்படி படித்துவிட்டு சொல்லு நல்லாருக்கு கேக்குறதுக்கு” என்றான் எனக்கு தோசையின் மீது கடலை சட்னி போட்டுக்கொடுத்துக்கொண்டே… “இந்த கடல சட்னி ஐடியா நீ சொன்னபோது கூட நான் செலவாகும்னு சொன்னேன். ஆனா அடம்பிடிச்சு கடலை சட்னிய தோசைக்கு வச்சு கஸ்டமர்ஸ்க்கு போட்டுக்குடுனு நீ சொன்ன ஞாபகம் இருக்கா?” என்றதற்கு நான் “இல்லை” என்றேன். “நீ தா மச்சி சொன்ன. ஒருநாள் நம்ம துப்பாக்கி பாத்து முடிச்சிட்டு வண்டில பெட்ரோல் இல்லாம தள்ளிட்டு வந்து ஆவின் பால்பூத் கிட்ட ஒரு கடைல நிறுத்தி பூண்டு தோசை வாங்கி சாப்பிட்டோம் ஞாபகம் இருக்கா?” என்றதற்கு “ஆமாம் சாப்பிட்டு முடிச்சிட்டு பக்கத்துல ஆவின்பூத்ல பாதாம்பால் வாங்கி குடிச்சோம்” என்றேன். “அதெல்லாம் ஞாபகம் இருக்கு உனக்கு. அப்பதான் நீ ஒரு சட்னிய சாப்புட்டு … தோசை நல்லா இருக்கு ஆனா இதோட இந்த தக்காளி சட்னிக்கு பதிலா கடல சட்னிய போட்டு சாப்பிட்டா செம்மையா இருக்கும்”னு சொன்ன என்று பெருமூச்சு விட்டான். “ஞாபகமே இல்ல சுத்தமா மறந்து போச்சு.. உன்ன மாதிரி தமிழ் படம் மட்டும் பாத்துட்டு இருக்குறவனாடா நானு? உலக சினிமா தத்துவம் தரிசனம் சிந்தனை இலக்கியம்னு ஆயிரம் படிக்கிறேன் எழுதுறேன்… எனக்கு எப்படி கடல சட்னி ஞாபகம் இருக்கும்” என்றேன். இருந்தாலும் அந்த எனக்கு ஞாபகம் இருந்தது. “கடலையை மைய்ய அரைத்து சரியான அளவில் வெங்காயம் போட்டு சட்னி வைத்து கொடுத்தால் … நம்ம சினிமாக்கு எப்படி அடிமையா கிடக்கிறோமோ அப்படி நம்ம கடைக்கு வரும் கஸ்டமர்ஸ் அடிமையாகிடுவாங்க”னு சொன்னது இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. “கடையின் பல ஐடியாக்கள் நான் கொடுத்து தான் வியாபாரம் பிச்சிக்கிது” என்று அவன் அடிக்கடி சொல்வதாலும். உண்மையான வெற்றியின் காரணம் அவனின் உழைப்பு என்பதாலும் இப்படி பல நினைவுகளை எனக்கு ஞாபகம் இல்லாததுபோல் காட்டிக்கொள்வேன். நாளை அவனுக்கு ஏதாவது நட்டம் வந்து அதற்கு நான் தான் காரணம் என்று சொல்லிவிடுவான் என்று நட்பின் ஆழமான பல தருணங்களை நான் தவறவிடுவேன். தெரிந்தே தவறவிடுவேன். இந்த பட்டும்படாத தாமரையிலை பழக்கம் எனக்கு இருப்பதால் தான் என்னால் இன்னும் சினிமாக்காரன் ஆகமுடியவில்லை. தக்க க்ரெடிட்ஸ் கொடுக்கும் பழக்கம் அவனுக்கு இருப்பதால் தான் அவனால் நல்ல இயக்குனராக வரமுடியும் என்று நினைப்பேன்.

பாமர மனதில் உள்ள ஆழம், அவனுடன் பழகும்விதம் “ஸ்ட்ரீட் ஸ்மார்ட்” என்று சொல்லப்படும் எதார்த்தமான மனநிலை இயல்பாகவே ஒரு மனிதனிடம் உருவாகும் நுட்பம். அது அவனிடம் அபரிமிதமாக இருக்கிறது. ஒரு படைப்பாளியாவதற்கான எல்லா திறமைகளும் அவனிடம் கொட்டிக்கிடக்கும். வெறும் பேச்சையும், ஏட்டறிவையும் வைத்துக்கொண்டு இந்த காலத்தை ஒரு தடித்த சோம்பேறிக்குண்டியால் தேய்த்துக்கொண்டிருக்கும் என்னால் எக்காலமும் சினிமாவில் இயக்குனராக முடியாது. நாந்தான் அந்த விமர்சனப்பிழை… அவன் தான் சினிமாக்காரன். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சிக்கல் மொத்தம் ஒன்பது இடியாப்ப சிக்கல். ஒருவனது ஆகச்சிறந்த உயிர் நண்பன் தன்னை அனாதை என்று கிண்டல் செய்யும் போது எதிர்கொள்ளும் அந்த கையாலாகாத முகத்தை அதே வலியோடு மறுபடி மறுபடி இன்று இயற்கை என்னிடம் மீண்டும் மீண்டும் காட்டி புதைகுழி மர்மமாக மனதை துன்புறுத்திக்கொண்டு இருக்கிறது. அறம் நியாயம் எல்லாம் வெளியே பேசிக்கொண்டு, பிரபஞ்ச தத்துவங்களை எல்லாம் பாட்காஸ்ட் பேசிக்கொண்டு இயல்பு வாழ்க்கையில் எந்தவித அறத்தையும் வெளிப்படுத்தாமல் சுயநலத்துடன் தான் உண்டு தனது தற்பெருமையுண்டு என்று வாழும் பல மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களுடன் பழகியுமிருக்கிறேன். ஆனால் அறமும் நியாயமும் அதுசார்ந்த தத்துவார்த்த விசாரணைகளும் கருணையும் ஒரு மனிதனின் மனதிற்குள் தோன்றக்கூடாத அம்சங்கள் என்று நினைக்கிறேன். இன்று நினைக்கிறேன். மென்று முழுங்குகிறேன். அது ஒருவனை நல்லவனாக வாழ வைக்கிறதா என்று தெரியவில்லை ஆனால் அவனது மனதிற்கு அதுவொரு மலையை தூக்கி சுமக்கும் வலி. அந்த சுமையான வேலையை செய்வதற்கு பதில் எந்தவித அற உணர்வும் இல்லாத சுயநல மனிதனாக வாழ்ந்துகொண்டு யூட்யூப் எழுத்து என்று தத்துவங்களை பதித்து … தத்துவ ஞானி என்ற போலிப்பெயரை சுமந்துகொண்டு போய்விடலாம்.

நண்பனின் வீட்டில் வாடகை கொடுக்காமல் டீக்கு பணமும் கொடுக்காமல் திரைப்பட டிக்கட் பணத்தை லட்சக்கணக்கில் கடன் வைத்து வாழும் வாழ்க்கை வாழ்ந்து என்ன பிரயோஜனம்? ‘கலைஞன்’ என்று தன்னைத்தானே சொல்வது பணம் சம்பாதிக்க துப்பில்லாத மனிதர்கள் சொல்லும் எஸ்கேப்பிசம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் இருபது வருடங்களாக அப்படித்தான் எனது நண்பர்களிடம் சொல்லி வந்திருக்கிறேன். இப்படி மல்லாக்க படுத்துக்கொண்டு முடியும் தாடியும் வளர்த்துக்கொண்டு பறவைகளுக்கு வீட்டில் இடமளித்துக்கொண்டு. பறவைக்கூடுகளுக்கு உள்வாடகை விட்டுக்கொண்டு… “நானே ஒரு வாடகை பாக்கி… என்னிடம் வாடகை பாக்கி வைக்கும் பறவைகளே” என்று பாட்டெழுதி கொண்டிருப்பவனை என்ன சொல்வது? காகங்கள் வருமளவிற்கு புறாக்கள் வருவதில்லை. நான் இரண்டிற்கும் தான் தண்ணீர் வைக்கிறேன். காகங்கள் தான் என்னை எழுப்பிகின்றன காலையும் மதியமும். சுவரில் ஒட்டியிருக்கும் அந்த பல்லிக்கும், ஓயாமல் சுற்றும் துருப்பிடித்த மின்விசிறிக்கும் தெரிந்த ரகசியங்கள் யாருக்கும் தெரியாது. எனக்குக்கூட தெரியாது. எனது நோட்டு புத்தகங்களுக்கும் ஃபோனுக்கும் தரையில் சிதறிக்கிடக்கும் அழுக்குத் துணிகளுக்கும், மூலையில் அடுக்கப்பட்டிருக்கும் காலி தண்ணீர் கேன்களுக்கும் மட்டுமே தெரிந்த உண்மைகள் அவை. ரகசிய கோப்புகள். அவையெல்லாம் வெறும் பொருட்கள் அல்ல... ஒரு சோம்பேறித்தனத்தின் நினைவுச்சின்னங்கள்.

இன்று மதியம், சுயபச்சாதாபம் என் அறைக்குள் நுழைந்தது. இருட்டைப் போல என் படுக்கையில் வந்து அமர்ந்தது. "ஏன் இன்னும் அப்படியே கிடக்கிறாய்?" என்றது. நான் பதில் சொல்லவில்லை. சொல்ல விருப்பமில்லை. இம்மாதிரி உரையாடல்களுக்கெல்லாம் பதில் சொல்லி பழக்கமுமில்லை. ஜன்னல் வழியாகத் தெரிந்த ஒற்றை வேப்பமரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது கதவு தட்டப்பட்டது. அன்பு வந்தாள். அவள் கையில் இரண்டு சூடான காபி டபராக்கள். “எதற்கு இரண்டு?” என்றேன். "இந்தா, இதைக் குடி," என்றாள். அக்கறை, நெருக்கம் என எல்லாமே அந்த ஒரு கோப்பைகளில் இருந்தது. அறை அழுக்காக இருப்பதைப் பார்த்து எப்போதும் சுளிப்பது போல இன்று அவள் முகம் சுளிக்கவில்லை. மாறாக சிதறிக் கிடந்த புத்தகங்களை அடுக்கி வைத்தாள். "நீ ஏன் உன்னை இப்படி கஷ்டப்படுத்திக்கிற?" என்றாள். "இந்த உலகம் ஒரு மாயை அன்பு. இந்த அறையில் நான் அழுகிப் போவதில் என்ன தப்பு? வெளியப் போனா இரைச்சல், பொய், போட்டி. உள்ளே இருந்தால் இந்தத் தனிமை… வேகமாக உறைந்துபோவதற்கு இப்படி மெதுவாக அழுகுவது பெட்டர்ல”. அறிவு வந்தாள். அன்பின் தங்கை. ஆனால் இருவரும் அக்கா தங்கை என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஸ்ரீதேவியும், ஸ்ரீவித்யாவும் அக்கா தங்கை என்று யாராவது சொல்வார்களா? பானுப்ரியாவும் சுகன்யாவும் அக்கா தங்கை என்று யாராவது சொல்வார்களா? மெதுவாக உள்ளே வந்து, ஓரத்தில் அமர்ந்து ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தாள். கெட்ட பழக்கம் தான், அதைக்கேட்டால், “அது ஒரு கட்டமைப்பு. இயற்கையாக பிறந்து வாழ்வதே ஒருநாள் இயற்கையாக இறப்பதற்கு தானே? வாழ்வது கெட்டப்பழக்கமா?” என்பாள். புகையை ஊதிக்கொண்டே சொன்னாள், "உண்மை என்பது வெளியே இல்லை, உள்ளே இருக்கிறது. இந்த அறை ஒரு சிறை அல்ல… ஒரு ஆய்வகம். நீ உன் மந்தை மனதை அறுவை சிகிச்சை செய்து பார்க்க வேண்டிய இடம்." என்றாள். நாங்கள் மூவரும் சிகரெட் பிடித்துக்கொண்டே பேசினோம். “வாழ்க்கை ஒரு கெட்டப்பழக்கம் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது ஆனால் சிகரெட் ஒரு கெட்ட பழக்கம்” என்றேன். அன்பு எனக்குத் தலை வாரிவிட்டாள். "மானுடம் என்பது முரண்பாடுகளால் ஆனது," என்று தர்க்கம் பேசி என்னை மேலும் குழப்பிவிட்டது அறிவு. அழுகும் உடம்பையும் மனதையும் என்னையும் அவளையும் குழம்பினாள் அவள். "பசி எடுக்கும்போது ஒருவன் மிருகம், யோசிக்கும்போது ஒருவன் கடவுள். நீ இடையில் ஊசலாடிக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதன். எனது பழக்கங்களை பற்றி நீதி வழங்க நீ யார்?" என்று தொண்டையை கவ்வ வந்து கழுத்தைப் பிடித்தாள். அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தாள் அன்பு. எனக்கும் அவளுக்கும் இதுபோல் சண்டைகளே வந்ததில்லை. அவளைப்போல் ஏன் இவள் இருக்குமிடம் தெரியாமல் ஆறுதலாக இருப்பதில்லை என்று தோன்றும். அன்பு என் கைகளைப் பிடித்துக்கொண்டாள். "நாளை ஒரு புது நாள். அறையின் அழுக்கை மட்டும் அல்ல, மனதின் பாரத்தையும் துடைத்து தண்ணீர் ஊற்றி ஃப்ளோர் கிளீனர் லிக்விட் போட்டு சுத்தம் செய்வோம். நாளை முழுப்பவுர்ணமி” என்றாள். நான் அவளை முறைத்தேன். “சரி நானே செய்கிறேன். உனக்காக செய்கிறேன்” என்றாள் அன்பு. அவனுடனான சினிமா இரவுகளை அந்த குடும்பத்துக்காக விட்டுக்கொடுத்ததை விட பெரிய கொடுப்பினை அல்ல” என்று நினைத்தேன். அறிவு எனக்காக என்ன விட்டுக்கொடுத்திருக்கிறாள்? நானும் அன்பும் தான் எதையாவது இப்படி விட்டுக்கொடுத்து கொண்டிருக்கிறோம். அழகாக சிரித்தாள் அறிவு. அவளது ஒழுக்கமும் இவளது புன்னகையும் தான் எனது வாழ்வின் ரகசியம். “என்னை ஒழுக்கமாக்கி அவளை புன்னகைக்க வை. அதுதான் உன் அழுகலை தீர்க்கும் மருந்து” என்றது மனது. நாங்கள் நால்வரும் சேர்ந்து ஒரு திட்டத்தைப் போட்டோம். காலையில் எழுவது, எழுந்ததும் ஒரு நீண்ட நடைப்பயணம், பிறகு மாலைவரை பிடித்தமான வேலை. சுயபச்சாதாபம் இப்போது அறையை விட்டு வெளியேறியது. அவன் இருந்ததே எனது கண்களுக்கு தெரியவில்லை. நாங்கள் ஐந்து பேர். அன்பும் அறிவும் தந்த பத்து மடங்கு உற்சாகம் என் நரம்புகளில் ஓடியது. கமலை வைத்து இவர்கள் இயக்கும் படத்தை முதல் நாள் முதல் காட்சி திருவான்மியூர் எஸ்2 தியாகராஜா திரையரங்கில் நாங்கள் இருவரும் பார்க்கவேண்டும். இரவு 11 மணி. மின்விசிறியின் சத்தம் இப்போது ஒரு தாலாட்டு போல இருந்தது. வெளி உலகம் அமைதியானது. உள் உலகம் தெளிவானது. "உண்மை என்பது அடைவது அல்ல, உணர்வது," என்ற உலகின் கடைசித் தத்துவத்துடன் நான் கண்களை மூடினேன். நாளை காலை நான் ஒரு புதிய மனிதனாக விழிப்பேனா? இன்று காலை நான் முழித்த விழிப்புதான் எனது கடைசி விடியலா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பொறுமை. அமைதி. ஆழம். அன்பு. அறிவு. பச்சாதாபம். மனம். நான். நாம். உலகம். பிரபஞ்சம். சூனியம். ஒளி.

சோம்பேறியின் நினைவுச்சின்னம்
சிறுகதை
கேபிஆர்


  click this QR give me coffee


Comments

  1. கதைப்போக்கு அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Anna Nejama Soldran Oru எதார்த்தமான Movie paatha maari oru feel IRRUKKU anna. Romba edharthama மனசுக்கு நெருக்கமாவும்.. அதே சமயம் ஒரு நெருடலையும் இந்த கதை எனக்கு அக்காட்சி.. சில edathula ரொம்ப unar பூர்வமா antha family ah pathi na இருந்தது... Really ver very awesome..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாவுக்கப்பால் - சிறுகதை

கல்முகத்தின் காதல் - General 1925 USA